உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பரதாயணம்/பகுதி 4
நாடகங்கள்

பரதாயணம்

பகுதி 4 · 4 / 6

ஆமாம்!

இராஜ்ய பட்டாபிஷேகத்திற்கான காரியங்களையெல்லாம் பார்த்துவிட்டு, வழக்கம்போலத் தன் இளம் மனைவி கைகேயியிடம் காமக் களியாட்டத்தில் ஈடுபடுவதற்கான முஸ்தீபுகளோடு முதிய மகாராஜா தசரதர் பராக்! பராக்!!

பராக்! பராக்!!........

கைகேயி மாளிகையிலே வாசனைத் திரவியங்கள், பான விசேஷங்கள், வழக்கம்போல் எல்லாம் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. தசரத மகாராஜனுடைய பிரகிருதிவேகம் அதிகரித்தது! ராமனுக்குப் பட்டங் கட்டிவிட்டு, வனவாசம் செல்ல வேண்டுமென்று தீர்மானித்திருந்த அந்தக் கிழமகாராஜனுக்கு உள்ளமுழுதும் காதல்வேகம் பொங்கிட, “கைகேயி! கைகேயி!”

என அழைத்தான் — கைகேயி, எந்த நிலைமையிலே இருக்கிறாள்!

ஒரே ஆத்திரமாக------

ஆமாம்! தசரதன் வந்ததுதான் தாமதம்! ஒரு கூடை நெருப்பை அள்ளி அவன் தலையிலே கொட்டினாள்! குய்யோ முறையோவெனக் கத்தினாள்! மாரடித்தாள்! புலம்பினாள்! ஒப்பாரி வைத்தாள்!

ஆமாம்!

இப்படியெல்லாம் அவள் எதுவும் செய்யவில்லை. கேகயன் மகள் கேட்ட வரம் இரண்டு! ஒன்று ராமன் காட்டுக்குச் செல்லவேண்டும்; மற்றொன்று பரதன் நாடாள வேண்டும்!

ஆமாம்!

வரம் கேட்டதும் தசரதன் என்ன செய்தான்?

கொடுத்தான்.

கொடுக்கவில்லை. சூழ்ச்சி அம்பலமாகிவிட்டதே என நினைத்தான். அவள் காலிலே விழுந்தான். இருதயம் வெடித்துவிட்டது! இறந்துவிட்டான்! இப்போது கைகேயி என்ன ஆனாள் தெரியுமா?

விதவையானாள்!

அதுமட்டுமல்ல; ‘கன்யா சுல்க’ முறைப்படி அயோத்திக்கு அவள் அரசியாகிவிட்டாள்! இனி அவள் இட்டது தான் சட்டம்! இராமனைக் கூப்பிட்டாள்! “காட்டுக்குப் போ!” என்று கட்டளையிட்டாள்! இராமனும், சீதையும், இலக்குமணப் பெருமாளும் காட்டுக்குப் போனார்கள்! கைகேயி சொல்லாமலே நாட்டு மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது! நாட்டை ராமன் பறிக்கச் சூழ்ச்சிசெய்தான் என்ற சங்கதி, கேகய ராஜன் மூலமாக உலகமெங்கும் தெரிந்துவிட்டது!....பாட்டன் வீட்டுக்குப் போன பரதன் ஓடோடியும் வந்தான்!

ஆமாம்!

விஷயமனைத்தும் தெரிந்தது அவனுக்கு!

ஆமாம்!

தேசத்திலே உள்ள சில பிரமுகர்கள், பரதன் நாடாளுவது நியாயம்—ஆனால் ராமன் காட்டுக்கு விரட்டப்பட்டது என்னவோ அநியாயம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்! இதைக் கண்ட கைகேயிக்குக் கொஞ்சம் பயம் பிறந்தது! பரதன் மீது அயோத்தியில் உள்ளவர்களுக்கு நல்ல எண்ணம் ஏற்படவேண்டுமென்று நினைத்தாள். அதற்காக ஒரு தந்திரம் செய்தாள்! பரதனைக் கூப்பிட்டு, “என் செல்வச் சிரஞ்சீவி பரதா! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன் கவனமாகக் கேள்!

உன் தந்தை எனக்குக் கொடுத்த நாட்டை அபகரித்து உன் அண்ணனுக்குக் கொடுக்கப் பார்த்தார்! அப்பாவுக்குப் பழிவரக் கூடாதென்று நானே பழியைச் சுமந்துகொண்டு உன்னை நாட்டுக்கு உரியவனாக ஆக்கிவிட்டேன். ஆனால்—நாட்டிலே சிலர், ராமன் காடேகியதைப் பற்றி வருந்தி, உன்னை தூஷிப்பதாகத் தெரிகிறது. அதனால் நீ நல்ல பெயர்வாங்க, ஒரு நாடகம் நடத்தவேண்டும்!”

என்றாள்!

ஆமாம்!

அது என்ன நாடகம்? எப்படிப்பட்ட நாடகம்?

“த்ரீ டி” நாடகம்!

த்ரீடி நாடகமில்லையடா! திருடி நாடகம்!

திருடி நாடகமா?

ஆமாம்....ராமன் காட்டுக்குப் போகும்போது ஒரு விலை உயர்ந்த பொருளைத் திருடிக்கொண்டு போய்விட்டான்! அது என்ன பொருள் தெரியுமோ?........