உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 20
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 20 · 20 / 23

மரக:— அவர் பேசுகிற தமிழ் கெடாது! ஏனெனில் அது ஏற்கனவே கெட வேண்டிய அளவுக்குக் கெட்டுப்போய்விட்டது... நான் சொல்வது... சிலப்பதிகாரத் தமிழ்—சிந்தாமணித் தமிழ்—திருக்குறள் தமிழ்—மணிமேகலைத் தமிழ்—அகம்—புறம்—கலித்தொகை, கலிங்கத்துப்பரணி, ஆகிய இந்தத் தமிழ் கெடும்—தமிழர், மூன்றாந்தர மக்களாக, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப் பிரதேசத்து மக்களுக்கு அடிமைகளாவார்கள்... இந்தத் தீமையைத் தடுக்கத்தான்...

தீக்குளித்துச் செத்தார்கள்... சுடப்பட்டுப் பலர் மாண்டார்கள்... பிஞ்சுக் குழந்தைகளின் பிராணன் பறிக்கப்பட்டது... மாணவமணிகள் ரத்தத் தடாகத்திலே மலர்களாக மிதந்தார்கள். ஏன்; உங்கள் ஆருயிர் அன்னையின் பூவும் பொட்டும் புனித மிகு மாங்கல்யமும் போனது எதனால்? இந்தியினால்! இந்தியினால்!! தமிழ் நாட்டில் தாவி வந்த அந்த மந்தியினால்! மந்தியினால்!! இந்தி! அது தமிழர்வாழ்வை சுட்டுப் பொசுக்கும் செந்தீ! தமிழை அழிக்க வரும் பெருந்தீ!...

அதை அணைப்பது தமிழன் கடமை!... இனியும் வாளாவிருப்பது... மடமை! மடமை!!

கண்:— மரகதம்! போதும்... போதும்... என் கண்களைத் திறந்து விட்டாய்... மரகதம்!

மரக:— உண்மையாகவா?...

கண்:— ஆமாம்... என் பொது வாழ்க்கையிலே ஏற்பட்ட தொய்வு இன்றோடு முடிவு பெறுகிறது... இந்தக் கணம் முதல் மறுமலர்ச்சி பெற்ற உள்ளத்தோடும்—புதிய உற்சாகத்தோடும்—திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன்... மரகதம்! நீதான் என் வாழ்வுக்கு வழிகாட்டிய சகோதரி... என் தாய் காவேரிக்கு இரண்டு பிள்ளைகள்... நான் மூத்தவன்—நீ இளையவன்.

மரக:— இதைக் கேள்விப்பட்டால் அம்மா ரொம்ப மகிழ்ச்சி அடைவார்கள்... அடேடே... அப்பாவும் தசாவதாரமும் வர்ராங்க... அண்ணா! ஒரு ரகசியம் சொல்றேன்... அது மாதிரி நடந்துக்கிங்க...

(காதில் ஏதோ சொல்லி விட்டுப்போகிறாள்)

தசாவ:— என்ன கண்ணா... ரொம்ப நேரமாயிட்டுது மன்னிச்சுக்க...

கண்:— பரவாயில்லை...

திரவிய:— கண்ணா!... எல்லாம் தசாவதாரம் சொன்னார்... ரொம்ப சந்தோஷம்... அடுத்தவாரம் காங்கிரஸ் ஜனநாயக சோஷலிச மாநாடு... என் தலைமையில் தான் நடக்குது... தசாவதாரம்தான்... திறப்பாளர்... நீதான் பிரதம பேச்சாளி... அதுதான் நம்ப தேர்தல் வேலை துவஜாரோகணம் மாதிரி... எல்லா வேலையும் நீதான் கவனிக்கணும்... பணம் போதுமா... மேலும் வேணுமா?...

கண்:— அப்பறம் வாங்கிக்கிறேங்க...

திரவி:— சரி... உன்னை நம்பித்தான தேர்தல்ல நிக்கிறேன்... மகாநாடு... வெற்றிகரமா நடக்க...

கண்:— நடக்கும் பாருங்க... அண்ணையிலிருந்து ஒரு பெரிய திருப்பமே ஏற்படும் தேர்தலில்!

திரவி:— ஏற்படட்டும்—ஏற்படட்டும் திருப்பம் ஏற்படட்டும்—ஓய் தசாவதாரம்... கண்ணனைக்கவனியும்... சாப்பாடு ரெடியாகட்டும்... மரகதம்! மரகதம்!!

(உள்ளே போகிறார்)

தசாவ:— என்ன கண்ணா? மரகதம் மனசை மாத்துனியா?...

கண்:— மனசு மாறிட்டுது!

(இறைந்து கிடக்கும் மலர்களை எடுத்து வியப்புடன்)

தசாவ:— ஏம்ப்பா... என்னா இது... பூக்கள் இறைஞ்சு கிடக்கு...

கண்:— உங்கள் சந்தேகப் புத்தி உங்களை விட்டுப் போகாதே... அக்காள் தங்கை அம்மா மகள் இதுக்கெல்லாம் வித்தியாசம் தெரிஞ்சுக்க அய்யா! வாயில் வந்தபடி பேசாதே! வர்ரேன்...

(போகிறான்)

தசாவ:— எப்பா! மகாநாடு... மகாநாடு...

(திரை)

ரோடு

(ஒலிபெருக்கி அறிவிப்பு...)

“காங்கிரஸ் ஜனநாயக சோஷலிச மாநாடு... தீவிரத் தியாகி திரவியம் பிள்ளை தலைமையில்... சமதர்ம ஜோதி தசாவதாரம் திறந்து வைப்பார்... தேர்தல் பிரச்சாரத்தை பிரபல பேச்சாளி கண்ணன் தொடங்கி வைப்பார்... ஜனநாயக சோஷலிச மாநாடு... ஊர்வலத்தில் ஆயிரம் பஸ்கள்... ஐநூறு லாரிகள்... இரண்டாயிரம் மோட்டார்கள்... அணிவகுத்து வரும்... காண வாரீர் காங்கிரஸ் சோஷலிச மாநாடு... சோஷலிச மாநாடு...”

(ஒலி நின்றதும்... தசாவதாரம்... கம்பீரமாக அந்தப் பக்கம் வருகிறார்... பின்னால் ஒரு ஆள் காங்கிரஸ் கொடிபிடித்து வருகிறான்... தசாவதாரம் கழுத்தில் மாலையிருக்கிறது...)

தசா:— ஆகா! மகாநாட்டுத் திறப்பாளரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விட்டீர்களே... நீங்கமாத்திரம்தான் வந்தீங்களா... வேற ஒருத்தரும் வல்லியா?...

கொடிக்காரர்:— நிறையப்பேரு வந்தாங்க... எல்லாரும்... அந்த சினிமா நடிகையை வரவேற்கப் போய்ட்டாங்க...

தசா:— போகட்டும்... போகட்டும்... தலைவரை வரவேற்கவாவது ஒரு நாலுபேர்...

கொடி:— நாலு பேரு போதுங்களா?...

தசா:— கூட ஒரு ஆள் போங்களேன்...