இரத்தக் கண்ணீர்
காட்சி 44 · 44 / 61
கேள்!
அதை நான் கேட்டு—நீங்கள் உடனே சொல்ல முடியாது! — நீண்ட நேரம் பேசவேண்டும்.
பேசுவோம் — பரவாயில்லை. உன்னுடன் பேசுவதைத் தவிர எனக்கு வேறென்ன இன்பம் இருக்கிறது?
அருமையான நிலவு — இருவரும் ஆற்றங்கரைப் பக்கம் போய் சுவையான கதைகளைப் பேசுவோமே!
ஆகா — நினைத்ததைச் சொன்னாய் — வா! புறப்படு என் கண்ணே!
உஸ் — தொடக்கூடாது. இதெல்லாம் நாளைக்கு! — வாருங்கள் போகலாம்.
தயாராயிருக்கிறேன்.
ஆணும் பெண்ணும் சமம் என்றீர்களே; நீங்கள் பெண் உடையிலும்—நான் ஆண் உடையிலும் செல்லலாமா?
அய்யோ பெண் உடையிலா?
பார்த்தீர்களா! — பெண் என்றால் இழிவா?
இல்லை இல்லை — யாராவது பார்த்தால் — வெட்கமாகயிருக்கும்.
யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தானே போகப் போகிறோம் — நீங்களும் நானும் ஒருயிரும் ஈருடலும் என்கிறபோது — நீங்கள் என் ஆடைகளையும் — நான் உங்கள் ஆடைகளையும் அணிந்து கொள்வதிலே என்ன தவறு!
தவறேயில்லை! தங்க கட்டியே! நீ சொல்வது போலவே செய்கிறேன்.
சுகதேவ், தன்னுடைய ஆடைகளை கழற்ற ஆரம்பிக்கிறான். அவளும், திரை மறைவிலே சென்று — தன் ஆடைகளைக் கழற்றி அவனிடம் வீசுகிறாள். இருவரும் உடைமாற்றிக் கொள்கிறார்கள். சுகதேவ், பெண்ணாகவும் — முத்தாயி, ஆணாகவும் தோன்றுகிறார்கள். பிறகு, இருவரும்—யாருக்கும் தெரியாமல், மாளிகையின் பின்புறம் வழியாக ஆற்றங்கரையை நோக்கிச் செல்லுகிறார்கள். ஆற்றங்கரையிலே காத்திருக்கும் குதிரைவீரர்கள் யாராவது அப்பக்கம் நடமாடுகிறார்களா என்று கவனித்தபடி உலவுகிறார்கள்.
அவர்கள் கண்ணிலே ஒரு ஆணும் பெண்ணும் வருவது தெரிகிறது. அவர்கள் யாருக்காக வழிமேல் விழி வைத்திருக்கிறார்களோ: அந்த முத்தாயி வந்துவிட்டாள் என்று புரிப்படை கொள்கிறார்கள்.
முத்தன் - முத்தாயி இருவருமே வருகிறார்கள்.
சரி — புறப்படுங்கள்.
குதிரைகள் தடதடவெனக் கிளம்புகின்றன. சுகதேவும், முத்தாயியும் நடந்துசெல்லும் பாதையில் அவர்கள் குதிரைவீரர்கள் வந்து நிற்கிறார்கள். சுகதேவ் திடுக்கிறான் — குதிரைவீரர்கள் அவனை விடுவார்களா? பாவம் — அவன் தான் முத்தாயி உடையிலே இருக்கிறானே — சுகதேவ் பெண் எனக் கருதப்பட்டு பிடிக்கப்படுகிறான். முத்தாயி அதைவிட்டு ஓடிவிடுகிறாள். வீரர்களும் அவளைப் பின்தொடரவில்லை. பிடிபட்ட சுகதேவின்வாய் கட்டப்படுகிறது—குதிரையிலே தூக்கிவைத்துக்கொண்டு வீரர்கள் புறப்படுகின்றனர்.
முத்தாயியை தன்னுடைய தலைவனின் பள்ளியறை விருந்தாகக் கொண்டு போகிறோம் என்பது அந்த அப்பாவிகளின் நினைப்பு.
ஆண் உடையிலே இருக்கும் முத்தாயி, ஆற்றங்கரை ஓரத்திலே வந்து தன் காதலனைத் தேடுகிறாள். ஒரு புதரிலிருந்து முத்தன் புறப்பட்டு அவளிடம் வருகிறான்.
முத்தாயி!
அத்தான் - அருமையாக அமைந்து விட்டது நாடகம்? இனி அடுத்தது என்ன?
முத்தத்திற்கு பிறகே முழுதும் சொல்லப்படும். அதோ பார் - நிலவும் மேகமும் தழுவிக் கொள்வதை!
இருவரும் வானத்தைப் பார்க்கிறார்கள் முகிலும் நிலவும் முத்தமிடுகின்றன.
★
