உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 49 · 49 / 61

உம்—வேலைகளே கவனியுங்கள்.

★

குடிசையிலே முத்தன் காத்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் அவர்களுக்குப் புதிய நாள் தானே!—இருவரும் தழுவிக் கொள்கிறார்கள்.

அப்பா—நீ ஒரு புதுமையான நெருப்பு.

என்ன—நெருப்பா?

ஆமாம் உன்னை நீங்கினால் சுடுகிறது. நெருங்கினால் குளிர்கிறது.

சரிதான் வள்ளுவரே!...

எதைப்பார்த்தாலும் உன் நினைப்புதான் வருகிறது...

அப்படியா? அது ஆபத்தாயிற்றே—

ஏன்?

ஒரு கிழவியைப் பார்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போதும் உன்னைத்தான் கற்பனை செய்வேன். கிழவியின் கூந்தலில்போல வெள்ளை உள்ளம். அவள் முதுகின் கூனல்மாதிரி வளைந்த உன் புருவம். அவள் நடுங்கும் உடம்புமாதிரி... நடுங்கும் உன் தங்க உடம்பு. அவள் கையிலேயிருக்கும் ஊன்றுகோல் மாதிரி......

ஏன் அத்தான்!—நீங்கள்!

ஏன் கண்ணே!

உஸ்—இது அடுக்குமா!

ஆணும் பெண்ணும் தனியே இருந்தால்—அடுக்கா—அந்தப்புரம் எல்லாம் ஒன்றுதான்.

இருவரும் இன்பகீதம் இசைக்கிறார்கள். இரவு அவர்களை வாழ்த்துகிறது.

★

[அடைக்கலபுரி தேவாலயம்

மணியோசை கேட்டபடி யிருக்கிறது. இளந்துறவி சுகதேவ் நிஷ்டையிலிருக்கின்றவன் போலும்! முத்தாயி ஜபம் மும்முரமாக நடைபெறுகிறது. அப்போது, ஒரு நரைத்ததாடி சாமியார் அங்குவருகிறார். இவர் யார் இந்தப் போலிச் சாமியார்? சுகதேவுக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கட்டும்; நமக்குத் தெரியட்டும்—வேதாளம் தான் வெண்டாடி சாமியாக வந்திருக்கிறான் என்பது!—வேதாளம், சுகதேவிடம் வருகிறான்.

இளந்துறவியே!... முதலில் என் வாழ்த்துக்கள்.

வெண்டாடிப் பெரியவரே! உலகம் பொய்!—உமக்கு என்னவேண்டும்.

பொய்யான இந்த உலகத்தின் மெய்யான இளைஞரே! உமக்கு எவ்வூர்? உம்மைப் பார்த்தால்—ஏதோ உள்ளங்கவர்ந்த ஒரு பொருளை பறிகொடுத்தவர் போலத் தோன்றுகிறதே!—