உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 18 · 18 / 61

உங்கள் எண்ணம் போலவே எங்கள் வாழ்க்கை நடக்கும்.

நடக்காது முத்தா—நடக்காது! நடத்த முடியாது உன்னால்—அதற்குத்தான் உன்னிடம் கெஞ்சிக் கேட்க வந்தேன்—என் கைக்கிளியை! கேள் இதை! இப்போது நினைத்தாலும் முத்தாயி—பாளையக்காரர் அரண்மனையிலே—பளிங்கு மண்டபத்திலே—வாழ முடியும். ஆனால் நீ வீசிய வலையிலே விழுந்துவிட்டாள்.

நான் வீசவுமில்லை, அவள் விழவுமில்லை—நாங்களிருவருமே காதல் வலையில் சிக்கிவிட்ட புறாக்கள்!

அந்த வலையை அறுத்து என் மகளை விடுவிக்க வேண்டும். விடுவித்த பிறகு அவளைத் துரத்தும் வல்லூராக நீ இருக்கக்கூடாது!

துரத்தவேண்டிய தூரத்தில் அவள் இருக்க மாட்டாள்! முத்தாயி; என் தோளில் தொத்தும் கிளி.

என்னடா—மருமகப்பிள்ளை இப்படிக் கூச்சமின்றிப் பேசுகிறான் மாமனிடம் என்று எண்ணுகிறீரா—மன்னிக்கவும்.

முத்தா! வீணைக் கெடுக்காதே, ஒரு குடும்பத்தை. நீ வாழ வகையற்றவன்—வாழமுடியாதவன். என்னை விட்டுத் தள்ளு...... உன்னைப் போல ஒரு ஏழைக்குப் பெண் கொடுக்க எந்தப் பித்துப் பிடித்த தகப்பனாவது ஒப்புக்கொள்வானா? உன்னால் நடத்த முடியுமா, ஒரு குடும்பத்தை? நீயும் மனிதனாயிற்றே—கல்யாணம் பண்ணிக்கொண்டு, மாமனார் வீட்டை எதிர்பார்த்துக் கிடக்க உனக்கு மானமில்லாமலா போய்விட்டது. முத்தாயி சின்னப் பெண்—உலகம் தெரியாதவள்—காதல் பேசுகிறாள்.

இப்போது! கல்யாணமான பிறகு, காதல் கீதல் எல்லாம் கடையைக் கட்டிவிடும். காதுக்கு வைரத் தோடு, கழுத்துக்கு முத்துமாலை—இப்படி மாறிவிடும் பெண் கழுதைய புத்தி! முடியுமா உன்னால் அவைகளை வாங்கித்தர என் பெண்ணுக்கு! குடும்பம் இருக்கட்டும், திருமணத்திற்கு நிச்சயம் செய்ய ..... ஒரு பொன் நாணயம் வைத்து புரோகிதருக்கு தக்ஷிணை கொடுக்க வழியிருக்கிறதா உன்னிடம்.

முத்தா! ஆத்திரமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே! இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். அரண்மனையிலே வேலை பார்த்தாய்—அதுவும் போய்விட்டது! அஞ்சல் மனைக்கு, குதிரை தேய்த்துக் கொடுத்து அதற்குக் கூலியாக இந்த உள்ளங்கை போன்ற அறையிலே வசிக்கிறாய்—அந்த வேலையும் நீ பார்க்க முடியாது; இனிமேல்! அரண்மனை உத்திரவு தடுக்கிறது! இனி—வீட்டு நிழல்கள்—மரத்தின் நிழல்கள்—இவைதான் உனக்கு வாசஸ்தலம்! உன் வறுமையைப் பரிகசிக்கிறேன் என்று கவலைப்படாதே!

கவலையோடு கவலையாக இன்னும் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நீ உணர்ந்து பார்ப்பதற்காக. உனக்கு வயதாகியிருந்து—உலகத்தோடு ஒட்டி ஒழுகும் பழக்கமிருந்து—உனக்கு ஒரு மகனும் இருப்பதாக வைத்துக்கொள். அந்த மகன் தகப்பன் பெயர் தெரியாத ஒரு மணமகனுக்கு திருமணம் செய்துகொடுப்பாயா?

நீ செய்வாயோ என்னமோ—என்னால் முடியுமா? என் வைதீக மனம் இடம் கொடுக்குமா? யோசித்துப் பார்!—உன் அம்மா காவேரி என்று தெரியுமே தவிர அவள் உன்னை யாருக்குப் பெற்றாள் என்பது .....

அய்யோ போதும்!...

கதையைப் பொத்திக்கொண்டு பயனில்லை—கண்ணை அகலமாகத் திறந்தும் பயனில்லை. கருத்துக் கதவைத் திற! கொஞ்சமாகத் திற போதும்! சீரும் சிறப்பும், சிங்கார மாளிகையும் அழைக்கிறது என் மகளே! நீ அதை மறுக்கிறாயா? மறுக்கிறாயா முத்தா? மறுத்தால் அது அவள்மேல் உனக்குள்ள காதலுக்கு அடையாளமல்ல. அவளை சீரழிக்க வேண்டுமென்ற உன் கொடிய எண்ணத்துக்குத்தான் அடையாளம்! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்—உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்.

அவளை மறந்துவிடு. இல்லாவிட்டால் முத்தாயி, தன் தகப்பனை மறந்து விடவேண்டும். அப்படி மறந்துவிட்டால், மரக்கிளையிலே அனாதையாக, அந்தரத்திலே தொங்கும் இந்த திருசங்குவின் பிணம் உன்னை சபிக்கும்—பிணம் உன்னை சபிக்கும்!

அய்யா! என் உயிரை மறக்கச் சொல்கிறீர்—மறந்துவிடுகிறேன்.

[மகிழ்ச்சி பொங்க] முத்தா!

போய்வாருங்கள்.

திருசங்கு பூரிப்புடன் அதைவிட்டுப் போகிறான். முத்தன் அந்தச் சிறிய அறைக்குள் நடக்க ஆரம்பித்தான். அந்த நடையை ஒரு சாலையிலே நடந்திருந்தால் எத்தனையோ காத தூரத்தைக் கடந்திருக்க முடியும்!

★

[தென்றல் மாளிகை.

வெற்றிவேலன் முன்னிலையில், படைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வேதாளமும் அங்கே இருக்கிறான். படையில் சேருபவர் பலர் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக சோதனை செய்யப்பட்டு படையில் பதிவு செய்யப்படுகிறார்கள். ஒரு வாலிபனின் தோளை தட்டியபடி,

திடமான தோள்கள் உனக்கு—நீ விரைவில் என்னைப்போல் ஆகிவிடலாம். உன் பெயர் என்ன சொல்லு; வீரப்பனா? சபாஷ்!—

இன்னொருவனைக் காட்டி;

இவன் நெஞ்சு மிகவும் உறுதியானது. உனக்குப் படையிலே ஊதியம் மாத்திரமல்ல; பரிசுகள், பதக்கங்கள் எல்லாம் ஏராளமாகக் கிடைக்கும்.

சரிதான்; அய்யா அஞ்சல் மண் வேலையை விட்டு விட்டு, ஆருடம் பார்த்தா நல்ல வரும்படி வரும்.

அவனை, வெற்றிவேலன் தட்டிக்கொடுத்து,