உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சேரன் செங்குட்டுவன்

காட்சி 4 · 4 / 4

*

குயிலாலுவம்

(சேரன் செங்குட்டுவனுக்கும், கனக—விஜயருக்கும் நடைபெற்ற போரில் செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.)

வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன?

குயிலாலுவம்.

குயிலாலுவம், குறித்துக்கொள்! இந்தப் பாறைகள் அனைத்தும் பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள்! வெற்றி மட்டும் போதாது வில்லவா, அந்த வீணர்களை விடக் கூடாது.

காஷாய உடையிலே ரிஷிகளைப்போல் எங்கோ ஓடி விட்டார்களாம் கனக விஜயர்கள்.

சேர்; ஹா!...ஹா!........புதுமையல்ல........அவர்களுக்கு உரியதான ஒரே பழக்கம் அதுதான்!

(கனக விஜயர்கள் சாமியார் உடையில் கொண்டுவரப்படுகிறார்கள்.)

சேர்; யார் இவர்கள்?

வில்! கனக விஜயர்.

கனக விஜயர், கனக விஜயர். ஹா! ஹா! ஹா....! வீராதி வீரர்களே! நன்றாக இருக்கிறது போர்த்திறமை! முதுகு காட்டுவது—முக்காடு போடுவது—மறைந்திருந்து தாக்குவது—மகானாய் மாறுவது. ஹா! ஹா! ஹா! முனிவர் வேடத்தில் இருக்கிறீர்களே! இதற்குப் பதில் சொல்லுங்கள் புராணத்திலே தேவாசுர யுத்தம் எவ்வளவு நாள் நடந்தது?

பதினெட்டு ஆண்டுகள்!

ராம ராவணப் போர்?....

பதினெட்டு மாதங்கள்!

பாரதப் போர்?

பதினெட்டு நாட்கள்!

வீரர்களே, நினைவிருக்கட்டும். சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே நடத்திய போர், பதினெட்டே நாழிகையில் முடிந்துவிட்டது.

மன்னவா, மண்டியிடுகிறோம். மன்னித்து விடுங்கள்!

சேர்! மன்னிப்பதா? நான் மன்னிப்பதா? தமிழ்நாட்டு மண்ணில் வந்து மண்டியிடுங்கள், அது உங்களை மன்னிக்கட்டும்!

மன்னவா, தமிழகம் திரும்ப வேண்டாமா? புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றனவே.

புறப்படுவோம்—வில்லவா. அதற்குள் கண்ணகிக்குச் சிலை நாட்ட இங்கு கல் எடுக்க வேண்டுமல்லவா?

ஆமாம்,

அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான எருதுகள் கிடைத்து விட்டன. கனக—விஜயா, தமிழரின் வீரத்தின் மீது வீசினாய் ஒரு சொல்—இப்போது தூக்கு கல்!

- * -