உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 14
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 14 · 14 / 47

ஏன் அப்பா ஆயிரம் விளக்கம்? மக்களின் மதிப்பைப் பெற்று வாழ வழியில்லை; மக்களை வைத்து மந்திரி பதவியை காப்பாற்றிக் கொள்ள திட்டம் போட்டு விட்டீர்கள்.. அவ்வளவுதான்!

(கோபமாக) கலாராணி! என்ன சொன்னாய்...?

பாடையில் ஏறும் வரையில் தனியாக உங்கள் பதவி மோகத்துக்கு, நான் பலியாக வேண்டும் - சரி, நான் தயாராக இருக்கிறேன், அரசருக்கு சம்மதம்தானா?

அவருக்கு எண்ணமில்லாமலா என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘கலாராணி செளக்கியமா? கலாராணி செளக்கியமா?’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நீ போய் அவரைப் பாரம்மா - எல்லாம் நன்மையாக முடியும்.

இதோ போகிறேன் - வஞ்சி நீயும் வா என்னோடு அரண்மனைக்கு! (படபடப்போடு அழைக்கிறாள்)

போய்வா மகளே; பூரிப்போடு போய்வா!

(அரண்மனையின் பின்புறமுள்ள தோட்டம் - இரவு நேரம் - கலாராணியும் வஞ்சியும் அந்த வழியே வருதல்)

வஞ்சி! நீ இங்கேயே இரு. நான் போய் அரசரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.

நான் காத்துக் கொண்டிருப்பேனே என்ற கவலையில், சீக்கிரம் ஓடிவர வேண்டாம், பேச்சைக் கூட முடிக்காமல்! நான், இங்கே - மயில், குயில், மாம்பழம், பூஞ்செடி, இவைகளோடு பேசிக் கொண்டிருக்கிறேன்; நீ நிதானமாக நல்ல முடிவோடு வா!

நல்ல முடிவுடன்தான் போகிறேன் - நல்ல முடிவோடு வரமாட்டேனா?

ஆமாம் அதை மறந்து விடாதே; விஸ்வாமித்திரனை வென்ற மேனகையைப் போல நீயும் வெற்றி புன்னகையோடு திரும்பி வா - உனக்கு அணிவிக்க, நான் இங்கே மலர் பறித்து வெற்றிமாலை தயாரிக்கிறேன். நீ வரும் வரை எனக்கும் வேலை வேண்டுமே - கலா! போனவுடனே அரசிடம் சகஜமாகப் பேசி விடாதே! முதலில் அரசருக்குரிய மரியாதையோடு வணங்கு! வணங்கும் போதே கண்களால் அவரை வளைத்து விடு! உன் காந்தள் விரல்களின் அழகு தெரியும்படி, கைகூப்பி வணங்கு!

இரவு நேரம் முகம் தெரியாத முறையில் நின்று விடாதே, முழுமதி போன்ற இந்த முகம் பிரகாசமாகத் தெரியக் கூடிய விளக்கின் அருகே நின்று கொண்டுபேசு!... இடையிடையே பார்வையை வீசு! பிறகு அரசர் உனக்குத் தூசு!

நீ, பாடம் சொல்லித் தருகிறாயா?

காதல் அரிச்சுவடி கலா! ஏன் சொல்லாமலே உனக்குத் தெரியுமா?

எனக்கு ஒரு சுவடியும் வேண்டாம் - நீ எங்கும் போய் விடாதே - இரு, இதோ வந்து விடுகிறேன்.

(கலா போகிறாள் - வஞ்சி, மலர் பறிக்கிறாள், மாலை தொடுக்க)

(அரசன் மாளிகை, மெய்க்காப்பாளன் உலவிக் கொண்டிருக்கிறான், அங்கே கலாராணி வருகிறாள்)

வாருங்கள், என்ன வேண்டும்... தங்களுக்கு?

அரசரைப் பார்க்க வேண்டும்... இப்போது பார்க்க முடியுமா என்று...

இருங்கள்.. போய் தெரிவிக்கிறேன்...

(கலாராணி உட்கார்ந்திருக்கிறாள்... அரசன் வர நேரமாகிறது - மெய்க்காப்பாளன் வருகிறான், திரை விலகுகிறது)

சந்திக்க சம்மதம் தெரிவித்தார்... இப்போது வருவார்.

(மெய்க்காப்பாளன் உள்ளே போகிறான். கலாராணி நீண்ட நேரம் காத்திருக்கிறாள். எழுந்து உலாவுகிறாள். அங்குள்ள சித்திரங்களை ரசிக்கிறாள். அரசன் வரும் வாயிற்புறத்தின் திரையை நோக்கி நிற்கிறாள். மீண்டும் உட்காருகிறாள். கடைசியில் வாயிற்புறத்தில் திரை விலகுகிறது. அரசன் வருகிறான். கலாராணி மரியாதையுடன் வணங்குகிறாள்)

கலாராணி நலந்தானே?

தாங்கள் ஆசியால் நலமேதான்.

இந்த நேரத்தில் இவ்வளவு அவசரமாக என்னைப் பார்க்க வேண்டிய காரணம்?

தனித்து சில விஷயங்கள் பேச வேண்டும்.

(மெய்க்காப்பாளனைப் பார்த்து) உலகப்பா! நீ கொஞ்சம் ஒதுங்கி இரு!

(மெய்க்காப்பாளன் அகலுகிறான்)

கலாராணி! இனி தாராளமாகப் பேசலாம்!

என்னுடைய திருமணத்தைப் பற்றி ஒரு முடிவு செய்வதற்காக இங்கு வந்தேன்.

புரியும்படிச் சொல்!

ஒன்று கேட்கிறேன்; ஆத்திரப்படக் கூடாது!