மணிமகுடம்
காட்சி 16 · 16 / 47
கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்ற கருத்தின்படியா?
இல்லை. அவர் ஒரு அரசாங்க எதிரி! அவர் பெயரை இங்கு சொன்னால்...
பரவாயில்லை.. பயப்படாதே சொல்!
அவர்... (தயங்குகிறாள்)
சொல்! எதிரியாய் இருந்தால் என்ன? மாற்றான் தோட்டத்திலே கூட மணோரஞ்சிதம் இருக்கலாம்.
அந்த மணோரஞ்சிதத்தை நான் குறிப்பிட்டால், அதிலே பூநாகம் இருக்கிறது என்றுகூட தாங்கள் தடுக்கலாமல்லவா?
பூநாகம் இருந்தால் தடுக்க வேண்டியதுதான் முறை...
பூநாகமுள்ள மலரல்ல; நான் குறிப்பிடும் பொன்னழகன்...
(திடுக்கிட்டு திகைப்புடன்) பொன்னழகனா?... அவனையா நீ காதலிக்கிறாய்? எதிரிகளின் தலைவன்... எந்த நேரத்திலும் இந்த நாட்டு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று கங்கணம் கட்டியிருப்பவன்! மக்கள் மன்றம் என்னும் ஆட்டு மந்தைக்கு அதிபதி! குருநாதர் - அமைச்சர் - கொலுமண்டபம் - அத்தனைக்கும் பகைவன்! - அந்தப் பகைவனின் பிரியை நீ! சட்டம் அனுமதிக்காது!
காதலைத் தடுக்கவும் சட்டமா?
ஆமாம்!.. காதலால் சம உரிமை என்ற பயிருக்கு வித்திடப்படுகிறது! அந்தஸ்து மாளிகை, அனாதைக் குடிசையைக் காதலிப்பதால் - சமத்துவம் என்ற குழந்தை பிறந்துவிட எதுவாகிறது! சம உரிமை - சமத்துவம் இதுபோன்ற கொடிய சம்பவங்கள் எதுவும் நிகழா வண்ணம் சீமான்கள் சபை சட்ட மூலம் கண்காணித்து வருகிறது - சம உரிமையும், சமத்துவமும் ஏற்பட்டுவிட்டால், பிறகு குருநாதருக்கு வேலை என்ன? ஆயிரக்கணக்கான பவுன்கள் செலவிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள ராணுவப் படைக்குத்தான் வேலை என்ன இருக்கிறது?
குருநாதர் மதிப்பிழப்பார் - கொலு மண்டபம் சோபை இழக்கும்!
அப்படியானால், என் வாழ்வு பாழாகத்தான் வேண்டுமா?
பரிதாபத்துக்குரிய சகோதரி... அந்தப் பொன்னழகனை நீ எங்கே பார்த்தாய்? எப்படி உங்களிடையே சந்திப்பு ஏற்பட்டது? (ஆச்சரியமாக)
அவரை நான் சந்தித்துப் பேசியதில்லை. அவர் என்னை விரும்புகிறாரா - அதுவும் தெரியாது! ஒருநாள் அவர், அப்பாவிடம் நாட்டு நிலை குறித்து விவாதிக்க வீட்டுக்கு வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் அப்பாவுடன்! அன்று கண்டேன் அவருடைய லட்சிய இருதயம் என்னைக் கவர்ந்து விட்டது!
லட்சிய இருதயம் - அரசாங்கத்திற்கு விரோதமாக அமைச்சர் வீட்டிலேயே ஆபத்து அரும்புகிறது! (உலவிக் கொண்டே சிந்திக்கிறான்.) இதை நான் அனுமதிக்க முடியாது!... உடனே தடுக்கிறேன்! (உலவுகிறான்)
அரசே...!
இங்கு நிற்காதே.. போய்விடு!
(அரசன் உள்ளே போய்விடவே கலாராணியும் வெளியேறுகிறாள், கலக்கத்துடன் மீண்டும் அரசன் வெளியே வந்து)
உலகப்பா!
(வந்தபடி) இதோ இருக்கிறேன்.
உலகம்! எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாயா?
ஆமாம்!
உடனே போ! கலாராணி... தோட்டத்து வழியாகத்தான் போவாள் - நமது ஆட்களை விட்டு அவளை தூக்கிவரச் சொல்!
உத்திரவு!
மயக்க மருந்தையும் எடுத்துப் போ! நந்தவனத்துப் பளிங்கு மண்டபத்திலே அவளை வைத்து விட்டு உடனே வந்து என்னிடம் சொல், ஓடு!
(உலகப்பன் ஓடுகிறான், அரசன் யோசித்தபடி உலவுகிறான்)
(தோட்டத்தில் வஞ்சி மாலை கட்டிக் கொண்டிருக்கிறாள்)
“யார் அது?”
(என்று கேட்டுக் கொண்டே, மெய்க்காப்பாளன் உலகப்பன் அங்கு வருகிறான். திடுக்கிட்ட வஞ்சி பேசாமல் நிற்க)
இந்த நேரத்திலே இங்கே யார் என்று கேட்டால் பதில் சொன்னால் என்ன? ஊமையா... செவிடா... பேயா... பிசாசா?
(கோபமாக) நிற்பது கண் தெரியவில்லையா?
நீ என்ன நிலவா... இருட்டிலேயும் தெரிவதற்கு?
