உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 3
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 3 · 3 / 23

அவன் குழலும் கையுமாகத் திரிந்தான்... இந்தக் கண்ணன் கொடியுங்கையுமாக அல்லவா திரிவார்...

இப்போது கையில் கொடியில்லை. காரணம்; கட்சிக் கொடிக்கும் தேசியக் கொடிக்கும் வித்யாசமில்லாமல் செய்து விட்டார்களே என்று! அவனுக்கு வருத்தம்... அதனால் கொடி பிடிப்பதில்லை.

சரிம்மா; நிபந்தனையென்றீர்களே! என்ன?....

அவன் காங்கிரசை திருத்தப் போகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரே வெறியாக அலைகிறான்....

காங்கிரசைத் திருத்துவதா? கடலில் விழுந்து காணாமற்போன பொருளை கையில் விளக்கெடுத்துக் கொண்டு தேடுவதுபோன்ற முயற்சி அல்லவா அது....

அந்த முயற்சியில் இருந்து அவனை மாற்ற வேண்டும்-இடிந்துபோன கட்டிடத்திலிருந்து அவனை வெளியேற்ற வேண்டும்...... திலகர்-காந்தி போன்ற தியாகிகள் வளர்த்த காங்கிரசைத் தீயோர் கையிலிருந்து மீட்பேன்...புடம் போட்ட தங்கமாக்குவேன் என்றெல்லாம் புலம்புகிறான்... பிணமாகி விட்ட அவன் தந்தையால்கூட அவன் பிடிவாதத்தைமாற்ற முடியவில்லை...காங்கிரசை அவனால் மட்டுமல்ல; இனி யாராலும் திருத்த முடியாது என்பதை அவனுக்கு உணர்த்தவேண்டும் அவன் தன்னை உணர்ந்து—தமிழை உணர்ந்து—தாயை உணர்ந்து தமிழ்ப் பகைவர்களை நோக்கித் தடந்தோள் உயர்த்தும் வீரமகனாக விளங்கிடவேண்டும்....அதனைச் செய்ய உன்னால் முடியுமா?...முடியுமென்றால் உடனே செயல்படு...இதுதான் மரகதம் என் நிபந்தனை...

எனக்கு நம்பிக்கை யிருக்கிறதம்மா! மாற்றாரின் மனத்தை மாற்றுகிற அளவுக்குத் தூய கொள்கைகள் இருக்கும்போது; தங்கள் மகனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது...

அப்படியானால் வாழ்த்தி அனுப்புகிறேன்...வெற்றியை நோக்கிப் போ... வெறி கொண்டலையும் என் மகனை நெறி கண்டார் வழிக்கு அழைத்து வா......

சரியம்மா; நான் உங்கள் நிபந்தனையை நிறைவேற்றுகிறேன் ... நான் சொன்னதை நீங்கள்?...

(நழுவிக் கொள்ளுதல்) அதை மறக்க மாட்டாயா? அம் என் கண்ணே; முதலில் கண்ணனைத் திருத்து!

(திரை)

[உத்தமர் காந்தி உண்மை ஊழியர் சங்கத்தில்-காந்தியார் படத்தின் முன் கண்ணன்-கையெடுத்துக் கும்பிட்டவாறு நிற்கிறான். வாழ்கநீ எம்மான்- என்ற பாடல் முழங்குகிறது.]

(பாடல் முடிந்ததும்) வாழ்க வாழ்க!

கண்ணன்:— அடேடே வாங்கய்யா தசாவதாரம்...

தசா:— என்ன கண்ணா; சௌக்கியமா?

கண்:— ம்...ஆமாம்... தசாவதாரம்! இது என்ன புது அவதாரம்?

(கதர் சட்டையைத் தொட்டு)

தசா:— கதரைக் கேக்குறியா?இதபாரு; ஒரு இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி இந்தமாதிரி கதர் - ஆடையிலே இருந்தா மண்டை உடையும் - எலும்பு நொறுங்கும் ஜெயில்ல போடுவான் ...... இப்ப இந்தப் புதுத் துணியைப் பார்த்து போலீஸ்காரன் கூட தலை வணங்குறானே!...

கண்:— தசாவதாரம்! பகவான் கூட பத்து-அவதாரம் தான் எடுத்தாராம் ... உன் அவதாரத்துக்கு கணக்கே : இருக்காது போலிருக்கு ... நீ பிறந்த உடனே உனக்குப் பேரு வச்சதை விட உன் காலம் முடிஞ்ச பிறகு ...நீ எடுத்த அவதாரங்களைக் கணக்குப் பார்த்து அப்புறம் வச்சிருக்கலாம் பொருத்தமான பேரு...

தசா:— அதிருக்கட்டும்பா கிண்டலு; உன்னைப் பார்க்கத்தான் முக்கியமா வந்தேன்...

கண்:— ஏன்? என் கிட்ட என்ன? பஸ் ரூட்டா ... பர்மிட்டா,... கோட்டாவா... லைசென்சா ...?நான் கொடுக்கிறதுக்கு ஒண்ணும் இல்லியே!...

தசா:— அதில்லப்பா; உன்னைப் பார்க்கிறதுக்கு என் முதலாளி வரணும்னு சொன்னாரு... வாசல்ல தான் காரிலே இருக்காரு ...காத்துகிட்டு இருக்காரு...

கண்:— முதலாளியா; யாரு?.. புது முதலாளியா?...

தசா:— இல்ல; பழைய...

கண்:— சே ... சே ... சே ... பழைய முதலாளியை விட்டு... ரொம்ப நாளாச்சு...

தசா:— அதான் ப்பா நம்ப ஊர் சேர்மேன்... திரவியம்பிள்ளை!...

கண்:— ஓ...திரவியம் பிள்ளையா?... சேர்மன்!சேர்மன்! ஏம்பா தசாவதாரம்... என்ன உங்க சேர்மன் கொண்டுவந்த தீர்மானம் ஒண்ணு கூட நகரசபையிலே ஜெயிக்கிறது இல்லயாமே....

தசா:— ஆமாம்...

கண்:— சர்க்கார் உத்திரவுகளையே மீறி ... காரியங்கள் நடத்துறாங்களாமே......

தசா:— ஹி ஹி ஹி ...

கண்:— கவுன்சிலர்களுக்குள்ள கை கலப்பாம்...... காலணிகள் கூட...