உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 33 · 33 / 61

“அத்தை! தெரியுமா சேதி? முத்தனை விலங்கு மாட்டி—வீதியிலே ஊர்வலம் நடத்தி வேங்கை புரத்துக்கு கொண்டு போய் விட்டார்கள்.”

ஒழியட்டும்! ஒழியட்டும்! அதற்கென்ன இப்போது—பெரிய செய்தியா அது?

ஆமாம் அண்ணா! ஏழைகளின் துன்பம் உங்களுக்குப் பெரிய சேதியே அல்ல! அவன் நம் வீட்டில் மாடுபோல் உழைத்திருக்கிறான். அவனை ஏன் நாம் மீட்டிருக்கக்கூடாது?

உனக்கென்ன பைத்தியமா பூங்காவனம்? பாருங்கள் சுவாமி! என் தங்கையின் பரிதாபம் யார்மேல் விழுகிறது என்று! ஏதோ ஒரு அனாதை!

உம்! எல்லாம் விதிப்படி நடக்கும். யாரும் தடுக்க முடியாது.

நல்ல விதி! சோம்பேறிக்கட்டும், சூதுக் காரர்க்கட்டும் சுலபமாக அகப்படுகிற வார்த்தை. விதியாம்—விதி!

ஆமாம் அத்தை! அப்பா பாளையக்காரராக இருப்பது அவர் விதி! சாமியார் பெண்கள் வெறுப்பது அவர் விதி! நீ கல்யாணம் வேண்டா மென்று காலங் கழிப்பது உன் விதி!

மணங்கெட்டி! அந்த விதியென்கிற வார்த்தை உன் வாயிலே அகப்பட்டு விழுகிறதே; அது அதனுடைய விதி!

சரி, இரண்டுபேரும் வாயை மூடுங்கள். தொலைந்து போனவன் பற்றி நீங்கள் ஏன் போர் தொடுக்கிறீர்கள்?

சாமியார் அசட்டுத் தனமாக சிரிக்கிறார். பூங்காவனம் அதைவிட்டுப் போய் விடுகிறாள். அவள் எங்கே போவாள்—போனால்! படுக்கையில் விழுந்தாள்! அழுதாள்! வழக்கம் போல அந்த மூன்று சிலைகளும் அவளைப் பார்த்து பரிதாபப்பட்டன.

★

[திருசங்கு வீடு

பூங்காவனம் அங்கே அழுதுகொண்டிருக்கிறாள். இங்கே முத்தாயி துன்பத்தின் எல்லையில் தூக்கி யெறியப்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு இனி யார்தான் ஆதரவு? தந்தையோ அவள் நல்ல வழிக்கு வர நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார். எத்தகைய இடையூறுகள் வரினும் அவைகளைத் துரும்பாக்கிப் போடும்—அவளது காதலனின் திருமுக தரிசனமும் இனிக் கிடைப்பதற்கு வழியில்லை. நூறு பொன்கள்—அவளது தந்தை, தன் மகளிப் பவனியும் திருவிழாவின் செலவுக்காக சேமித்து வைத்திருந்த திரவியம். அதைக் கொடுத்துத் தன்னுடையவனை மீட்கத் துணிந்தாள். அதற்குக் குறுக்கிட்ட வஞ்சகன்தான் யாரோ?

தடாகத்து நீரும் அதன் தெளிந்த அமைதியும் போலிருந்த அவர்களின் காதல் வாழ்வில் சந்தர்ப்பம் கல் வீசிவிட்டதே! சோகக் கண்கள் எட்டு திக்கிலுமிருந்தும் பாய்ந்திடுகின்றன அவள் மீது! அவளால் அழுவதைத் தவிர வேறெதையும் செய்யமுடியவில்லை. வாய் திறந்து கதறி அழுவது அவளுக்கு ஆறுதல் போலும்! சுமதி வருகிறாள். அவள் வரவேற்கப்படவில்லை. “முத்தாயி” எனக் கூப்பிடுகிறாள் வாய்நிறைந்த வாத்சல்யத்தோடு!

எங்கே வந்தாய்—காதகி!... வேண்டும் மென்று கேட்டிருந்தால், நூறு என்ன—ஐநூறு பொன் எப்படியாவது தேடித் தந்திருப்பேனே உனக்கு! கேவலம்: நூறு பொன்னுக்காக, எங்கள் இருவரையும் பிரித்துவிட்டாயே—பாவி!

முத்தாயி! நீயா என்னைப்பற்றி அப்படி நினைக்கிறாய். நான் சொல்வதைக் கேள்.

மூதேவி! என் முகத்திலே விழிக்காதே! போய்விடு!

முத்தாயி!

போய்விடு என்றால் போய்விடு! பொல்லாதவளே! நான் என்ன உனக்குத் தீங்கு செய்தேன்—எனிப்படி பழிவாங்கினாய்? பாசமுள்ளவள் போல நடித்தாயே—அப்போதெல்லாம் நீ இப்படி மோசம் செய்வாயென்று எனக்குத் தெரியாதடி!

முத்தாயி!

பேசவேண்டாம் நாசக்காரி! என் முன்னே நிற்காமல் உடனே போய்விடு!

போய் விடுகிறேன்—ஒரு காலம் வரும், அப்போது நீ என்னை உணருவாய்!

கண் கலங்கியபடி சுமதி அதை விட்டுப் போய்விடுகிறாள்.