உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பரதாயணம்/பகுதி 3
நாடகங்கள்

பரதாயணம்

பகுதி 3 · 3 / 6

இந்த விஷயம் அரண்மனையிலேயுள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது !........ ஆனால் கைகேயிக்கு மாத்திரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆமாம்!........

காரணம் என்னவென்றால்........

ஆமாம்!

என்னடா ஆமாம்.......?

காரணம் என்னவென்றால்........

(கோபமாக) என்னு சொல்லு!

கைகேயிக்குத் தெரிந்தால், தசரதன் மீது கோர்ட்டிலே கேஸ் போட்டுவிட்டு, பட்டாபிஷேகத்தை நிறுத்த ‘ஸ்டே ஆர்டர்’ வாங்கிவிடுவாள்!

அடே அதெல்லாம் இந்தக் காலம்!.....அந்தக் காலத்திலே கோர்ட் ஏது?........

அப்படியானால் இராவணனுக்கு “ஏரோப்ளேன்” ஏது சாமி?

ஏய்....அவசரக்காரா! அதற்குள் ஆரண்ய காண்டத்துக்கு வராதே!

செத்தாலும் ஆரண்யத்துக்குப் போக மாட்டேன் சாமி

அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா!....இப்படியாகத்தானே பரதனுக்கும் கைகேயிக்கும் தெரியாமல் ராமனின் பட்டாபிஷேகத்திற்கான காரியங்களையெல்லாம் தசரதன் கவனித்துக்கொண்டிருந்தான்....

ஆமாம்!

எப்படியோ கூனியென்னும் தோழிமூலமாகக் கைகேயிக்குச் சேதி எட்டிவிட்டது!

ஆமாம்!

சேதி கேள்விப்பட்ட கைகேயி, சீறும் பாம்பானாள்! அடுக்குமா இந்த அக்கிரமம் என்று ஆத்திரப்பட்டாள்! இதை எப்படித் தடுப்பது என்று கூனியிடம் யோசனை கேட்டாள்!

ஆமாம்!

உடனே கூனியாகப்பட்டவள், கைகேயியைப் பார்த்து “கவலைப்படாதே பெண்ணே! உன்னைக்கல்யாணம் செய்யும்போது, தசரத ராஜன் இந்த அயோத்தியை உனக்குக் ‘கன்யா சுல்க’மாக அளித்திருக்கிறார். அதை அடிப்படையாக வைத்துப் போர்க்கொடியை உயர்த்து” என்று யுக்தி கூறினாள்!

ஆமாம்!

அது கேட்டுக் கைகேயி, “வேண்டாமடி! என்னுடைய நாயகன் தசரதராஜனுக்கு தேச முழுவதும்சத்திய கீர்த்தி, உத்தமன், சிரேஷ்டன் என்றெல்லாம் புகழும் பெயரும் இருக்கிறது! அவன் அயோத்தியைமுன்பே-எனக் களித்து விட்டு, இப்போது பறித்துக்கொள்ளச் சூழ்ச்சி செய்கிறான் என்று நான் கூறுவேனேயானால், தசரத மகாராஜாவைப் பற்றி உலக முழுவதும் தகாத முறையிலே பேசுவார்கள்! வாக்கு மறந்தவர், வஞ்சகர் சூழ்ச்சிக்காரர், காமபோதையில் ராஜ்யத்தை அளித்துவிட்டு இப்போது கபட நாடகம் ஆடிப் பிடுங்கிக் கொண்டவர் என்றெல்லாம் என் கணவருக்குக் களங்கம் ஏற்பட நான் காரணமாயிருக்கமாட்டேன்” என்று சொல்லி அழுதாள்.

ஆமாம்!

உடனே கூனி, “அப்படியானால் ராமனே நாடாளட்டும்!” என்றாள் சிரித்துக்கொண்டே! அது கேட்டுக் கைகேயி, “அதற்கும் சம்மதிக்கமாட்டேன். அந்த துஷ்டனுடைய ஆட்சியிலே, என்கதியும் என்மகன் கதியும் என்ன ஆவது?” என்று பிரலாபித்துவிட்டு, மீண்டும் சொல்கிறதாவது: “கேளடி கூனி! கேகயத்தில் இந்தக் கிழவன் அளித்த ‘கன்யா சுல்க’த்தை, மக்களிடம் ஞாபகப்படுத்தி, அவருக்கு அபகீர்த்தி உண்டாக்காமல், அந்தப்பழியையும் பாவத்தையும் நானே ஏற்றுக்கொண்டு, அவருக்கு வரும் தீயபெயரை நான் பெற்றுத் தியாகம் செய்யப்போகிறேன்.”

என்றாள்! அது கேட்ட கூனி அதிசயத்தால் நிமிர்ந்துநின்று “எப்படியம்மா?” என்றாள்! “கேளடி கூனி! முன்பொரு முறை மன்னர், இரண்டு வரங்கள் அளித்திருக்கிறார். அதன்படி நான் எது வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம். அப்படி வரத்தைக் கேட்டு, பரதனுக்கு நாடும், ராமனுக்குக் காடும் வாங்கித்தரப்போகிறேன்.... இதிலே ஏதாவது பழி வந்தால், என் பர்த்தாவிற்காக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கைகேயி சபதம் செய்வதுபோலப் பேசினாள்!