இரத்தக் கண்ணீர்
காட்சி 16 · 16 / 61
கூட்டத்தினர் கலைந்து போகிறார்கள். தளபதியும் சாமியாரும் தனியிடத்தில் சந்திக்கிறார்கள்.
மிகவும் நன்றி செலுத்துகிறேன்!
கடமையைச் செய்தேன்.
தங்களைப் போன்ற மடாதிபர்கள் நாட்டுத் தொண்டாற்றக் கிளம்பிவிட்டால் இரண்டு உலகு வெளிச்சமடைந்துவிடும்.
முடிந்தவரையில் முயலுகிறேன்.
பின்னர் சந்திக்கிறேன்! வருகிறேன்.
திருச்சிற்றம்பலம்—அருள் நெறி வாழ்க!
சாமியார் தன் பீடத்தருகே வருகிறார். மருத்துவர் பூபதி மட்டும் அங்கேயே அமர்ந்திருக்கிறார். அவரைக் கண்ட சாமியார் திடுக்கிட்டு—
என்ன பூபதி! நீர் இன்னும் போகவில்லையா?
என்னயே நான் மறந்துவிட்டேன், சாமியாரே! உமது சொற்பொழிவில் உள்ளத்தையே தொலைத்து விட்டேன். ஆகா—என்ன பொருள் பொதிந்த வார்த்தைகள்—எத்தகைய போதையூட்டும் சொற்கள்.
போமய்யா! உயிரை வாங்காதீர்!
போகிறேன்! ஹிஹிஹி! “வாளையும் வேலையும் கொண்டாடே—வைகுந்தவாசனைத் தொழு! கையிலே கேடயம் ஏந்தாதே—கைலாசநாதனின் திருநீரை ஏந்து!” அது எங்கே? இப்போது “வளர்ந்துபோன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள். அதற்காகக் கைகளில் வாளேந்துங்கள்!!” இது எங்கே? எல்லாம் மாயை! மாயாஜாலம்! இல்லையா சாமியாரே!
பூபதி! போதும். போய் வாரும்.
புகழ்கிறேன் சாமியாரே! புகழ்கிறேன். ஆகா ஆண்டவனே! நீ எது எதற்குத்தான் பயன்படுத்துகிறாய்! உலகத்திலே தோன்றும் மகான்கள் எல்லாம் உன் அவதாரமென்றிருக்கிறார்கள். பரமாத்மாவாக அவதரித்து பகவத்கீதையை உபதேசித்து அர்ச்சுனனைப் போர் புரியச் சொன்னாய்! பிறகு பகவான் புத்தராகவும் நீயே அவதரித்தாயாம்! போர் புரிவது தீது என்று அசோகனுக்கு நல்வழி காட்டினையாம்! நீயே மரணப்படும்போது இந்த சாமியார் எம்மாத்திரம்! ஓ மறந்து விட்டேன்.
இவரும் மகான்! உன் அவதாரம்தானே!
பூபதி...
போதும் சாமியாரே! போற்றி! போற்றி! எனப் பாடுகிறேன்—பொறுமையிழக்கிறீரே—ஏன்?
தளபதி கூறினாரே உம்மிடம்; அதையும் கேட்டேன். உம்போன்ற மகான்கள்; நாட்டுத் தொண்டு செய்யவும் வேண்டும் என்றார்! வேண்டாமய்யா வேண்டாம். இந்த அடிமை நாட்டு மக்கள், பாவம்—நன்றியிருக்கட்டும்! நேரடியாக உமது தேசத் தொண்டை அவர்கள் அனுபவிக்க வேண்டாம்! அருள் நெறி வாழ்வது உம்போடு இருக்கட்டும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது—பூபதி!
மிரளுவது சாது அல்ல! சூது! வாது! தீது! இவைகள்தான் மிரளுகின்றன.
நமக்குள் என்னய்யா இப்படி வம்பு!
நமக்குள் என்ன—அந்த ரகசியத்தை சொல்லி விடுமே.
பூபதி—உம்மைக் கும்பிடுகிறேன். போய் விடும்!
