உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 60 · 60 / 61

விபரமாகச் சொல்லும்.

சொல்லுகிறேன் - இருபது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் - நீங்கள், உங்கள் மனைவி - குழந்தை சுகதேவ் - மூவரும், காசியாத்திரை சென்றுவிட்டு, இமயகிரி முதலியவைகளைச் சுற்றிப் பார்த்துவா சென்றிருந்தீர்கள் அல்லவா?

ஆமாம்.

நீங்கள் திரும்பிவர இரண்டு ஆண்டுகள் பிடித்தது.

ஆமாம்.

இளையராணி பூங்காவனமும் - அவர்களுக்குப் பாதுகாப்பாக காவேரி என்றவளும் அரண்மனையில் இருந்தார்கள் அல்லவா?

ஆமாம்!

ஆகா நன்றாக ஞாபகமிருக்கிறது - இப்போது நடப்பதுபோல் இதோ எல்லாம் என் கண் முன்னே காட்சியாகின்றன - அந்தக் காட்சியை அப்படியே சொல்லுகிறேன் கேளுங்கள்.

அந்தப் பாம ரகசியம் மட்டும் பாதாளத்தில் புதைந்து கிடந்தது. சாமியாரையும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் - சொல்ல வில்லை - ஆனால் இப்போது புரிகிறது. அந்தக் குழந்தை பிறந்த இடம், இந்த அறைதான் என்பது! - ஆம் - இன்று தூக்கு மேடையிலே நிற்கும் முத்தனுக்கு, தொட்டில் கட்டி இருக்கவேண்டிய இடம் இதுதான்! ஆனால் ஒன்று பிரபுவே! இந்தச் சாமியார் அவ்வளவு அக்கரை எடுத்துக்கொண்டாரே - அது ஏன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை—

(அப்போது பூங்காவனம் உரத்த குரலில் சப்தம் போடுகிறாள்)

நான் சொல்லுகிறேன்! முத்தனின் தாய் நான்தான்!

ஆ!

அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் - இதோ (சாமியாரைக் காட்டி) இந்தக் காதகன் தான் என்னை ஏமாற்றி விட்டான். நீங்களும் அண்ணியும் வடக்கே சென்றிருக்கும் போது இவன் வலையில் நான் விழுந்துவிட்டேன். பக்திபோதனை செய்வதாக இந்தப் பாலசன்யாசி அடிக்கடி வந்தான் - ஒரு நாள், இரண்டு நாள் - உலகத்தைப் பற்றிப் பேசினேன் - பிறகு உலகைப் படைத்தவனின் உத்தம குணங்களை விளக்கினேன். கடவுள் அவதாரங்களின் காதல் லீலைகள் பற்றி வர்ணித்தான்.

மாயக் கண்ணன் - மன்மதன் ரதிதேவி - மகேசன் பார்வதி - வள்ளி மணவாளன் - பிரம்மா, திலோத்தமை - மேனகா - விசுவாமித்திரன் - இப்படி யெல்லாம் புராணக் கதைகள் சொன்னான். போதை நிறைந்த அந்தக் கதைகள் என் புத்தியைத் தடுமாற வைத்துவிட்டன. விவரிப்பானேன் - வீழ்ந்தேன்; வீழ்ந்தேன்; தமிழச்சிக் கட்டிக் காக்கும் கற்பு நெறியிலிருந்து வீழ்ந்தேன்! சன்யாசத்தை விட்டு விடுகிறேன் - சம்சார வாழ்வு தொடங்குகிறேன் என்றான்.

கடைசியில் - கருவிலே முத்தனும் வந்தான்! “ஊர் கைகொட்டி சிரிக்கும் - உன்னை மணந்தால்” என்று காரணம் கூறி என்னைக் கைவிட்டு விட்டான். முத்தனின் தந்தை இவன் - நான்தான் தாய்!

என்ன சாமியாரே திகைப்பு? ஹஹஹ பற்றற்ற துறவிகள், புழுதியைக்கூட நாட மாட்டார்களாம்; நீரோ பூங்காவனத்தையே நாடியிருக்கிறீர்! - ஹஹஹ.

பூபதி. ஐயாயிரம் பொன் தருகிறேன் - இந்த அவமானச் செய்தியை வெளியே சொல்லாதீர்!—

எனக்கு வேண்டாம் - ஐயாயிரம் பொன்! முன்பு ஒருமுறை நான் பொன்னுக்கு அடிமைப்பட்டதால் தான் இந்தப் போலி வேதாந்தி இவ்வளவு நாள் வெளிச்சம் போட முடிந்தது - பிரபு! ஐயாயிரம் பொன்னைக்கொண்டு - இந்த ஆண்டியின் மடத்தை அறிவு வளர் கல்விக்கூடமாக மாற்றுங்கள். மற்றொன்று! - மூடியிருக்கும் இந்த ரகசியம் வெளிவர வேண்டாமென்று நீர் விரும்புவது உண்மையானால், உடனே சென்று முத்தனைக் காப்பாற்றுங்கள்! அவன் வெளிநாட்டு உளவாளி என்று வேங்கை புரத்தரசன் தீர்மானித்து விட்டான்.

நீங்கள் போனால்தான் உண்மை வெளியாகும்.

ஆம் - அப்பா! புறப்படுங்கள்!—

(எல்லோரும் - புறப்படுகிறார்கள்)

★

[சிறைச்சாலை

முத்தன் அடைப்பட்டிருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். மென் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. அந்தக் காற்றின் ஸ்பரிசத்தை சில நாழிகைகளுக்கு பிறகு அவனால் உணரமுடியாது. சிறைக்கம்பிகளுக்கு வெளியேத் தெரியும் அந்த உலகத்தின் சிறிய பகுதியை காணும் அவனது மோகன விழிகள் கொஞ்சநேரத்தில் மூடிவிடும். அய்யோ! அதற்குள், ஒரு முறை அவன் இதயம் நிறைந்தவளை பார்க்கக் கொடுத்து வைக்காதா அந்த ஏழைக்கு!

அதோ! முத்தாயி வந்து விட்டாள். உண்மை தான்! நினைவின் நிழலல்ல! அவன் கண்ணில் தேங்கி நிற்கும் நீர் துளிகளுக்கிடையே வைரத்தின் நடுவே நிழலாட்டம் போடும் ஒளி போன்றல்ல அந்த உருவம். உண்மையாகவே முத்தாயி வருகிறாள். அத்தான் என்றழ வாய் திறக்கிறாள். ஆனால் முடியவில்லை. நெஞ்சு சடைத்து விடுகிறது.

இன்பமே! கலங்காதே! இன்று நமக்கு கடைசி நாள்! கடைசி சந்திப்பு! காதல்பாடும் உன் கண்கள் இனி நான் பார்க்க முடியாது! தேன் பொழியும் உன் அதரங்களின் தித்திப்பை இனி நான் சுவைக்க முடியாது! இன்னும் இரண்டொரு வினாடிகள். உன்னைப்பற்றி இன்ப நினைவுகளை அதற்கு மேல் இந்த ஏழை முத்தனால் சுமக்க முடியாது!

அத்தான்! உங்கள் பின்னாலேயே நானும் வருவேன். நம்மை யாரும் பிரிக்க முடியாது!