பரதாயணம்
பகுதி 5 · 5 / 6
சீதை........
சே! சீதையை ராமன் எப்படா திருடினான்? சீதைதான் அவன் மனைவியாயிற்றே!....அவன் போகும்போது திருடிக்கொண்டு போனது விலை உயர்ந்த மாணிக்கம்! அதைக் கொடுத்தால் அயோத்தியாபுரிப் பட்டணத்தைப்போல் ஆறு பட்டணங்களை விலைக்கு வாங்கலாம்! அந்த மாணிக்கத்தை ராமன் திருடிக்கொண்டு போய்விட்டான்!
ஆமாம்!
மாணிக்கக் கல் திருட்டுப் போன சங்கதி கைகேயிக்கு அறிவிக்கப்பட்டது! அது எப்படி காணாமற் போயிருக்குமென்று கைகேயி ஆராய்ச்சி நடத்த ஆரம்பித்தாள்!
ஆமாம்!
அப்படி ஆராய்ச்சி நடத்தியதில்.....பார் புகழும் அந்த மாணிக்கக்கல்லை ராமன் தனது பாதரட்சையிலே மறைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்று புலன் கிடைத்து விட்டது கைகேயிக்கு!
ஆமாம்!
அப்போதுதான் பரதன் கேகய நாட்டிலிருந்து வந்து சேர்ந்தான். அவனிடம் கைகேயி சொல்லுவாள்: “தம்பி பரதா! ஈரேழு லோகத்திலும் காண முடியாத ஈடு இணையற்ற மாணிக்கக்கல்லை உன் அண்ணன் பாதுகையிலே மறைத்துக்கொண்டு போய்விட்டானாம்! மாணிக்கக் கல் இல்லாத அயோத்தி, சூரியனில்லாத வானம் போன்றது, கண் இல்லா முகம் போன்றது! எப்படியும் அந்தக் கல்லைத் திரும்பக் கொண்டு வரவேண்டும்” என்றாள்.
ஆமாம்!
அதற்கு என்ன வழியென்று தெரியாமல் பரதன் விழித்துத் திகைத்து நின்றான்.
ஆமாம்!
அப்போது கைகேயி சொல்கிறாள்: “பரதா! பயப்படாதே! சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும்! நீ இப்போதே ராமன் காட்டுக்குப் போவது கூடாது அவன்தான் நாடாளவேண்டும்” என்று கதறு! நான் சமாதானப் படுத்துவேன்! — கேட்காதே மந்திரிப் பிரதானிகளையெல்லாம் கூப்பிட்டுக்கொண்டு ராமனைத் தரிசித்து திருப்ப அழைத்து வருவதாகப் புறப்படு! புலம்பலை நிறுத்தாதே! அண்ணலே, அண்ணலே என்று அழு! அவன் பாதங்களைத் தொழு! நானிருக்கும் வரையில் அவன் நாட்டுக்குத் திரும்பிவரப் பயப்படுவான்!
ஒரு வேளை, அப்படியே அவன் திரும்பி வந்துவிடுவான் போல் ஜாடை தெரிந்தால் அதற்கு இடங் கொடுக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்! அவனுக்கு நேராகவே என்னைத் திட்டு!.... மந்திரிப்பிரதானிகள் எல்லாம் உன்னுடைய சகோதரப் பாசத்தை மெச்சுகிற அளவுக்கு நாடகத்தை நடத்து!
“அண்ணா, நீ தந்தை சொல் மறவாத தனயன்! தந்தையின் வாக்குபடித் தரணியை வெறுத்துவிட்டு, இப்படித் தவக்கோலம் பூண்டுவிட்ட நீயல்லவா உத்தமன்! நீயல்லவர் தெய்வம்!” இப்படிப் புகழ்ந்து பேசியே அனைவரையும் மயக்கு! “திரும்பி வருகிறேன்” என்று ராமன் சொல்வதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமே கொடுக்காமல், ஜாக்கிரதையாகப் பேசு!
ஒன்று மறந்துவிடாதே பரதா! ராமனின் பாதுகையிலே பதுக்கி வைத்திருக்கும் நமது மாணிக்கக்கல்! அதைக் கவர்ந்து வரவே இவ்வளவு ஏற்பாடும்! “நீ ஆளாவிட்டாலும் உனது பாதுகை நாட்டை ஆளட்டும்” என்று கெஞ்சிக் கூத்தாடி அதை எப்படியாவது பிடுங்கிக்கொண்டு வந்துவிடு!
மந்திரிப் பிரதானிகளுக்கு மத்தியிலே ராமன் மாணிக்கக்கல்லை எடுத்துக்கொள்ள முடியாது! விழிப்பான்! திகைப்பான்!
“வேண்டாமடா தம்பி, பாதுகையைத் தொடாதே, பாபம்!” என்பான்.
“பாதுகையா இது? பார்புகழ் தெய்வத்திருவடியண்ணா!” என்று கூறி நீயாகவே அவைகளைக் கழற்றி எடுத்துக் கொண்டு வந்துவிடு, மகனே!” என்பதாகக் கைகேயி கூறவும், பரதனும் நாடகத்தை நடத்தப் பரவசத்தோடு புறப்பட்டான்.
ஆமாம்!
அன்னையின் சொற்படியே, ராமனோ, லக்ஷ்மணனோ தன்னைக் கொன்றுவிடாமல் இருப்பதற்கான பாதுகாப்பாக ரதகஜதுரகபதாதிகளை அழைத்துக்கொண்டு பரதன் ராமனிடம் சென்றான். தந்திரமாகவும் சாகசமாகவும், அழுதும் புலம்பியும் அண்ணனிடத்தில் அவனுக்கு அழியாத பாசமிருப்பதாகக் காட்டிக் கொண்டான்! அதை அண்ணன் ராமனும் நம்பவில்லை — ஆனாலும் எதிரேயுள்ள மந்திரிப் பிரதானிகளுக்காக இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டார்கள்!
ஆமாம்!
அப்படி ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளும்போது என்ன நடந்தது தெரியுமோ?
மறைந்திருந்த புலி நகத்தால் குத்திக் கொன்றுவிட்டான்!
அடே முட்டாள்! அது சிவாஜி கதையடா!
ஆமாம்!
இருவரும் தழுவிக்கொண்டதைக் கண்ட அரண்மனை வாசிகள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தனர்!
