காகிதப்பூ
காட்சி 1 · 1 / 23
காகிதப்பூ
ஓரங்க நாடகம்
கலைஞர் மு. கருணாநிதி
[மாணவர் மன்றம் கூடியிருக்கிறது. மாணவ மாணவியர் நிறைந்து இருக்கின்றனர். மாணவி மரகதம் பேசுகிறாள்.]
வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங் கொள் கூட்டம்-உள்ளத்தால் ஒருவரே! மற்றுடலினால் பலராய்க்காண்பார். அவரைக் கள்ளத்தால் நெருங்கொணாதே எனக்கண்டு, வையம் கலங்கும் நாள் எந்த நாளோ? எனக்கேட்ட புரட்சிக் கவிஞரின் கேள்விக்குப் பதில் கிடைக்கும்நாள்... தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று போர்ப்பரணி பாடும் இந்நாள்... வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள் என்று முரசு கொட்டும் இந்நாள்...
தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - என்று இளந் தமிழர் - எழுச்சித் தமிழர் - ஏறு நடை போட்டுக் கிளம்பி விட்ட மகத்தான நாள்! மாணவர் மானப்படை எழுந்த நாள்-மாதர் குலம் கொதித்த நாள் - மறவர் இனம், வீறிட்டு முழங்கிய நாள்-இந்த நாளில் தமிழ்காக்க உயிர்விட்ட தியாகிகளை எண்ணிக்கொள்வோம். அவர்களின் கல்லறை இருக்கும் திசை நோக்கி வீர வணக்கம் செலுத்துவோம்.
(மாணவ, மாணவிகள் அனைவரும் மௌனமாக எழுந்து நின்று, பின் அமர்கிறார்கள்.)
தியாகச் செம்மல்களின் தினமான இன்று... மாணவ மணி சாரங்கபாணியின் பெயரால் அமைந்த இந்த மன்றத்தில்... மாணவமணி ராசேந்திரன் நினைவுக் கலைக் கழகத்தார் நடத்தும்—ஓரங்க நாடகம் ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாடகத்தின் பெயர் வஞ்சியும் காஞ்சியும்! எழுதியவர் முரசொலி மாறன் எம். ஏ.! பல்லாண்டுகாலத்திற்கு முன்னர் மறைந்துவிட்ட சேரன் செங்குட்டுவன் திடீரெனக்கல்லறையிலிருந்து எழுந்து வந்து இன்றையதமிழகத்தைக்கண்டால்...
என்ன நினைப்பான்... என்ன நடக்கும் என்பதே நாடகத்தின் கருத்து... இப்போது ஆரம்பமாகிறது; வஞ்சியும் காஞ்சியும்!...
(திரை)
[முரசொலி மாறன் எம். ஏ., எழுதி 1959-ம் ஆண்டு முரசொலி அண்ணாமலரில் வந்த ‘வஞ்சியும்-காஞ்சியும்’ -நாடகம் மாணவர்களால் நடத்திக் காட்டப்படுகிறது.]
இடம்: ரோடு.
[மரகதமும்-அவள் தோழி மாலாவும் நாடகம் முடிந்தபின் பேசிக் கொண்டு வருகிறார்கள்.]
மாலா! வேண்மாள் வேஷம் உனக்கு பொருத்தமாயிருந்ததடி.... ஆகா! அந்சு, அண்ணா மாதிரி நடிச்சாரே; சொம்பு வீரமாதம்......
மரகதம்! இப்படி ஒரு நாடகத்தை ஏற்பாடு பண்ணி... தமிழ்த் தியாகிகள் தினத்தை சிறப்படையச்செய்த உன்னை... எல்லா மாணவர்களும் பாராட்டுகிறார்கள்... நீ, செயலாளராக வந்த பிறகு... மாணவர் மன்றத்துக்கே தனி மதிப்படி மரகதம்... ஏன்! மங்கையர் குலத்துக்கே தனி மதிப்புத்தான்...
ஏ.... ஏ.... மாலா!... ரொம்ப புகழ்ந்திடாதே!... மங்கையர் உலகத்திற்கு நாம் என்ன பெரிய சேவை செய்து விட்டோம்?... எத்தனையோ தியாக பத்தினிகள் இந்தத் தென்னகத்தின் ஒளி விளக்குகளாக இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள்!...
இப்போதும் இருக்கிறார்களா? யார் மரகதம்?
கணவனையும் - உடன்பிறப்பையும் போரிலே இழந்து விட்ட பிறகும் சின்னஞ் சிறு பாலகனுக்குச் சீவி முடித்துச் செருமுனைக்கு அனுப்பி வைத்த தாய் களைப்பற்றிய வீரவரிகளைப் புறநானூற்றிலே படித்திருக்கிறோம்... ஆனால்... நான் இப்போது இருப்பதாகச் சொல்லுகிற அந்தத் தியாக மகளிர்க்குப் புறநானூறுப் பாட்டு இல்லை... ஆனால்... அந்த வீரத்தாய்மார்கள் இருக்கிறார்கள் மாலா; இருக்கிறார்கள்.
மரகதம்?
தமிழ்காக்க நடைபெற்ற கிளர்ச்சியில் தமிழகமே தணற்காடு — ரணக்காடாக மாறியபோது, தன் ஆருயிர்க் கணவனை அறப்போர்க் களத்தில் உயிரோடு அள்ளிக்கொடுத்து விட்டுத் தாலியறுத்து தவித்து நிற்கும் தமிழ்த்தாய் ஒருத்தி இருக்கிறார்கள்; எனக்குத் தமிழ் உணர்ச்சி ஊட்டிக்கொண்டு!... காண வருகிறாயா; அந்தக் காவேரி என்னும் கனற்பிழம்பை! கற்பின் உருவை! காண வருகிறாயா மாலா!
மரகதம்! அப்படிப்பட்ட தமிழ் அன்னையின் காலடி மண்ணை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டால்... கோழைகளின் உள்ளமும் வீரங்கொள்ளுமே! எனக்குக்காட்டு மரகதம்; அந்தக் கற்புக்கரசியை!
வா, போகலாம்...
(இருவரும் போகிறார்கள்)
(திரை)
[மரகதமும் மாலாவும் காவேரி வீட்டிற்கு வருகின்றனர்—இந்தி எதிர்ப்புப் போரில் துரைத்தனத்தின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான கொள்கைச் சிங்கத்தின் மனைவிதான் காவேரி]
(மாலாவிடம்) இதோ; படமாகி விட்டவர்தான் தமிழ் காக்கும் அறப்போரில் பிணமாகிப் போனவர்... உயிர் பிரியும் தருவாயிலும் “உலகத்தோடு பிறந்த தமிழ் வாழ்க!” என்று கூவிடத் தவறவில்லை இந்தக் கொள்கைச் சிங்கம்.
(கும்பிடுகிறாள். மாலாவும் கும்பிடுகிறாள்)
(மெதுவாக) மரகதம்!... காவேரியம்மா எங்கே?......
இரு......வருவார்கள்...... (உள் நோக்கி) அம்மா! அம்மா!!
(இருவரும் காவேரி வருகையை எதிர் பார்த்து நிற்கிறார்கள் ...)
(வீரத்தாய் பற்றிய சோக கீதம் பின்னணியில் கேட்கிறது. காவேரியம்மா வருகிறார்கள்)
வணக்கம்மா...
