இரத்தக் கண்ணீர்
காட்சி 61 · 61 / 61
பைத்தியம்! ஏதோ காதலர்களுக்காக ஒரு உலகம் கட்டிவைத்திருப்பதாகவும், அந்த உலகத்தில் செத்துப்போன காதலர்கள் குடியேறலாமென்றும் யாரோ ஒரு ஆசைக்காரன் கிறுக்கிவைத்துவிட்டுப் போனான்! அதை நம்பி நீயும் பிணமாகிவிடாதே! உயிர்விட்டுப்போகும் நான் உன்னிடம் கேட்கிற ஒரே ஒரு உறுதி—உனக்கு இருக்கிற ஒரே ஒரு அன்பு உத்திரவு......
எதுவானாலும் கேட்கிறேன்...
நீ சாகாமல் வாழவேண்டும் என்பதுதான்.
நான் வாழமுடியாதவள்... அத்தான்.
கண்ணே! உன் வயிற்றிலே வளரும் நம் காதற் களஞ்சியத்தை நான் காண முடியாவிட்டாலும் நீ கண்டு களிப்பவள். அந்த இன்ப எதிர் காலத்தை நினைத்து நான் இப்போது ஒரே ஒரு சந்தோஷ மூச்சுவிடுகிறேன்.
அத்தான்!
அழாதே — கண்ணே! அழாதே! உன்னை சிரித்த முகத்தோடு என் சிந்தைக் குளிர ஒருமுறை பார்க்கிறேன், எங்கே... என் செந்தமிழே! சிரிப்புக் காட்டு!
அத்தான்!
மதுவரும் உன் இதழ்களின் முத்தமிட்டேன், அது பிடிக்கவில்லை உலகிற்கு — நீதிக்கு — நியாயத்திற்கு. ஆகையால் மரணத்தை முத்தமிடப் போகிறேன். முத்தாயி! கடைசியாக ஒன்று கேட்கிறேன். முத்தாயி! கடைசியாக ஒன்று கேட்கிறேன். நாம் சேர்ந்து பாடுவோமே அந்த காதல் பாட்டு அதை இனிமேல் எங்கு கேட்கப் போகிறேன், எங்கே—அதைப் பாடு! பாடு! நீ பாடாவிட்டால் உன் காதலன் நிம்மதியாக சாகமாட்டான். பாடு—கண்ணே—பாடு!
முத்தாயி அழுதுகொண்டே அந்த காதற் கீதத்தை பாடுகிறாள். அதனின் இறுதி வரிகளில் முத்தனும் சேர்ந்துகொள்ளுகிறான். அப்போது காவலர்கள் சிறைக்கதவைத் திறக்கிறார்கள். முத்தனின் கடைசி யாத்திரை ஆரம்பமாகிறது.
★
பலதேவர், பூங்காவனம், சாமியார், சுகதேவ், முதியோர் வரும் பல்லக்கு வண்டிகள் வேகமாக வருகின்றன. அவர்களின் வேகத்தைப் பார்த்தால் கட்டாயம் முத்தனை மீட்டு விடுவார்கள் என்றே தெரிகிறது.
* * *
தூக்குமேடையை நோக்கி முத்தன் அடி பெயர்த்து வைக்கிறான். அவன் கடந்த பாதையை இனி மீண்டும் பார்க்கவே முடியாது. தூக்குமேடை அவன் வாய்பிளந்து வரவேற்கிறது, தூரத்திலே—கண்ணை மறந்து, முத்தாயி காதல் கீதத்தைப் பாடிக்கொண்டே யிருக்கிறாள். அப்பப்பா—அவள்தான் பாடுகிறாளா? சோகமே யாழாக உருவெடுத்து இசை பொழிகிறதா? இந்த கீதத்திலே மனதைப் பறிகொடுத்தபடியே முத்தன் நடக்கிறான். அவன் முகம் மூடப்படுகிறது. உலகம் மறைந்துவிட்டது அவனுக்கு!
‘தடார்’ என ஒரு சப்தம். அந்த சப்தம் முத்தனின் உயிரைப் பிரித்துக்கொண்டு போய்விட்டது. இனி அவனுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. ஏழை முத்தன் இடர் நிறைந்த உலகை விட்டு விடுதலைபெற்று விட்டான்.
★
[சுமதியின் வீடு
விதவை முத்தாயி — அவள் தோழி சுமதி—இருவரும் இருக்கிறார்கள். பாளையக்காரர் குடும்பம் முழுவதும் அவள் எதிரே இருக்கிறது, சாமியார் உட்பட!
முத்தாயி! — ஏன் எங்களோடு பேசமாட்டேன் என்கிறாய்...
என் பெருமூச்சுகளுக்குப் பேசும் சக்தியில்லை என்று கருதுகிறீர்களா?
கண்ணே முத்தாயி—சொல்வதைக் கேள். எங்களோடு வந்துவிடு! என் மகனைப் பார்ப்பது போல உன்னையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் பதிலுக்குக் காத்திருங்கள்! பாவிகளே! என் முத்தனை அநியாயமாகக் கொன்ற பாவிகளே! அந்தப் பதிலுக்குக் காத்திருங்கள்! இப்போது போய்விடுங்கள் இதைவிட்டு—
முத்தாயியின் கனலும், புனலும் நிறைந்த கண்களுக்கு முன்னே நிற்கமுடியாமல் பலதேவர் குடும்பமும் - சாமியாரும் தலைகுனிகிறார்கள்.
★
