இரத்தக் கண்ணீர்
காட்சி 7 · 7 / 61
யார் மோசம். அவனுக்கென்ன அழகிலே குறைவா? அந்தஸ்திலே குறைவா? அசட்டுப் பெண்ணே! அவனுடைய அறிவை நீ உணரமாட்டாய்.
உணர முடியாத அளவுக்கு ஊசி முனையை விடச் சிறியது போலும்—இல்லையா அப்பா!
போதும் நிறுத்து! அவன் நினைத்தால் ஊர்வசி, ரம்பை எல்லாம் ஓடி வருவார்கள்!
இதிலென்ன ஆச்சரியம்! ஆஸ்ரமத்து முனிவர்களிடமே ஓடிவந்தவர்கள்—அரண்மனைக்காரர் அழைத்தால் அடியா சொல்லப்போகிறார்கள்? வருவார்களப்பா, வருவார்கள்!
வாயை மூடு! வாயாடி!
கோபமாகப் பேசி விட்டு திருசங்கு வெளியே போகிறான். முத்தாயி தன் தந்தைக்குச் சரியான பதில் கொடுத்தோம் என்ற மகிழ்ச்சியில் கூத்தாடுகிறாள். அந்தக் கூத்திலே பாட்டும் பிறக்கிறது;
“நான்தேடிய காதலன் முன்னே—காமனும் மூடிய முகமுடன் செல்வான்! வாடிய பயிர்க்கு மழைபோலே நான் சூடிய முல்லை மலர்போலே! இன்பம் தருவான்!—அந்த அன்பன் வருவான்! நீதிலாத தேன்முகம்! அவன் வான்நிலவு! வருவான்! காதல் வளர்த்தருவான்!”
★
பாளையக்காரர் அரண்மனையைச் சேர்ந்த ஒரு பகுதி. முத்தன் ஒரு கம்பீரமான குதிரையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். குதிரை சவாரி செய்யும் உடையுடன் சுகதேவ் பெருமிதமாக நடைபோட்டு, குதிரையிடம் நெருங்குகிறான். மாளிகையின் உச்சியிலே யிருந்தபடியே பாளையக்காரரும் அவரது துணைவியும் தங்கள் மைந்தனின் குதிரையேற்றத்தைக் காணக் காத்திருக்கிறார்கள். பலதேவருக்குப் பக்கத்திலே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் நிற்கிறாள்.
பலதேவரின் முக ஜாடையும், அவரைப்போன்ற உயரமும் உள்ள அந்த மங்கை நிச்சயமாக அவருக்குச் சகோதரியாகத்தான் இருக்கவேண்டும். நாற்பது வயது மதிப்பிடலா மென்றாலும் அவளது தேகம் கட்டுக் குலைந்து காணப்படவில்லை. அவளின் முகத்திலே பூரிப்புத் தவழவில்லை. எதைப்பற்றியோ எண்ணங் கொண்டவள் போல நின்று கொண்டிருந்தாள்.
குதிரையிடம் வந்துவிட்ட சுகதேவன், மாளிகையின் உச்சியை அண்ணாந்து பார்த்து,
குதிரையிலே ஏறி அங்கே பாயட்டுமா?
அதைக்கேட்டதும் அந்த நாற்பதுவயது மங்கை அவனைப்பார்த்து... “வேண்டாம் வேண்டாம்! நீ முதலில் குதிரையைப் பிடி பார்க்கலாம்” என்று கிண்டல் செய்கிறாள். கோபங்கொண்ட சுகதேவன் “அத்தை! என்ன அவ்வளவு மட்டமாகவா நினைத்து விட்டாய்! இதோ பார்-ராஜா தேசிங்கு போல..........”
என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அவள் “பல்லிக்கடித்துப் பயனில்லை... பஞ்சகல்யாணியை அடக்கவேண்டும்” என்று கூறி சிரிக்கிறாள். அந்த சிரிப்பிலே குளிர்ச்சி இல்லை. சுகதேவன் குதிரையின் கழுத்தைத் தடவிக் கொடுக்கிறான். குதிரை கனைத்துக் கொண்டு ஒரு உதை கொடுக்கிறது. அந்த உதை பின்னால் நிற்கும் முத்தன் மீது விழுந்து அவன் கீழே விழுந்து எழுந்திருக்கிறான். அதைக் கண்ட சுகதேவின் அத்தை “அப்பய்யோ” எனக் கத்திவிடுகிறாள்.
அதைக் கண்ட பலதேவர், “அந்த முட்டாளுக்கு வேண்டும். குதிரையின் பின்னே ஏன் நிற்கிறான் குருடன்?” என்று திட்டுகிறார்.
டே முத்தா! விழுந்ததா நல்லதை. தள்ளிப் போடா!
என்று கூறியபடி குதிரையின்மீது பாய்ந்து ஏறுகிறான். குதிரை அவனைக் கீழே தள்ளிவிட காலைக் தூக்கிக்கொண்டு பயங்கர நடனமாடுகிறது. சுகதேவ், “முத்தா! முத்தா! ஓடிவாடா!” என்று அலறுகிறான். முத்தன் ஓடிவருவதற்குள், குதிரை சுகதேவை கீழே உருட்டிவிட்டு ஓடிவிடுகிறது. திரண்ட பலதேவரும் மற்றவர் களும் ஓடிவருகிறார்கள். அதற்குள் சுகதேவ் எழுந்துவிடுகிறான். குதிரையின்மீது செல்ல வேண்டிய கோபம், முத்தன்மீது திரும்புகிறது.
சோம்பேறி முத்தா! சோறு தின்ன வில்லையா நீ!... குதிரை என்னை மிதித்திருந்தால் என்ன ஆவது?
சுகா! காயம் ஒன்றுமில்லையே கண்ணு!
இல்லையம்மா! இந்தக் குதிரை சரியில்லை.
அதற்குள் அவன் அத்தை குறுக்கிடுகிறாள், சிரிப்புடன்.
ஆமாம், அதனால்தான் இத்துடன் விட்டு விட்டது.
அத்தை! நீ பேசாமல் இரு! இந்தத் தூங்கு மூஞ்சிக் கழுதை கடிவாளம் சரியாகப் போட்டாமல்...
சரியாகத்தான் போட்டேன்!
எதிர்த்துப் பேசாதேடா எச்சில் இலை நாயே! உதை விழும் ஜாக்கிரதை!
ஏண்டா சுகதேவ்; நீ விழுந்து விட்டு அவன் மீது சீறுகிறாய்? முத்தா! நீ போ! அரண்மனைக் குதிரை யெல்லாம் அப்படித்தான் உதைக்கும்.
