உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 36 · 36 / 61

"முத்தாயி! முத்தாயி!" என்று அவன் வாய் புலம்பியபடியிருக்கிறது. தளபதியின் இருப்பிடத்திற்கு அருகாமையிலே—வீரர்களின் கொண்டாட்டக் கூட்டத்திற்கு எதிர்ப்புறத்திலே—நில விலங்கு பூட்டப்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறான் முத்தன். அவனது உடலிலேயிருந்து வியர்வை மழை பொழிந்த வண்ணமிருக்கிறது. குனிந்த நிலையிலிருந்து அவனால் நிமிர முடியாதபடி கையும், காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. கழுத்திலே தாங்கமுடியாத வலி.

அந்த வலியைப் போக்கும் வலிமை வாய்ந்த கரம் இங்கில்லை; பழுதூரில் திருசங்குவின் வீட்டில் இருக்கிறது. இடுப்பை வெட்டி எறிந்து விட்டாலும் பரவாயில்லையே என்று எண்ணுகிற அளவுக்கு சொல்லொணாத வேதனை. ஒவ்வொரு எலும்பிலும் ஒரு ஈட்டி பாய்ச்சப்பட்டு, நரம்புகளிலே ஊசி ஏற்றப்பட்டு, தசைகளை யெல்லாம் உளியால் செதுக்கினால் எப்படியிருக்குமோ—அப்படியிருந்தது அவனுக்குக் கஷ்டம்!

"முத்தாயி" என்று புலம்புவது மட்டுமே அவனுக்கு ஆறுதலாகயிருந்தது.

★

[பழுதூர் அஞ்சல்மனை

வேதாளம், அஞ்சற் பையைப் பிரித்து உள்ளேயிருக்கும் ஓலைகளைக் கவனித்தபடியிருக்கிறான். திடீரென ஒரு ஓலையின்மீது அவன் கண்கள் பாய்கின்றன.

"ஆங்! அகப்பட்டுக்கொண்டார்கள்" என்று குதித்தபடி அந்த ஓலையைப் படிக்கிறான்.

ஓலையாவது:

"அன்புள்ள திருசங்குவுக்கு சுகதேவ் எழுதியது. வேங்கைபுரத்திற்கு அருகில் ஐம்பது கல் தூரமுள்ள—ஆனந்த நகரில் தங்கியிருக்கிறேன். இங்குள்ள கண்ணாடி மாளிகையை நமது திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருக்கிறேன். நீர் உடனே முத்தாயியை அழைத்துக் கொண்டு இங்கு வந்து சேரவும். திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். உடனே புறப்படவும்.

சுகதேவன்"

ஓலையைப் படித்து முடித்ததும் வேதாளத்திற்கு பூரிப்பு பொங்குகிறது. அதே சமயம் அவன் உள்ளத்தில் சூழ்ச்சி உருவாகிறது என்பதை அவன் விகாரமுகத்தில் எழும் ரேகைகள் விளக்குகின்றன.

"சுகதேவுக்கும்—முத்தாயிக்கும் திருமணம்!—வேதாளத்தின் யோசனைப்படி. வெற்றிவேலனின் ஜெயத்திற்காக நான் போட்ட திட்டம் பாதி நிறைவேறிவிட்டது. பாவம்—எலிப்பொறியைத் தேடிவரும் எலிகள்; சுகதேவ்—திருசங்கு! வேதாளம்! உனக்குச் சரியான பரிசு காத்திருக்கிறது. வெற்றிவேலனின் கையிலே முத்தாயி—வேதாளத்தின் கையிலே முத்துக் குவியல்! சபாஷ்! சபாஷ்!"

வேதாளம் துள்ளி எழுகிறான்.

★

[திருசங்கு வீடு

ஒரு மூலையிலே உட்கார்ந்து கன்னங்களைக் கண்ணீரால் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள் முத்தாயி!—அப்போது திருசங்கு நுழைகிறான். அவன் கையிலே சுகதேவ் எழுதிய கடிதம் இருக்கிறது. அதை மறைத்து வைத்துக்கொள்கிறான்.

முத்தாயி!... முத்தாயி! என்னம்மா இப்படி வருத்தமாகவே யிருக்கிறாய்?...

காரணமா கேட்கிறீர்கள்?

நீ சந்தோஷமாக யிருக்க வேண்டுமென்று தானே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்.

அப்பா!

[பேசமுடியாமல் திணறி அழுகிறாள்]

இப்போது என்னம்மா வந்துவிட்டது! ஆறுதலாக இரு.

மல்லிகைக் கொடியின் வேரை அறுத்து விட்டு, அதன் மலருக்கு நீரூற்றி என்னப்பா பயன்?

வேரை, நான் அறுக்கமாட்டேன் அம்மா! பயப்படாதே—உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும்.