இரத்தக் கண்ணீர்
காட்சி 45 · 45 / 61
[தளபதி மாளிகை
தளபதி வெற்றிவேலனின் பாசறை மாளிகை. அங்கே பள்ளியறையில் உலவிக் கொண்டிருக்கிறான்—வெற்றிவேலன். முத்தாயி வந்துவிடுவாள், வந்ததும் இந்த லோகத்தை மறந்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டு அலைகிறான் அங்குமிங்கும்.
“முத்தாயி! உனக்காக நாள்பட்டுமே காத்திருக்கிறேன்—அதோ வானத்து சந்திரிகையும் காத்திருக்கிறது. கோபப் பெண்ணே! குளிர்மொழிப் பாவாய்! ஏன் இன்னும் வராமலிருக்கிறாய்?..... அந்தக் குதிரை வீரர்கள் மண்டுகளா? அல்லது புரவிகள்தான் ஏன் அவசரம் புரியாதவைகளா? எவ்வளவு நேரம்! எவ்வளவு நேரம்! அப்போதே சொன்னேன்—ஆனந்த புரத்துக்கும், தலைநகருக்கும் ஒரு குறுக்குப் பாதை போடவேண்டுமென்று! இந்த அசட்டு ராஜா கேட்டிருந்தால்—இப்போது எவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியும் என் முத்தாயி!”
இப்படி உளறியபடியே உலவிக்கொண்டிருக்கும் அவன் காதில், குதிரைகள் ஓடிவரும் குளம்படிச் சப்தங்கள் கேட்கின்றன. பரபரப்புடன் வெளியே கிளம்புகிறான் வெற்றிவேலன். மாளிகையின் முன்புறத்துக்கு ஓடுகிறான். குதிரைகள் வந்து நிற்கின்றன. குதிரையின் மீது இருக்கும் பெண்ணின் மேல் அவன் பார்வை விழுகிறது.
“முத்தாயி வந்துவிட்டாயா?” என்ற ஒரே வெறிப் பாய்ச்சலுடன் அவளைப் போய்த் தூக்கிக் கொண்டு, பள்ளியறைப் பக்கம் ஓடுகிறான். பெண்ணின் உடலைத் தூக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்ச்சியிருந்தாலே, கனம்தெரியாது போலும். மஞ்சத்தில் கொண்டு போய் அவளைப் படுக்கவைத்தான். பள்ளியறைக் கதவைத் தாளிட்டான். இரண்டு மதுக் கிண்ணங்களை எடுத்து அருகிலே வைத்துக் கொண்டான். “முத்தாயி, முத்தாயி” என்று அன்பு ததும்ப அழைத்தான்.
அவள் இப்பக்கம் திரும்பவேயில்லை. அவளது வாய் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.
“ஆகா—உனது பொன்மொழி சிந்தும் இதழ்கள் யார் மூடியது? இந்தக் குதிரைக்காரப் பயல்கள்—முட்டாள்கள்!”
என்றபடி வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டான். அவ்வளவுதான் உடனே கரகரத்த குரலில், சுகதேவ் அழுவதற்குத் தொடங்கினான். வெற்றிவேலன் திடுக்கிட்டுப் போய், சுகதேவை கூர்ந்து கவனித்தான். ஆம்—முத்தாயி அல்ல! சுகதேவ்தான்! வெற்றிவேலனுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. சுகதேவை பலமாக அறைந்துவிடுகிறான்.
அப்பா பிரபுவே! என்னை அடிக்காதீர்கள்.
நீ எப்படி இங்கு வந்தாய்?
நானும் முத்தாயியும்—அவள் ஆணாகவும், நான் பெண்ணாகவும் வேஷம் போட்டுக்கொண்டு—ஆற்றங்கரை ஓரத்திலே—ஆனந்தமாக விளையாடுவதற்குச் சென்றோம், அப்போது ஏற்பட்டது பிரபு இந்த ஆபத்து.
முட்டாள்! வெளியில் சொல்லாமல் ஓடு—இதைவிட்டு!
கண்ணே முத்தாயி! நல்ல வேளை, நீ தப்பிவிட்டாய்—நீ எங்கு போனாயோ—நான் உன்னை எங்கு கண்டு தேடுவேன்?
இங்கு நிற்காதே, ஓடு!—
சுகதேவன் பயந்து நடுங்கி அறைவிட்டு ஓடிவிடுகிறான்.
★
[பாழடைந்த கோவில்
முத்தனும், முத்தாயியும் - ஒரு பாழடைந்த கோவிலின் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனையில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.
தாங்கள் வந்து என்னை விடுவிப்பீர்கள் என்ற செய்தி எவ்வளவு மகிழ்ச்சி தந்தது தெரியுமா?
உன்னை மீண்டும் அடையப் போகிறேன் என்ற உணர்ச்சி எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஊட்டியது என்று உனக்குத் தெரியுமா?
இல்லை—என்னுடைய மகிழ்ச்சிதான் அதிகம்.
இல்லை—வைரத்தின் ஜொலிப்பைவிட அதை அணிந்து கொள்பவரின் சிரிப்பில்தான் ஜீவன் அதிகம். நீ வைரம்—நான் அணிந்துகொள்பவன்.
அத்தான்—அதிருக்கட்டும்; நம்முடைய அடுத்த திட்டம் என்ன?—இந்தக் கோவிலிலேயே குடியிருப்பதா?—இந்த அழகான தேவதைகளை என்னால் பார்க்கவே முடியவில்லை.
இந்த நாட்டில் எங்கிருந்தாலும் நம்மைப் பிடித்துவிடுவார்கள்.
