பரதாயணம்
பகுதி 1 · 1 / 6
பரதாயணம்
காலட்சேப நாடகம்
கலைஞர் மு. கருணாநிதி
(பொதுக்கூட்டம் — மக்கள் கூடியிருக்கிறார்கள். அறிவியக்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர், பாகவதர் உடையுடனும் — இன்னொரு தோழர் சீடன் வடிவிலும் நின்று கொண்டு, பரதாயணக் காலட்சேபத்தை நடத்துகிறார்கள், இடையிடையே பாடிக்கொண்டு! கேட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். இதில் பிற்பகுதிதான் கற்பனை! முற்பகுதி — வால்மீகி ராமாயண உண்மை)
(காலட்சேப நடையில் இழுத்தாற்போலப் படிக்கின் இனிமை பயக்கும்)
அகோ வாரும் பிள்ளாய், சிஷ்யா! முன்னொரு காலத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும். இந்த உலகத்திலே ராஜரீகம் செய்து வந்தார்கள்.
ஆமாம்........!
உலகமென்றால்........?
உருண்டை வடிவமாக........சதா சர்வ காலமும் சுற்றிக் கொண்டேயிருக்கும்.
அட முட்டாளே! அது இப்போதுள்ள உலகமடா? முன்பெல்லாம் உலகமென்றால், கன்யாகுமரி முனையிலேயிருந்து இமயமலைத் தொடரிலேயுள்ள கைலாச மலையின் அடிவாரம்வரையிலே வியாபித்துப் பரந்து கிடந்ததாக்கும்!
ஆமாம்....ஆமாம்........!
அப்படிப் பரவிக் கிடந்த உலகத்திலே........அயோத்தியாபுரிப் பட்டணத்தை தசரத மகாராஜா ஆண்டு வந்தார்!
ஆமாம்!........
யார் ஆண்டு வந்தா?
தசரத மகாராஜா!....
அந்த மகாராஜாவின் அரண்மனையில்....அறுபதினாயிரம்....
(சிஷ்யனிடம் திரும்ப)
போர் வீரர்கள் இருந்தார்கள்.
(திகைத்து) போர் வீரர்களா?....... அடப்பாவி!.......போர் வீரர்கள் இல்லையடா!
ஆங்....(சமாளித்து) க்ஷமிக்கவும்; ஸ்வாமி, அறுபதினாயிரம் பொன் நாணயங்கள்!
அட புத்தி கெட்டவனே....பொறுடா பொறு!....நீ சொல்வதும் உண்மைதான் — பொன் நாணயங்கள்தான் — அவர்கள் உடம்பெல்லாம் பொன்தான்!.... தங்க நிறந்தான்! நீ சொல்லியபடி போர் வீரர்கள்தான்!.... ஆனால் அவர்கள் போரிடும் இடமே வேறு!.... தசரதனோடு பஞ்சணையிலே போரிடும் பாவையர்கள்! அறுபதினாயிரம் பத்தினிமார்கள்!
அய்யோடா ஆமாம்!
பிள்ளைகள் இருந்திருந்தால்........
