உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 31 · 31 / 61

ஆகா! அவள்தானா? பொன் வார்த்து என்று புகன்றீரே அவள்! புலவர் மொழியிலே அன்னம் என்று சொல்லும்! சொர்ணம் என்று கூறும்! அடடா! சொக்கத் தங்கத்திலே உளிபட்ட இடம்போல பிரகாசிக்கும் கன்னங்கள்! அவள் இதழ்களே கோவைப்பழம் என்று எண்ணி கொத்துவதற்காக வளைந்த கிளிமூக்கு! மனிதனை மயக்குவதற்கே மாயனால் படைக்கப்பட்ட மாம்பழ மேனி!

வெற்றிவேலனுக்கு வண்டியில் உட்கார்ந்திருக்கவே இயலவில்லை.

முத்தாயி—சுமதி இருவரும் அந்த ஊர்வலத்தின் அழகிலே கண்ணை செலுத்திக்கொண்டிருந்தனர். தளபதியின் வண்டியும் அவள் வீட்டை விட்டு நகர்ந்து விட்டது. அதற்கடுத்தாற் போல்? முத்தாயி பார்த்துவிட்டாள் அவனை! ஆம் அவள் நெஞ்சு நிறைந்த முத்தனை? அந்த ஊர்வலம்—அதிலே செல்லும் படைவீரர்—வேடிக்கைப் பார்க்கும் மக்கள் கூட்டம்—இசை முழக்கம்—எதுவுமே அவள் நினைவில் இல்லை. நடுவீதிக்குப் பாய்ந்தோடினாள், வீறிட்டலறியபடி!—

“அத்தான்! அத்தான்!”

“முத்தாயி!”

இடிமென வார்த்திய ஒலிகள் நின்று விடுகின்றன. பயங்கரமான அமைதி.

அய்யோ! அவரை விட்டு விடுங்கள்! இது என்ன கொடுமை! அத்தான்.

அப்போது வெற்றிவேலன் வண்டியிலிருந்து இறங்கி அங்கு வந்து விடுகிறான்.

யாரம்மா நீ? என்ன இது?

பிரபு! அவரை விட்டு விடுங்கள்!—

முத்தாயி! கிளியை விடுதலை செய்யும்படி கேட்கிறாய்; பூனையிடம்!

(முத்தாயியைக் கடைக் கண்ணால் பார்த்தபடி) ஏய் முத்தா! நீயல்ல கிளி!—

அத்தான்! நான் உங்களிடம் அவ்வளவு கெஞ்சிக்கேட்டும் கடைசியில் ஏமாற்றிவிட்டீர்களே—

என்ன செய்வது, எதிர்பாராமல் நடந்து விட்டது—போகிறேன் விடு.

போங்கள்! விடுதலையடைய உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் அவர்களிடம் சொல்லி ஒரு சட்டியையாவது என் நெஞ்சின் மீது வீசச் செய்யுங்கள்.

சே! கனியின் மீது கத்திவீச்சா?

முத்தாயி! குற்றம் என்மீதில்லை என்பதை யாவது நீ உணர்ந்துகொள்!

பிறகு யார்மீது? நான் அனுப்பியது வந்து சேரவில்லையா?

இந்நேரம், அங்கே திருசங்கு பிரவேசிக்கிறான்—கோபாவேசமாக!

மானங்கெட்ட பெண்ணே! வா இங்கே, என் அந்தஸ்தைச் சந்திசிரிக்க வைக்கிறாயே.

அப்பா! என்னை விட்டுவிடுங்கள். விட்டு விடுங்கள் அப்பா—விட்டுவிடுங்கள்! இதோ போகிற வண்டிகளில் ஒன்று என்னை சாகடித்துவிட்டுப் போகட்டும். இதோ என்னுயிரையே எடுத்துச் செல்கிறார்கள்—இனி இந்த நடமாடும் சவம் இருந்து என்னப்பா பயன்?—என்னை விட்டுவிடுங்கள்.

முத்தாயி அலறியபடி தெருவில் விழுந்து விடுகிறாள். திருசங்கு அவளைப் பிடித்துப் பரபர வென்று இழுத்துக் கொண்டுபோகிறான். அவளது பொன்னுடல் மண்ணில் தேய்கிறது. வெற்றிவேலன் தன் வண்டிக்குப் போகிறான். மீண்டும் வாத்தியங்கள் ஒலிக்கின்றன. ஊர்வலம் போகிறது.