இரத்தக் கண்ணீர்
காட்சி 59 · 59 / 61
முத்தனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள்—
இதை சுகதேவ் சொல்லி முடிப்பதற்குள்ளாக மேல் மாளிகையில் “அய்யோ! முத்தா!” என்ற பெரும் சப்தம் கேட்கிறது. தடதடவென்று ஒலியுடன் கீழே விழுகிறாள் பூங்காவனம். எல்லோரும் மேலே ஓடுகிறார்கள். பூங்காவனம், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாள். பலதேவர், தன் ஆட்களிடம், “உடனே போய், வைத்தியர் பூபதியை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.
ஆட்களும் ஓடுகிறார்கள்.
* * *
பூபதியின் வீட்டிலே ஆட்கள் போய்க் கூப்பிடுகிறார்கள். “இருபது வருஷமாயிற்றப்பா அந்த அரண்மனையில் நுழைந்து!” என்று கூறிக்கொண்டே பூபதி புறப்பட்டு விடுகிறார்.
* * *
பூங்காவனம் கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறாள். பூபதி வந்து அவளைப் பரிசோதிக்கிறார். பரிசோதனை முடிந்ததும்— “பயப்படாதீர்கள்... மன அதிர்ச்சிதான்!” என்று சொல்லிவிட்டு ஏதோ சில மருந்துகள் அவள் மூக்கில் காட்டுகிறார். பூங்காவனம் கண் விழிக்கிறாள்.
பிரபு! ஏன் இப்படி திடீரென்று மயக்கம் வந்தது, ஏதாவது சோகச் செய்தி?
அப்படி யொன்றுமில்லை, நமது மாளிகையில் குதிரைக்காரனு இருந்தானே — அந்த முத்தனுக்கு தூக்கு தண்டனையாம் — அதைக் கேள்விப்பட்ட உடன்........
பூங்காவனம் மறுபடியும் “முத்தா” என அலறுகிறாள். பூபதியின் மூளை மிகவேகமாக வேலை செய்கிறது. பலதேவரைப் பார்த்து—
இந்த மாளிகைக்கு பின்புறமாக படிக்கட்டுகள் இருக்கிறதல்லவா?......
இருக்கிறது!...
பூபதி அறையைச் சுற்றி நன்றாகக் கண்ணை செலுத்துகிறார். காற்றுப் புருக்கள்—கன்றைநாடும் பசு—மான்தோலில் வேங்கை — அந்த மூன்று சிலைகளும் அவர் கவனத்தை அதிக நேரம் இழுக்கின்றன. அவைகளையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். பிறகு பேச ஆரம்பிக்கிறார்—
பெருமையுள்ள பிரபுவே! என்னை அந்தப் பின்புறத்துப் படிக்கட்டுகளின் பக்கம் அழைத்துச் செல்கிறீர்களா?—
அப்படியே! வாரும் பூபதி!—
எல்லோரும் அந்தப் படிக்கட்டுகளின் பக்கம் செல்கிறார்கள். பூபதி அந்தப்படிகளை “ஒன்று, இரண்டு, மூன்று” என்று வாய்விட்டுச் சொல்லி எண்ணுகிறார்?
என்ன பூபதி—படிகள் எண்ணுகிறீர்?
ஹா ஹா ஹா—படிகளை எண்ணுகிறேன். அதோடு பழைய நிகழ்ச்சி யொன்றையும் எண்ணுகிறேன். என்ன; மாய்கைநாத சாமியாரே! சாமிக்கு திருச்சிற்றம்பலத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது—பாபம்!
புரியும்படி சொல்லும்!
சொல்லுகிறேன் - இளையராணி, முத்தனுக்கு மரண தண்டனை என்றதும் மூர்ச்சையானீர்கள்—இல்லையா?
ஆமாம்—அதற்கென்ன?
முத்தனுக்கு வரும் ஆபத்து - இந்த அம்மாளை பாதிப்பானேன்?
அவன் இங்கு வேலைக்காரனாயிருந்தவன்.
வேலைக்காரனுக்காக வருத்தப்பட்டவர்கள் - உங்கள் வரலாற்றிலேயே கிடையாதே! பலதேவப்பிரபு அவர்களே! இந்தப் படிகளை நான் ஏன் எண்ணிப் பார்த்தேன் தெரியுமா? இருபது மூன்று ஆண்டுகளுக்கு முன் - நான் எண்ணிய முப்பத்தாறு படிகள் சரியாக இருக்கிறதா என்பதற்காகத்தான்!
