காகிதப்பூ
காட்சி 2 · 2 / 23
வணக்கம், வாம்மா...
இவ...மாலா......என் கல்லூரித் தோழி......
(மாலா வணங்குதல், காலில் விழுதல்......)
எழுந்திரம்மா...என் காலில் விழுவதா?...நான் எவ்வளவோ பாபம் செய்தவள்......
பாபமா?...
ஆமாம்...இதோ பார்; நான் புண்ணியம் பண்ணியிருந்தா அவருக்கு முன்னேயல்லவா போயிருப்பேன்......
என்னம்மா; கவலைப்பட ஆரம்பிச்சுட்டீங்களா?......
இல்லை மரகதம்...நான் எப்படிக் கவலைப்பட முடியும்? கண்ணீரும் வற்றி விட்டது...உள்ளமும் மரத்துப் போய் விட்டது......தமிழ் காத்த வீரமறவர் வரிசையிலே புகழ்க்கிரீடம் அணிந்து கொண்டு அவர் புன்னகை புரிகிறார். அவரை நினைத்து நினைத்து நான் பெருமைப்படுகிறேன்...
அம்மா! உங்கள் கணவர் அணிந்திருக்கும் புகழ்க் கிரீடத்துக்கான பொன்னை; உங்கள் தாலியிலிருந்தல்லவா தந்திருக்கிறீர்கள்... நீங்கள் குடியிருந்த முல்லை மொட்டுக்களையல்லவா, அந்தக் கிரீடத்தின் முத்துக்களாகப் பதித்திருக்கிறீர்கள். அந்த மகுடத்தில் மின்னும் ரத்தினம்; தாயே உங்கள் குங்குமப் பொட்டல்லவா?...
மரகதம்! உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் வடிக்கின்ற அனுதாபக் கண்ணீர்; அடக்குமுறை வெறியர்களை அழிக்கின்ற கண்ணீராக மாறட்டும். நானிழந்த மஞ்சளும் குங்குமமும்... மமதை கொண்டலையும் தமிழ்ப் பகைவர்களின் நெஞ்சழுத்தத்தைச் சுட்டுப் பொசுக்கட்டும்......
அம்மா!... அது நடந்தே தீரும்! அரசு அன்றுகொல்லும். தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் யாரம்மா?...தெய்வம் அழுது கொண்டிருக்கும் ஏழைமக்களின் எரிமலை உள்ளந்தானம்மா; அழிவுக் கடவுள்!...அவர்கள் சிரிப்புத்தானம்மா ஆக்கக் கடவுள்!...அவர்களின் கடமையுணர்வு தானம்மா காக்கும் கடவுள்!... இதை உணராத உன்மத்தர்களுக்கு உடனடியாகப் பாடங் கற்பிக்க உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கவே இப்போது வந்தேன்.
என்ன மரகதம்?
தங்களை இந்தக் கோலத்திற்கு ஆளாக்கியவர்களுக்கு அறிவு புகட்ட... அடுத்து வருகிற தேர்தலில்...ஜனநாயக நெறியில்...வெற்றி காணவேண்டும்......
அதற்கு?...
இந்தத் தொகுதியில் தாங்கள் போட்டியிட வேண்டும்;
என்ன....தேர்தலா?...
ஆமாம் ... தமிழ் காக்கும் மானப்படை மறவர் முகாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாங்கள் போட்டியிட வேண்டும்......
மரகதம் ?
எங்கள் மாணவர் உலகம் உங்கள் பின்னால்! ... ...இரக்கமுள்ள இதயங்கள் அத்தனையும் உங்களை ஆதரிக்கும்! இந்தி எதிர்ப்பின் சின்னம் அம்மா தங்களின் வெற்றி! தயங்காமல் ஒத்துக் கொள்ளுங்கள் ...
(கெஞ்சுகிறாள்)
வேடிக்கையான பெண்... இந்தத் தொகுதியில் ஆளுங் கட்சியின் சார்பாக உங்க அப்பா நிற்கப் போகிறார். அவருக்கு நான் போட்டியா?...
எங்கள் அப்பாவை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டேனே; எத்தனை லட்சம் செலவழித்தாலும் இந்தத் தடவை கட்டிய முன்பணம் வராது என்று!
அம்மா! உங்களை நான் ஒத்துக்கொள்ளச் சொல்வது; பதவியில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல தமிழை அழிக்க வரும் ஆபத்தைத் தமிழகம் முழு மூச்சோடு எதிர்க்கிறது என்பதை உலகத்திற்கு உணர்த்துவதற்காக!....
இப்போது நான் உன் கோரிக்கைக்கு இணங்க வேண்டும் இல்லையா?....
ஆமாம்....
அதற்கொரு நிபந்தனையிருக்கிறது; அதை முதலில் நிறைவேற்று....... அதன்பிறகு உன் அன்புக் கட்டளைக்கு நான் கட்டுப் படுகிறேன்...
என்னம்மா?
என் மகன் கண்ணனைத் தெரியுமல்லவா?...
நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்....அறிமுகமில்லை....அவர் தீவிரமான காங்கிரஸ் தியாகியாயிற்றே...
இந்தக் குடும்பமே அப்படித்தானேயம்மா; கண்ணனின் அப்பா (படத்திடம் போய்) காந்திமகானின் உப்புச் சத்தியாக் கிரகத்துக்குப் போனவர்... கள்ளுக் கடை மறியல் செய்த போது கர்ப்பவதியாக இருந்த நானும் அவரும் ஒரு வருடம் சிறையில் அடைபட்டோம்...... கண்ணன் பிறந்ததே சிறையில்தான்!
ஆயர்பாடிக் கண்ணன் கூட சிறையில் தான் பிறந்தான்...
