உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 22 · 22 / 61

ஏன் வருத்தமாயிருக்கிறீர்கள்?... இரண்டு நாட்களாக வரவில்லையே; நான் கோபித்துக்கொள்வேன் என்று முந்திக்கொள்கிறீர்களா?

ஒன்றுமில்லை முத்தாயி ...

பிறகென்ன கவலை ... இதைச் சாப்பிடுங்கள்.

கையிலுள்ள பொட்டலத்தை அவிழ்த்து, தின்பண்டங்களை நீட்டுகிறாள்.

எனக்கு ஒன்றும் வேண்டாம்.

உடம்புக் கென்ன? வேலை போய்விட்ட தென்று கவலையா? போனால் போகிறதே; இனிமேல் நாம் அடிக்கடி சந்திக்கலாம் அல்லவா!

சந்திக்க முடியாது.

ஏன். அன்று நடந்தது போல் நடக்குமென்ற பயமா? அதற்கெல்லாம் துணிந்து விட்டேன்.

தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உன் தந்தையை என்னால் எதிர்க்க முடியாது.

அரண்மனையில் அலுவல் பார்க்கிறார் என்பதாலா?

இல்லை. அவர், குயில் கூவ வேண்டிய இடம், குளிர்மலர்ச் சோலை யென்றிருப்பார்! நான் “இல்லை, குட்டிச் சுவரில்” என்று கூற முடியுமா?

நம்ப முடியாது. அவர் உங்கள் குளிர்மலர்ச் சோலையென்று கூறியிருக்கமாட்டார்.

என்னைச் சொல்ல அவருக்கென்ன வைத்தியமா? எனக்கே தெரியுமே—நான் சோலைவன மல்ல; பாலைவன மென்று!

நீங்கள் பாலைவன மானால் நான் அதிலே வளரும் பேரிச்சை மரம்.

முத்தாயி! பாலைவனத்திலே ஒட்டகம் கூட ஆகாரத்தை சேமித்துக் கொண்டுதான் பயணம் போகுமாம். நானோ, வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவதற்கே வகையற்றவன். வழி தெரியாதவன்.

வழி தானே உண்டாவதில்லை.

நானே கண்டு பிடித்து விட்டேன்.

என்ன கண்டு?

ஆமாம். ஒருவழி கண்டு பிடித்து விட்டேன்—ஒருவழி கண்டு பிடித்து விட்டேன்.

என்ன இது?... என்ன சொல்கிறீர்கள்?

உன்னை மறந்துவிட முடிவு கட்டிவிட்டேன்.

விளையாடுகிறீர்களா?

இல்லை. நிலைமை என் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. நான் படையிலே போர்வீரனுக்குச் சேர்ந்துவிட்டேன்.