உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சேரன் செங்குட்டுவன்

காட்சி 2 · 2 / 4

கங்கை நதி தீரத்திலே போராடினான்—தமிழன் காவிரியின் ஓரத்திலே புகழ் பாடினான். பொங்குகடல் அத்தனையும் கட்டி ஆண்டான்—தமிழன் பூதலத்தில் மேலவனென் றுலகம் போற்ற!

நிறுத்து! நிறுத்து!

நிறுத்தும் ஓய்!

பைத்தியக்காரன், கங்கை நதி தீரத்திலே போராடினான் தமிழன்! போராடுவான்! போராடுவான்! அவன் கனக விஜயன் காலத்திலே வந்து போராடினால் காலை ஒடித்திடுவோம் ஜாக்கிரதை.

ஹா! ஹா!! ஹா.!!!

கனகர் சொன்னது ஆயிரம் லட்சம் பெறும் புலவனே! இமயத்தின் நெற்றியிலே உம் மன்னர் புலி—வில்—கயல் சின்னங்களைப் பொறித்த போது எம்போலும் மன்னர்! ஈங்கில்லை போலும்!

ஏன்? காலில் விழுந்து காணிக்கை செலுத்தவா? பித்து மனம் கொண்டவரே; கேளீர்! இன்றே தென்னாடு திரும்புகிறேன். காவாநாவிற் கனகனும் விஜயனும் விருந்தின் மன்னர் தம்முடன் கூடி அருந்தமிழாற்றல் அறிந்திலராகிச் செப்பிய மொழிகளைச் சேரனுக்குணர்த்துவேன். மதோன் மத்தர்களே! மாண்டு விடவில்லை தமிழர் வீரம்! மீண்டும் சந்திப்போம். ஆண்டு கொண்டிருப்பவன் சேரன் செங்குட்டுவன்! சேரன் செங்குட்டுவன்!!

சேரனின் மண்டபம்

(செங்குட்டுவனும் வேண்மாளும் இருக்கின்றனர்.)

சுவையான கதையொன்று சொல்லுங்கள் அத்தான்!

சொல்லட்டுமா! சோழன் மகளைச் சேரன் மணந்தான்; சேரனுக்கு ஒரு செல்வன் பிறந்தான்! செல்வன் இந்தச் சிலையை மணந்தான்!

தெரிந்த கதைதானே இது.

நடந்த கதைகூட.

நடக்காத கதையொன்று சொல்லுங்கள் அத்தான்!

சுவைக்காது கண்ணே அது.

உம் ... சாதல் கதையொன்று.

ஊஹூம். இதோ புறநானூற்றிலே... ...

போதும்; வீரக்கதைதானே?

வீரத்தை மணந்த காதல் கதை! தந்தையையும் கணவனையும் பலிகொடுத்த பெண்ணொருத்தி, தன் மகனையும் போருக்கனுப்பிய புறகாட்சி! வேண்மாள். கொஞ்சம் கேளேன்!

நானே எழுதியிருக்கிறேன் புதிய நடையில்

காவிரி தந்த தமிழகத்து புது மணலில் களம் அமைத்துச் சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று போர் தொடுத்துக் கொண்டிருந்த காலமது! அந்நாளில் ஓர் களத்தில்,

தாய்நாடு காக்கத் தாவிப் பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதி கேட்டுத் தணல் வீழ் மெழுகானாள் தமிழகத்துக் கிளியொருத்தி! அனல்போலும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த, அவள் கணவனும் வந்திட்டான்! புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச் செய்தி தந்திட்டாள்.

“தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய்” என்றான். “இல்லை அன்பே!” முல்லைசூழ் இந்நாட்டுப் படையிலோர் வீரர் குறைந்திட்டால் நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ? இனித் தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்; அடைபட்ட கண்ணீர், அணை உடைத்ததத்தான்”என்றாள்.

அவன், குகைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென, புகைவிட்டுக் குமுறும் எரிமலையென. பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்! சூளுரைத்தான்; சுடர்முகம் தூக்கினான்; “சுக்குநூறுதான் சூழ்ந்து வரும் பகை!” என்றான், “நாடு மீட்காமல், வீடு திரும்பேன்” என்றான்!

நங்கையோ, நகை முழக்கம் செய்து, “நடந்திடுக கண்ணே” என்றாள்! “திரும்பி வருவேனோ, இல்லையோ? எதற்கும் இப்போது ஒரு முத்தம் இந்தா திரும்பு” என்றான்! கொடுத்தான்—பின் தொடுத்தான் பகைவர் மீது பாணம்!