இரத்தக் கண்ணீர்
காட்சி 23 · 23 / 61
ஆ!
வேங்கைப்புரத்து வீரர்களில் ஒருவன் நான்! இன்றோ நாளையோ, வேங்கைப்புரம் நான் வாழுமிடமாகிவிடும்.
யாரைக் கேட்டுக்கொண்டு, படையில் சேர்ந்தீர்கள்?
நான் யாரைக் கேட்பது. ஏழை முத்தனைக் கேட்டேன். முத்தாயி, மாளிகை ராணியாக வேண்டியவள், அவன் எண்ணத்தை விட்டுவிட என்றான். காதல் முத்தனே கண்ணீர் விட்டான். கரகரத்த குரலிலே, கம்மிய தொனியிலே, ஏழை முத்தன், கட்டளையிட்டான், முத்தாயியை மறந்துவிட என்று! மறந்துவிட்டேன்—என் சிங்காரியை மறந்துவிட்டேன். என் சிந்தையில் குடியேறிய செல்வத்தை மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன்.
மறப்பீர்கள். ஏன் மறக்கமாட்டீர்கள்! மனம் குன்றமாகப் போய்விட்டால், உணர்ச்சியற்ற மரக்கட்டையாக மாறிவிட்டால் மறப்பீர்கள். மறக்கிறேன் என்று சொல்லாதீர்கள்—மனதார நம்பியவள் மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறேன் என்று சொல்லுங்கள். நீங்கள் மறக்கும்படியாக நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்—பேராசைக்கார தகப்பனுக்குப் பெண்ணாகப் பிறந்ததைத் தவிர! காதல் என்றால் என்ன, கண்டவர் உருவத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியா காதல்?
கலைத்து எழுதும் சித்திரமா? அழியாத ஓவியம்—அசையாத இமயம்—காதல் என்று எண்ணியிருந்தேனே. அது பைத்தியக்காரத்தனந்தானா? நிலையில்லா செல்வத்திலே நீந்தி விளையாடு என்று எனக்கு நீதி போதிக்கிறீர்களே. சந்தைப் பொருளென்ன என்னை எண்ணிவிட்ட தந்தைக்கும் உங்களுக்கும் என்ன தான் வித்தியாசம்? ஏன் சிலையாக நின்றுவிட்டீர்கள்?
முத்தாயி!
காதலன் மறந்துவிட்டான்—காதலி வேறிடம் பறந்துவிட்டாள் என்று என் சரித்திரம் முடியாது துரையே! அவன் வாழ்க்கைத் துறந்துவிட்டான்—என்றுதான் முடியும்—சம்மதந்தானே? அப்படியானால் இந்த ஆடும் மார்கழியில், அதோ ஓடும் வெள்ளத்தில்—இரண்டில் ஒன்றில் என் பிணத்தைப் பார்க்க தயாராகிக்கொள்ளுங்கள்.
முத்தாயி—என்னை மன்னித்துவிடு.
மறதியை மறந்தும் நினைக்கமாட்டீர்களே.
படைத் தளபதியிடம் பெயரைப் பதிவுசெய்து விட்டேனே.
செய்தால் என்ன. விலகிக்கொள்வது பெரிய விஷயமா?
விலகிக்கொள்ளலாம். ஆனால்...
என்ன மறுபடியும் ஆனால்? வீரருக்கு அழகில்லை யென்று இலக்கணம் கூறுகிறீர்களா? நான் சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள்! மன்னித்து விடுங்கள் என்னை. நீங்கள் சேர்ந்திருப்பது படையே அல்ல! நாட்டை அடிமையாக்கி யிருப்பவனின் கோட்டைக் காவலர்களில் ஒருவராக நீங்கள் போகிறீர்கள்.
உண்மைதான். ஆனால் நான் சொல்லவந்தது...
என்ன?
படையில் சேர்ந்து விலகினால் அதற்குத் தண்டம், நூறு பொன் தரவேண்டுமாம். இல்லையேல் விடுவிக்க மாட்டார்கள்.
நூறு பொன்! சரி—நான் தருகிறேன்.
நீயா?
ஆமாம். என் திருமணத்திற்காக, அப்பா சேர்த்துவைத்து, யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருக்கிறார். இதற்கில்லாமல் அது வேறு எதற்காக? நாளை காலையில் அனுப்பிடுவேன் போதுமல்லவா.
போதும்—யாரிடம் அனுப்புவாய்.
என் தோழி சுமதியின் மூலமாக அனுப்புகிறேன்.
நானில்லாவிட்டாலும், அஞ்சல் மண், வேதாளத்திடம் கொடுத்துவிடச் சொல்!
சரி, அது போகட்டும். சாப்பிடுங்கள்.
