உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

இரத்தக் கண்ணீர்

காட்சி 14 · 14 / 61

★

[பூங்காவனத்தின் மாளிகை

பூங்காவனம் தன்னைக் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டாள். பேசத் துவங்கிறாள்.

“வா—முத்தா—வா!”

“என் கூப்பிட்டீர்கள்?”

“சொல்கிறேன்—அருகே வா”

“வேண்டாம்—இங்கே இருக்கிறேன்”

“என் கண்ணு! என் அருகே வா!”

“ஆ!”

“பயப்பட்டாதே”

முத்தனுக்கு நிற்க முடியவில்லை. பூங்காவனம் அவனிடம் முன்னேறி ஒரு அடி எடுத்து வைத்தாள். அவ்வளவுதான்—முத்தன் வெளியே ஓட ஆரம்பித்து விட்டான். “முத்தா! முத்தா!” என்று பூங்காவனம் அலறினாள். அவன் நிற்கவில்லை. பூங்காவனம் ஓடிப்போய் தன் படுக்கையில் விழுந்து விம்மியழ ஆரம்பித்து விட்டாள்.

அந்த சீனப் பீங்கான் சிலைகள் அப்படியே அவளைப்பற்றி நின்றுகொண்டிருந்தன.

காதற் புறாக்கள்—கன்றை நாடும் பசு—மான்தோல் வேங்கை, மூன்று சிலைகளும், முத்தன் ஓடியதைப் பற்றியோ இளையராணி பூங்காவனத்தின் இதயம் முகாரி ராகம் இசைப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் நிரந்தரமான கலை விருந்தை அளித்துக் கொண்டிருந்தன.

★

“இளையராணி! என்றுமில்லாத இந்த அக்கிரமத்துக்கு எப்படி துணிந்தாள்? கல்யாணமே தேவையில்லை யென்று கூறி கன்னிப்பெண்ணாக வாழத் கங்கணம் கட்டியவள் “கண்ணு வாராய்!” என்று என்னை அழைக்கிறாள்! வயதோ—நாற்பது ஆகப்போகிறது. இதுவரையிலே வைராக்கியத்தைக் காப்பாற்றியவள் “வா அருகே!”

என்று ஒரு குதிரைக்காரனைக் கூப்பிடுகிறாள். இப்படிப்பட்டவள் திருமணம் வேண்டாமென்று காரணம்தான் என்ன? கன்னியா? கள்ளியா? புரியாத புதிர்! கோமாளியின் தங்கை—குதிரைக்காரனிடம் கொஞ்சிடத் தாவுகிறாள். “ராஜா பர்த்துருஹரி” கதைத்தான் கேட்டிருக்கிறேன். இது அதைவிட வேடிக்கையாயிருக்கிறதே! சரி, சரி—இனி நமக்கு இந்த இடம் பொருத்தமில்லை. இங்கே இனியும் இருந்தால்—அடங்கிக்கிடந்து இப்போது அலைமோதும் அவள் ஆசை வெள்ளத்திலே எங்கேயோ ஒரு ஆபத்தான இடத்துக்கு அடித்துக்கொண்டு போகப்படுவான் இந்த முத்தன்!

வயிறு வளர்க்க—வாழ்க்கையை நகர்த்த ஒரு இடம் இருந்தது! அதையும் கெடுக்கும் ஆபத்து—அன்பு வடிவத்திலே வந்துவிட்டதே!

பூங்காவனம்—ஹ ஹ ஹ பூங்காவனத்திலே புயல் புகுந்துவிட்டது. அதன் எதிரே நிற்க நம்மால் முடியாதப்பா முடியாது! முத்தா முழுக்குப் போட்டுவிடு அரண்மனை வேலைக்கு!”

பூங்காவனத்திடமிருந்து ஓடிவந்த முத்தன் மனதிலே இப்போன்ற குமுறலும்—கொந்தளிப்பும் எழுந்தது. அவன் அரண்மனை வாயிலைத் தாண்டவில்லை. அப்போது, சுகதேவின் குரல் எழுந்தது.

“ஏ முத்தா!”

“என்ன சங்கு?”

“இனிமேல் நீ அரண்மனைக்குள் நுழையக்கூடாது”

“மிகவும் நன்றி”

“உனக்கு வேலையில்லை என்று நமது உத்திரவு”

“ஒரு ஏழை, தேவை என்று கேட்டதை இப்போது தான் முதன் முதலாகத் தருகிறது இந்த உப்பரிகை!”