உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 35 · 35 / 61

ரகசிய மென்றால் யாரிடமும் சொல்லக் கூடாது என்பது தெரியும். என்ன ரகசியம் என்பது தெரிய வேண்டுமே!

திருசங்கு—நீர் பயப்படாதீர்—நான் சொல்கிறேன்!

பயமொன்று மில்லை, சொல்லுங்கள்.

வேதாளம்—ஒரு பெண்ணைப் பற்றிய விஷயம்—

அப்படியானால் காதல் விஷய மாகத்தானிருக்கும்.

ஆகா கண்டு பிடித்து விட்டீரே—உமது மூளையே மூளை! இன்னும் சொல்கிறேன் கேளும்—திருசங்குவின் மகள் முத்தாயி, என்னை மனப்பூர்வமாக காதலிக்கிறாள்.

சபாஷ்! அப்படியா?—[வேதாளத்தின் முகத்திலே திடீரென மாறுதல் ஏற்படுகிறது. சமாளித்துக் கொள்கிறான்.]

நானும் காதல் மயக்கத்தில் விழுந்து விட்டேன். அவளோ என்னைத் தவிர வேறு யாரையும் தீண்டேன் தீண்டேன் என்று சபதம் செய்து விட்டாள்.

ஆகா—காதலுக்குத்தான் என்ன மகிமை! உலகமே காதலில் கட்டுண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது!

நான் இப்போது அவளைத் திருமணம் செய்து தீர வேண்டும்—அப்பா—சம்மதிக்க மாட்டார்—அந்தஸ்து குறைந்து விடும் என்பார்! இதற்கு என்ன செய்யலாம் சொல்லும்!

சிக்கலான பிரச்சினைதான்—பாளையக்காரர் மகன்—திருசங்குவின் மகள்—இருவருக்கு மிடையே நிறைய வித்தியாசம்! ஆனால் காதலோ தெய்வீகமானது. அதையும் மறுத்துவிட முடியாது!—ஆங்! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது!

என்ன—என்ன? திருசங்கு! நீரும் கேளும்!

அப்பாவுக்கு உங்களைத் தவிர பிள்ளையில்லை—ஆகையால் அவர் உங்களை வெறுத்துவிட முடியாது!—அதற்காக திருமணத்துக்கு சம்மதம் கொடுப்பாரா என்று கேட்டால், அதுவும் தர மாட்டார்! அதற்கு ஒரே வழிதானிருக்கிறது. பெண்ணை வெளியூருக்கு அழைத்துக்கொண்டுபோய் ரகசியமாக திருமணத்தை முடித்துவிட வேண்டும். திருமணம் முடிந்த பிறகு அப்பா சிறிது கோபமடைவார்—பிறகு தானே சமாதான மடைந்துவிடுவார்! விஷயம் சுலபமாக முடிந்து விடும்.

ஆங்—மிகவும் சரியான யோசனை!—வேதாளத்தின் மூளையிலே மட்டும் உதிக்கக் கூடிய வெற்றிகரமான யோசனை...... என்ன திருசங்கு!

தங்களிஷ்டப்படி நடக்கிறேன் தம்பி!—

அப்படியானால் உடனே நடக்கவேண்டியதை கவனிப்போம்.

வேதாளத்தின் விகாரமான முகம் விசாலமாகிறது பயங்கரமான கண்களிலே இன்னும் அதிக ஒளி குவிகிறது. "முட்டாள்கள்—என்னிடம் வந்து யோசனை கேட்கிறார்களே; நான் எனக்கு சாதகமாகத்தானே யோசனை சொல்வேன்! வேதாளம்! வெற்றி அழைக்கிறது உன்னை வேகமாய் நட!"

என்று அவன் வாய் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறது.

★

[வேங்கைபுரம்

வீரர்களின் பாசறை... மதுக்கிண்ணங்களும் அதை ஏந்தி நிற்கும் மங்கையர்களும்! இதழிலே மதுக்கிண்ணங்களை வைத்தபடி அவர்களின் மடியிலே படுத்திருக்கும் போர் வீரர்கள். வீரர்களின் நிலையே இதுவானால்—சேனாதிபதியின் நிலை எப்படியிருக்கும். பட்டுமெத்தை—அதிலே சாய்ந்து கிடக்கும் வெற்றிவேலன். தலை தூக்க முடியாத அளவுக்கு போதை. நாவு எப்படி அசைகிறது என்பதை உணரமுடியாதபடி வெறியுணர்ச்சி. அவனைச் சுற்றிப் பெண்கள் அவர்கள் மீது சுழலும் அவன் கண்கள்.

அவனது சிவந்த விழிகளை வெற்றி கொள்ளும் பாவையரின் பவள இதழ்கள். வேலையும், வாளையும் ஏந்தி களம் புகுந்து பகைவரின் தலைகளைக் கையிலே ஏந்தும் வீரர்கள், மதுக்கிண்ணங்களை ஏந்தி—மலரடிகளை வருடிக் கிடந்தனர். தளபதி வெற்றிவேலனின் பிறந்த நாளாம் அன்று! அதை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆட்டமும், பாட்டும், கூத்தும், கூவலும், காதற்பேச்சும், காமச்சேட்டையும், சேனைத் தலைவனின் பிறந்த நாள் விழாவுக்கு மெருகேற்றின.

"ஆயிரங் கிண்ணம் மதுவும் சரி; உன் அதர பானம் ஒரு துளியும் சரி" என்று வீரர்கள் புகழ்ந்தனர்.

"யானையின் மத்தகம் போன்ற உன் தோளிலே சாய்வது தான் எத்தனை சுகம் எனக்கு" என்று பெருமூச்சு விட்டனர் அழகிகள்.

கோலாகாலம்! கொண்டாட்ட வாத்தியம்! கும்மாளம்! குதூகலம்! அனைத்தையும் காதில் வாங்கியபடியே அங்கே யொருவன் கிடக்கிறான், கடுமையான தண்டனைக்கு உட்பட்டு!