உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பரதாயணம்/பகுதி 2
நாடகங்கள்

பரதாயணம்

பகுதி 2 · 2 / 6

அயோத்தியில் பஞ்சம் வந்திருக்கும்!

ஆங்!....முந்திரிக் கொட்டை! பிள்ளைகள் இருந்திருந்தால் தசரதன் சந்தோஷமாக இருந்திருப்பான்!.... தசரதனுக்கு அறுபதாயிரம் உற்சவ விக்கிரகங்களே இல்லாமல் மூன்று பேர் மூல விக்கிரகங்கள்! அவர்கள் கெளசல்யா — சுமித்திரை — கைகேயி......என்னும் நாமதேயமுடையவர்கள்!...... அதற்காக தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அந்த யாகத்திலே குதிரை வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட குதிரையை அணைத்துக்கொண்டு மூல மனைவியர் மூன்று பேரும் தூங்கினார்கள்!

ஆமாம்!

யாகத்திலே அவிர்ப்பாகம் வரவழைக்கப்பட்டது!

ஆமாம்!

அதை அந்த மூன்று மனைவிகளும் சாப்பிட்டுவிட்டு, யாகத்திற்கு வந்திருந்த ரிஷிகளோடு இந்திர போகத்தை அனுபவித்தார்கள்.

ஆமாம்!

அதனால் என்ன ஆயிற்று!

கற்பு போயிற்று!

இல்லையடா ! கரு உருவாயிற்று....

ஆமாம்!....

அகோ வாரும் பிள்ளாய் சிஷ்யா! இப்படியாகத்தானே, வால்மீகி ராமாயணத்து சுலோகத்தின்படி யாகம் நடை பெற்று, மூன்று பட்டமகிஷிகளும் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்.

ஆமாம் !

அந்தப் பிள்ளைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து யானையேற்றம் — குதிரையேற்றம் முதலிய எல்லா வித்தைகளையும் கற்றுக்கொண்டார்கள் !

ஆமாம்!

அந்த தசரதனாகப்பட்டவனுக்கு....மூத்த பிள்ளை ராமன் மீதுதான் மோகம், அன்பு எல்லாம்!.... அதனால் அவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து தேதி குறிக்க வசிஷ்ட முனிவரை வரவழைத்தான்!

ஆமாம்!........

இப்படியாகத்தானே வசிஷ்ட முனிவர் வந்ததும், அவரைப் பார்த்து தசரதன், — “அகோ வாரும், அன்பார்ந்த முனிபுங்கவரே! அடியேன் ஒரு விண்ணப்பம் செய்து கொள்கிறேன். அதாகப்பட்டது, நமது ராமச்சந்திரனுக்கு அயோத்தி யுவராஜா பட்டாபிஷேகத்தைச் செய்து முடித்துவிடலாமென நினைக்கிறேன்” என்பதாகச் சொல்லி நின்றான் — உடனே வசிஷ்ட முனிவர், தனது நரைத்த தாடியைத் தடவியபடிச் சொல்வதாவது:—

“கேளும் தசரத மகாராஜனே! முன்னொரு காலத்தில் கேகயன் மகள் கைகேயியை நீ விவாகம் செய்துகொள்ளப் போகும்போது நடந்ததை மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன் — வயதான உனக்கு பாரியாளாய் வர கைகேயி இணங்கவில்லை. கிழவருக்கு எப்படி இந்தக் கிளியைக் கொடுப்பது என்று கேகய ராஜன் மறுத்துவிட்டான். உடனே நீ கைகேயியின் சௌந்தர்ய ரூப லாவண்யத்திலே மயங்கித் தேன் குடித்த வண்டுபோல இருந்த காரணத்தால், கைகேயிக்கு அயோத்தியையே காணிக்கையாகத் தருகிறேன் என்று வாக்களித்து, அந்த க்ஷணமே அவளுக்கு ஆரிய தர்ம சாஸ்திரகிரமப்படி — ‘கன்யா சுல்கம்’ என்ற பெயரால் அயோத்தியைத் தாரை வார்த்துக் கொடுத்து, இந்த தேசத்திலே நீ கைகேயியின் பிரதிநிதியாக இருந்து ஆள்வதென்றும், கைகேயிக்குப் பிறக்கும் குழந்தைக்கே அயோத்தி சொந்தமென்றும், அப்படி அவளுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டால், அவளுடைய சகோதரன் யுதாஜித்து ராஜகுமாரனுக்கே அயோத்தி ஸ்வாதீனமாகுமென்றும் ஒப்பந்தம் செய்து கொடுத்து, கைகேயியை மணந்துகொண்டிருக்கிறாய்!

அதை மறந்துவிடாதே மகாராஜனே!” என்று பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்தி நின்றார் ரிஷி சிரேஷ்டர்!

ஆமாம்!

அதைக் கேட்ட தசரதன் கலகலவென நகைத்து, “என்ன சுவாமி! தாங்களே இப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து என்று பழமொழியே இருக்கிறது. அதன் பிரகாரந்தான் நான் கைகேயியை மணந்து கொண்டேன்!” என்றான். அதைக் கேட்ட வசிஷ்ட முனிவர், “ஆயிரம் பொய்யைச் சொல்லலாம். ஆனால் ஆரிய தர்மப்படி அயோத்தியை கைகேயிக்கு சுவாதீனப்படுத்திவிட்டாயே நீ; அதை அவளிடமிருந்து பறிப்பதுபோல் அல்லவா இருக்கிறது இந்த முயற்சி?”

என்று வியாக்யானம் செய்தார் முனிவர்.

ஆமாம்!

“எது எப்படியானாலும் சரி; என் மகன் ராமன்தான் நாடாளவேண்டும்! வசிஷ்ட மகரிஷியே! வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை. தாங்கள் பட்டாபிஷேகத்திற்கு சுப லக்னம் பார்த்துக் கொடுங்கள்! இது தான் நல்ல சமயம். பரதன் அவனுடைய பாட்டன் வீட்டுக்குப் போயிருக்கிறான். அவன் திரும்பி வருவதற்குள் ராஜ்யத்தை ராமனிடத்திலே ஒப்படைத்துவிடுகிறேன். பிறகு ராமன் பாடு; பரதன் பாடு! பார்த்துக்கொள்ளட்டும்; நமக்கென்ன?”

என்று தசரதன் கண்டிப்பாக மொழிந்ததைக் கண்ட வசிஷ்ட மகாமுனிவரும் பட்டாபிஷேகத்திற்கான சுப யோக சுபதினமொன்றைக் குறித்துக்கொடுத்துவிட்டு, ராமனையும் அழைத்துவரச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.

ஆமாம்!