உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 21
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 21 · 21 / 23

(எதிரே ஒரு ஆள் மேலே அண்ணாந்துதாவியபடி விடாதே விடாதே என்று ஓடிவந்து, தசாவதாரத்தின்மீது விழுகிறான். அவன் பேர் ராமு.)

தசா:— ஏ, ஏ, என்னப்பா மேல பார்த்துகிட்டே வந்து ஆள்மேல விழுறே?... ஆங்?

ராமு:— ஓட்டல்... தோசை கொண்டாந்து வச்சான்... மேலே பேன் போட்டது தான் தாமதம்... பறக்க ஆரம்பிச்சிட்டுது தோசை... அதைப் பிடிக்கத்தான் ஓடு...

தசா:— கவலைப்படாதே... நம்ப சோஷலிச மாநாடு முடியட்டும்... தோசை யெல்லாம் பறக்காது... அப்புறம் மனுஷன்தான் பறப்பான்; வானவெளிக்கு. ராக்கெட்டில்லி...

(கோவிந்தன், ரேஷன் கார்டுகளைத் தின்றுகொண்டு வருகிறான்.)

தசாவ:— இது என்னப்பா... அட்டையைத் தின்னுகிட்டு?...

கோவி:— அட்டையா இது?... ரேஷன் கார்டுய்யா!... கார்டை கொடுத்துட்டாங்க... அரிசியும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை; கார்டையாவது தின்போம்னு திங்கிறேன்...

தசா:— ஏ... ஏ... பாவி! எல்லாம் மகாநாட்டுக்கு வாங்கப்பா; சோஷலிசம் வரப்போவுது... அப்புறம் கார்டை திங்க வேண்டியதில்லை.

கோ:— பிறகென்ன எலியைத் திங்கலாமோ?... அதுக்கு அப்புறம் பூனையைத்திங்கச் சொல்லுவே!

தசா:— அடஅசடே!... எலியைத் தின்னா பூனையைத்திங்காம இருக்கலாமோ?... எலிமாத்திரம் வயத்துக்குள்ளே போனா... அங்கபோயி திருட ஆரம்பிச்சிடும்... அதை விரட்டிப் பிடிக்கப் பூனையை அனுப்ப வேண்டாமோ?... எலியைவிரட்டப் பூனை... பூனையை விரட்ட நாய்... நாயை விரட்ட மனுஷன்... சரி... சரி... வாங்க எல்லாம் மகாநாட்டுக்கு... வாங்க... வாங்க...

(பரதேசியைத் தரகன் இழுத்துப் போதல்)

தசாவ:— ஏ, ஏ, எங்கப்பா அந்த பரதேசிக்கிழவனை இழுத்துக்கிட்டு போறே...

தரகன்:— சும்மா இல்லை... முப்பது ரூபா கொடுத்திருக்கிறேன்... குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனுக்காக...

தசா:— ஆகா, அறுபது வயதுப் பரதேசி... குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்கிறான்... எல்லோரும் வாருங்கள் மகாநாட்டுக்கு, இந்தக் கண்காட்சியை மக்கள் பார்க்கட்டும்... காங்கிரஸ் சோஷலிசத்தின் குடும்பக் கட்டுப்பாடு படி அமுலாகிறது பார்த்தீர்களா?...

(ஓடிவந்து...)

கிருஷ்ணன்:— அமுல்! அமுல்! அமுல் எங்கே கிடைக்கிறது... குழந்தை உணவு அமுல் எங்கே கிடைக்கிறது... சொல்லுங்கள்...

தசா:— ஆங்... எங்க மகாநாட்டிலே கிடைக்குது... எல்லாரும் வாங்க... பரவாயில்லை; கூட்டம் ஒருமாதிரி சேர்ந்து போச்சு!

(போகிறார்கள்)

(திரை)

மகாநாடு:

(திரவியம்பிள்ளை, தசாவதாரம், கண்ணன் ஆகியோரும் கூட்டத்தினரும்)

(ஆர்ப்பாட்டமாக எழுந்து திரவியம்பிள்ளை வருகிறார். மாலை சூட்டப்படுகிறது)

திரவியம்:— மகாஜனங்களே! சகோதர, சகோதரிகளே! ஜனநாயக சோஷலிசத்திற்கு முக்கியமான தேவை... திட்டம்... ஐந்தாண்டுத் திட்டம். திட்டம்... இல்லா விட்டால் நம்மைப் போன்றவர்கள் வாழ முடியாது... ஐந்து என்பது இந்தியாவுக்கே ஒரு தனியான நம்பர்! பஞ்ச பூதம் ஐந்து—ஐம்புலன் ஐந்து! பஞ்ச பாண்டவர் ஐந்து—நேருவின் பஞ்ச சீலம் ஐந்து! எல்லாத்தையும் விட விசேஷம்... சாதனுடைய கை கால்களிலே விரல்கள் அஞ்சு...

தசா:— மனித அறிவே கூட அஞ்சு தானுங்களே...

திர:— யோவ்... அது நாலுய்யா... ஆதலாலே மகா ஜனங்களே! நம்ப நாட்டுக்குப் போடப் பட்ட திட்டமும் அஞ்சாண்டுத் திட்டம்... இந்த ஐந்தாண்டுத் திட்டம் பணக்காரன் வீட்டுக் கதவைத்தான் தட்டுச்சு... ஏழை வீட்டுக் கதவைத் தட்டவே... அப்படின்னு சில பேரு பேசுராங்க... ஏழை வீட்டுக்குக் கதவு ஏது; இருந்தாவுல்ல தட்டுறதுக்கு!... பணக்காரன் வாழ்ந்தாதான் ஏழை வாழமுடியும்... ஒரு உதாரணம் சொல்றேன்... ஆத்துல தண்ணீர் நிறையப்போனாத்தானே வாய்க்காலில் தண்ணி வரும்...

பணக்காரன் ஆறு மாதிரி... ஏழை, வாய்க்கால் மாதிரி... சோஷலிசத்தைக் கேட்டுட்டு முதலாளிகளோ நிலப்பிரபுக்களோ பயப்படவேண்டியதில்லை. அதை விளக்கிப் பயத்தைப் போக்கத்தான் இந்த மகாநாடு... இதில்...

திர:— என்னைவிட விளக்கமா... நம்ப கண்ணன் பேச இருக்கிறாரு... அவர்... இனிமே தீவிர சோஷலிசம் எல்லாம் பேசுறதை விட்டுட்டு... நம்ப ளோடசேர்ந்து காங்கிரஸ் வெற்றிக்கு உழைக்கப் போராரு... நம்ப தலைவர் காமராசரே; தர்மகர்த்தா சோஷலிசம் போதும்னு சொல்லிட்டாரே... பணக்காரர்கள்... அதாவது நாங்கள்லாம் தர்மகர்த்தா மாதிரி நடந்துக்கணும்... தர்மகர்த்தா, எப்படி நடப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியும்... பணக்காரனை ஒழிப்போம்னு சொல்லலாமே தவிர...

முடியுமா?... “பணக்காரர்களே! கொஞ்சம் விட்டுக்கொடுங்க” அப்படின்னு கெஞ்சிக் கேக்கிறதுதான் காங்கிரஸ் சோஷலிசம்; நமக்கேத்த சோஷலிசம்!... இல்லேன்னு பட்டக்காரரு—செட்டி நாட்டாரு—பொள்ளாச்சியாரு—வட பாதிமங்கலத்தாரு—வாண்டையாரு—வகீசனாரு—மூப்பனாரு—உடையாரு—இப்படிப் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள், பஸ் முதலாளிகள், ஆலை அரசர்கள், நிலப்பிர புக்கள் எல்லாம் காங்கிரசில் இருப்பாங்களா?

எது எப்படியிருந்தாலும் ஏழைகளுக்காகப் பாடுபடு கிற ஒரே கட்சி காங்கிரஸ்தான்...

இப்பக் கூட அஞ்சாறு பெரிய கம்பெனிகளுக்கு ஒரு கோடி ருபாய்வரையில் நிலவரியை ரத்துச் பண்ணியிருக்கிறோம்...

விவசாயிகளுக்கு நில வரியை ரத்துப் பண்ணக் கூடாதான்னு கேப்பான்... மனுஷனுக்கா வரி? நிலத்துக்குத்தானே? அதைப் போயி ரத்துப்பண்ணச்சொல்லிமனுஷன் கேக்கிறது நியாயமா?...

விலைவாசி ஏறிட்டு துன்னு சொன்னா... என்ன அர்த்தம்? மக்களுக்கு வாங்குற சக்தி அதிகமாயிட்டுது! அரிசி கிடைக்கலே! ஒரே கூச்சல்! எப்படிக் கிடைக்கும்? நாட்ல; வருஷத்துக்கு ஒரு கோடி பிள்ளை அதிகமாகப் பிறக்குது...

தசா:— அதே மாதிரி சாவுற கணக்கும் இருக்குல்லே!