மணிமகுடம்
காட்சி 10 · 10 / 47
செளக்கியந்தான் அரசே! தங்களைப் பார்க்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டேயிருந்தாள்.
அப்படியா? ம்! ராஜரீகங்கள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது... சீமான்கள் சபையில் ஏதாவது புதிய தீர்மானங்கள் உண்டா...?
உண்டு! அதில் கையெழுத்து பெறுவதற்காகத்தான் வந்தேன்!
என்ன தீர்மானம்?
தேவாலயம் ஒன்று கட்டுவதற்காக...
கட்டவேண்டியதுதான்! சிலாக்கியமான காரியம்... மக்களுக்கு உடனடியாக தேவை தேவாலயம்தான்! இந்த திவ்யமான யோசனைக்கு சொந்தக்காரர் யார்?
குருநாதர்தான்!
அதுதானே பார்த்தேன்; வேறு யாரும் ஆண்டவனுக்குத் தேவையான அவசிய விஷயங்களை உணர முடியாதே, - சபாஷ்! தேவாலயம் கட்டுவதென்றால், திரவியம் அதிகம் வேண்டுமே!
பொக்கிஷத்திலே கொஞ்சமிருக்கிறது; போதா விட்டால், தேவாலய வரி ஒன்று விதிக்கவும் உத்தேசம்!
உத்தமம்!...அமைச்சரே!... ஏதோ ஒரு ஆற்றில் அணைக்கட்டு இல்லாத காரணத்தால் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு, ஜனங்களுக்கும், கிராமங்களுக்கும் சேதம் ஏற்படுவதாகச் சொல்லப்பட்டதே, அது கவனிக்கப்பட்டு விட்டதா?
இல்லை.
ஆமாம், அது இப்போது அவசரமில்லை - தேவாலயம் கட்டி, ஆண்டவனைத் திருப்திப் படுத்தினால் அவரே கூட வெள்ளத்தைத் தடுத்து, ஆற்றையும் வற்ற வைத்துவிடுவார்! சரி.. அமைச்சரே! தேவாலயம் எந்த இடத்திலே?
கொடிக்கால் நகரத்திலே.
அந்த நகர மக்கள்!
நகரைக் காலி செய்து விட்டு, அங்கே ஆலயம் கட்டுவதாகத் தீர்மானம்!
ஓகோ, மனிதர்களை விரட்டி விட்டு, மகேஸ்வரனுக்கு மாளிகை கட்டுவதாகத் தீர்மானம்!
அரசே!.. (சற்று வியப்புடன்)
தீர்மானத்தில் நான் கையெழுத்துப் போட வேண்டுமாக்கும்?
ஆமாம்! அதற்குத்தான் வந்தேன்... (புத்தகத்தை நீட்டுகிறார்)
(வாங்கியபடி) நான் கையொப்பமிடா விட்டாலும் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவர, அமைச்சருக்கு விசேஷ அதிகாரம் இருக்கிறதே!
இருந்தாலும் - சீமான்கள் சபை, தங்கள் கையெழுத்தில்லா விட்டால்...
அமைச்சரே! குறிப்பிட்ட இந்த தீர்மானத்தில் என் கையெழுத்து வேண்டாம். முடியுமானால் இந்த தீர்மானத்தைத் திரும்பப் பெற முயலுங்கள்!
சபை நிறைவேற்றி விட்டதே; திரும்பப் பெற்றால் அவமானமல்லவா அரசே!
அப்படியானால் அமைச்சரின் விசேஷ அதிகாரம் பயன்படுத்தும்... நான் கோயில் கட்டும் தீர்மானத்தில் மட்டும் கையெழுத்திட மாட்டேன்... மற்றவைகளில் கையெழுத்திடுகிறேன்.
(என்று கூறி மற்ற தீர்மானங்களில் கையெழுத்திடுகிறார்)
தயவு செய்து இந்த தீர்மானத்திலும்...
வேண்டாம்! என் கையெழுத்தை களங்கப்படுத்திக் கொள்ள மாட்டேன்... விளக்கம் கேட்கிறீர்! விசேஷ அதிகாரத்தை உபயோகித்து, கோயிலைக் கட்ட முடியும்!
(அரசன் உள்ளே போய்விடுகிறான் - மெய்க்காப்பாளனும் போகிறான், அரசனுடன். அமைச்சர் ஆழ்ந்த யோசனையுடன் நிற்கிறார்)
(தனக்குள்ளாக) “கையெழுத்துப் போட வில்லை! விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி!” இப்போது அரசனிடம் கோபித்துக் கொண்டால், கலாராணி விஷயம் வெற்றிகரமாக முடியாது! அதற்காக கோயில் தீர்மானத்தையும் கைவிட முடியாது! சரி, அரசன் கையெழுத்திட்டு விட்டதாகவே பொய்ப் பிரச்சாரம் செய்கிறேன். இருக்கவே இருக்கிறது - ‘மக்கள் தொண்டன்’ பத்திரிகை! வேறு வழி இல்லை..! வழியே இல்லை..!
(அப்போது மெய்க்காப்பாளன் வந்து)
வழி ஏன் இல்லை? பிரபு இதோ இருக்கிறதே வழி - வெளியே போகத்தானே பிரபு?
