உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சேரன் செங்குட்டுவன்

காட்சி 3 · 3 / 4

போர்! போர்! போர்! எனவே முழங்கிற்று முரசு ஒலி! பார்! பார்! பார்! அந்தப் பைங்கிளியின் உரிமையாளன்—பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம்பார்!—என்று பட்டாளத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார்! அந்தக் கட்டாணி முத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய்க் குவிந்து வரும் வெற்றிகளைக் கேட்டுவிட்டு! கோட்டைகள் விடுபட்டன! எதிரியின் குதிரைக் கால்கள் உடைபட்டன! வேழப்படை முறிபட்டது!

வேல்கள் பொடிபட்டன! எம், கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியெனக் கேட்குது! கேட்குது! எனக் குதித்திட்டாள்—புதுப்பண் அமைத்திட்டாள்!

வீரர்கள் வந்தனர்—வெற்றி உன் கணவனுக்கே என்றனர்! வேந்தனின் தூதுவர் வந்தனர்! வாழ்த்துகள் வழங்கினர்! வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர்—வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்! அந்த அழகி, ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள்—அப்போது, ஏனந்த மனிதன் வந்தானோ? இழவுச் சேதி சொல்வதற்கு!

“என்னருமைப் பெண்பாவாய்! கண்ணல்ல—கலங்காதே! களச்சேதி கடைசிச் சேதி, கேள்” என்றான்—

அந்தோ! மாவிலைத் தோரணங்கட்டி, மணவிழா மேடைதன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன்— மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டான்— ஆவிதான் போன பின்னும் உயிர்வாழும் ஆரணங்கு அச்சடித்தத் தமிழ்ப்பதுமை— கூவி அழுதாள்—கொத்தான மலர்

இந்தக் குடும்பம்! அதைக் கொத்தாமல் கொத்திவிட்ட கொடும்சாவைப் பழித்தாள்—இழித் துரைத்தாள்! இனி என்ன மிச்சம் என்றும், கனி அழுகிப்போனதென்றும் கதறி அழுதாள்!

பனிவெல்லும் விழிகாட்டி பனவெல்ல மொழி உரைத்து, பள்ளியறை கவிபாடும் நாளெல்லாம் மண் தானே? இனி இது தூங்காத கண் தானே? என அழுதாள்! அத்தான் பிணம் கிடக்கும் களம் நோக்கித் தொழுதாள்!

சோகத்தாள் வீழ்ந்துவிட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்! கெட்டதுதான் கெட்டது நம்குடி—முழுவதுமே பட்டொழிந்து போகட்டும் என எழுந்தாள்! மட்டில்லாப் புகழ்கொண்ட நாட்டுக்கே அன்றி, வீட்டுக்கோ வாழ்வேன் என்றாள்—

வட்டிலினால் நாழிபார்க்கும்விதங்கண்ட தமிழ்நாட்டுமாதரசு தொட்டிலிலே இட்டுத் தான் வளர்த்த தூயசெல்வன் அட்டியின்றிக் கல்விகற்க, ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்! அங்கு சென்றாள்—“அம்மா” எனப் பாய்ந்தான், அழகுமிழும் மழலைமொழி அன்புத் தங்கம்! “அப்பா, தாத்தா, ஊர் திரும்பினாரோ?”

என்றான்—“திரும்பிவந்து சாவூர் சென்று விட்டார்— கரும்பே—நீயும் வா!” என்றழைத்தாள். “என்ன வாங்கி வந்தார்?” என்றான்! “மானம்! மானம்! அழியாத மான” மென்றாள்— “மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக”—என்றாள்! வந்துவிட்டான்—குலக்கொழுந்து! குடும்பவிளக்கு எரிந்து கொண்டே, கூறுகின்றாள்— “எதிரிகளின் படையெடுப்பால்—நம் குடும்பம் தழை உதிர்ந்துவிட்ட மரமாகப் போனதடா தம்பீ! கவலையில்லை— களம் சென்றார் மாண்டார்!

ஆனாலும் இந்த, நிலம் உள்ளவரையிலும் ‘மானங்காத்தார்’ என்ற பெயர் பூண்டார்!

என் மகனே! நீயும் தோளில் பலம் உள்ளவரையில் பகையைச் சாடு! பரணி பாடு! இது உன் தாய்த்திருநாடு!—உடனே ஓடு!” எனத் தாவி அணைத்துத் தளிர் மகன் தன்னைச் சீவிமடித்துச் சிங்காரித்து, ரத்தக் காவி படிந்த வாள் கொடுத்துச் “சென்று வா மகனே, செருமுனை நோக்கி!”

என வாழ்த்திவிட்ட திருவிடத்துக் காட்சிதனைப்—போற்றிப் பாடாதார் உண்டோ!— திருமகளே! இந்தப் பூவுலகில்?...

(குறுக்கே வந்து) உண்டு! உண்டு!

என்ன?

அந்த உண்டு கொழுத்தவர் உண்டு உத்தமா! நம் வீரத்தைப் பழிப்போர் இந்த அவனியிலே உண்டு!

ஆ !

வேந்தரும் அரசியும் தனித்திருக்கும் வெள்ளிமாடத்திற்கு வந்திருக்கிறேனே என்று வியப்படைய வேண்டாம். இதை விட வியப்பான செய்தி ஒன்று கூறப் போகிறேன்....

புலவரே!....

நமது வீரம் பொல்லாத புல்லர்களால் தூற்றப்பட்டது மன்னவா!

தூற்றியவர்கள் இருக்கிறார்களா?

இருக்கிறார்கள்! வடநாட்டு மன்னர்கள் வால் நீட்டுகிறார்கள்

பிறகென்ன? அவர்கள் வாளையா நீட்டுவார்கள்?

கனகவிசயர் இல்லாத காலத்திலே இமயத்திலே படையெடுத்தோமாம்—அவர்கள் ஆளும்போது கால் எடுத்து வைக்கட்டும் பார்ப்போம் என்று கர்ஜிக்கிறார்கள்.

நமது வாளைப் பழித்தார்களா? அவர்களைத் தாள் பணிய வைக்கிறேன்; வேண்மாள்....வேலை வந்துவிட்டது, வீரத்துக்குச் சோதனை வந்துவிட்டது! வருகிறேன்!

சேரன் கொலுமண்டபம்

வாளேந்தி, தமிழகத்தில் புகழேந்தி வாழும் வேங்கைப் புலிகளே! வந்துவிட்டது உங்களுக்கு எல்லாம் அழைப்பு! வடநாட்டிலே மீண்டும் ஓர்முறை நம்வீரத்தை நிலைநாட்ட நல்லதோர் வாய்ப்பு! இமயத்திலே பொறித்திருக்கும் நம் சின்னங்களைப் பழித்தார்களாம். சிறுமதி கொண்டோர் சிலர்—புலியைக் கேலி செய்தான் போர்முனை காணா புல்லன். வில்லை இகழ்ந்தான் வீரத்தை விலை கேட்கும் வீணன் - கயலைப் பழித்தான் களம்புகு கதைகளைக் கேட்டறியாக் கசடன்.

உத்திரனும்—விசித்திரனும்—சித்தரனும்—சிவேதனும்—பைரவனும்! விழிக்காதீர்கள்! மனிதர்களின் பெயர்கள்தான் இவைகள்! இந்த மண்டூக மன்னர்களுக்குத் தலைவர்களாம் கனகனும்விசயனும் கங்கைக்கரைவாழ் காவலர்கள் காவிரிக்கரைக்கு அறைகூவல் விடுத்தார்களாம்! தோழர்களே! புத்தி புகட்டுவோம் அவர்களுக்கு—புறப்படுங்கள்!

சோழனுக்கும் பாண்டியனுக்கும் இல்லாத ஆத்திரம் தங்களுக்கு மட்டும் ஏன் மன்னவா?