மணிமகுடம்
காட்சி 13 · 13 / 47
அதற்காக, கரும்பாம்பு என்கிறாயா என்னை..?
நெளிவைச் சொல்லுகிறேன்.
ஏன் முல்லைக்கொடி என்று சொன்னால்...?
மூவாயிரம் வருஷமாக அதைத்தான் சொல்கிறார்கள்... அதுவுமல்லாமல் முல்லைக்கொடி ஒரே இடத்தில் நின்று தான் காற்றில் ஆடும். நெளியும்! பாம்போ பல இடங்களில் ஆடும் -நெளியும் நகரும்...
சீ!
சீறும்..!
(சிரித்தபடி) விஷமக்காரியடி நீ.. வஞ்சி! என்னுடைய ஆட்டத்தை அவர் பார்த்தால்...?
தன் தோட்டத்து மயிலாக்கிக் கொள்வார்!
ஆடல் பாடல்களில், அவர் ரசிகரோ இல்லையோ தெரியாது...
ரசிகர் இல்லாவிட்டால் ரசிகராக ஆக்குவது! அதோ - தாமரைத் தடாகத்திலே இரண்டு மீன்கள் துள்ளுகின்றன. அவைகளுக்கு அவர் தூண்டில் போடாமல் இருப்பாரா?
என்னடி பிதற்றல்? தாமரைத் தடாகமாவது,... இரண்டு மீனாவது?
ஆமாம் உன் முகத்தையும், முகத்திலிரண்டு கண்களையும் சொன்னேன்... கவிதை நடையில்!
அடா அடா...ஏய் வஞ்சி! உன் கவிதைத் தலைவலியைக் கொஞ்சம் நிறுத்தேன்!
நிறுத்திவிட்டு, வேறு எதை ஆரம்பிப்பது?
வஞ்சி! அவரும் நானும் சந்திக்கவே முடியாத தூரத்தில் இருக்கிறோம்; இருவரும் இரு துருவங்கள்...
சந்திப்பதா பெரிய காரியம்? இப்போது வந்தாலும் அவரை சந்திக்கலாம்.
எங்கே?
அரண்மனையில்...
அரசரைச் சொல்லுகிறாயா (கோபமாக)
நீ யாரைச் சொல்லுகிறாய்...
நான் அவரைச் சொல்லுகிறேன்...
அவர்.. அவர் நல்ல அவர்! ‘கலாராணி! உன்னுடைய அந்த ‘அவர்’ யார் என்றுதான் என்னிடம் சொல்லவேன்...
இன்று, அவர் யார் என்று உன்னிடம் சொல்லத்தான் போகிறேன்.
சொல்லு!
சொல்கிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனை - நான் அவர் யார் என்று சொன்ன பிறகு, நீ மறுபடியும் அரசரைப் பற்றிய பேச்சை என்னிடம் எடுக்கவே கூடாது! நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்; எனக்கு அரசர் மீது சிறிதும் விருப்பமில்லை.
(அமைச்சர் குணசீலர் வந்து கொண்டே)
ஏனம்மா, விருப்பமில்லை? அரசன் என்ன அவ்வளவு கோணமா? அலங்கோல புருஷனா?
அப்பா.. (ஏதோ சொல்ல முயல)
நானும் எத்தனையோ நாட்களாக முயலுகிறேன் - முயலுகிறேன் - நீ என் ஆசையையே அலட்சியப்படுத்துகிறாய் கலாராணி! உன் தந்தையின் அதிகாரமும், இந்த மந்திரி பதவியும் நிலைக்க வேண்டுமானால் நீ அரசனைத் திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும்?
முடியாதப்பா...
கட்டளையிடுகிறேன் அடங்கி நட! கலாராணி! வருத்தப்படாதே! இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையில் நீ அரசனைத் திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும் - அரசன், என்னையும் மீறுகிற ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அரசனுக்கும் நமக்கும் உறவு ஏற்பட்டு விட்டால் - பிறகு யார் தயவும் எனக்குத் தேவையில்லை. இப்போது இந்த மந்திரி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, சீமான்களுக்கு தலையாட்ட வேண்டியிருக்கிறது - குருநாதருக்கு கொடிபிடிக்க வேண்டியிருக்கிறது - பத்திரிகாசிரியனிடம் பல் இளிக்க வேண்டியிருக்கிறது!
அரசன் என்னுடைய மருமகன் ஆகிவிட்டால் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லையல்லவா நான்? பிறகு சீமான்களும் குருநாதரும் என் காலடியில் தானே கிடப்பார்கள்?
