உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பரதாயணம்/பகுதி 6
நாடகங்கள்

பரதாயணம்

பகுதி 6 · 6 / 6

ஆமாம்!

உடனே பரதன், ராமனைப் பார்த்து அண்ணா! நீதான் தந்தை சொல் தட்டக்கூடாதென்று ஆரண்யம் வந்து விட்டாய்!....உனக்குப் பதிலாக உன் பாதுகைகளைக் கொடு! அவைகளுக்குப் பட்டங் கட்டி, அவற்றின் பிரதிநிதியாகநான் ஆளுகிறேன்” என்று, ராமனுடையகாலிலேயிருந்த பாதுகைகளைக் கழற்றிக்கொண்டான்.

ஆமாம்!

ராமனும் வேறு வழியின்றி, மாணிக்கக்கல் மறைந்திருந்த பாதுகைகளைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

ஆமாம்!

அப்படி ராமன் பாதுகைகளைக் கொடுத்ததிலும் ஒரு சூழ்ச்சியிருந்ததை பரதன் உணர முடியவில்லை. கைகேயியும் உணர முடியவில்லை!

ஆமாம்! உணரமுடியவில்லை!

பாதுகையிலே மாணிக்கக்கல்! மண்டலங்களை விலை கேட்கக் கூடிய மதிப்பு வாய்ந்த மாணிக்கக்கல்! அதனால் அவைகளைத் தலையிலே வைத்துத் தூக்கிக்கொண்டு போனான் பரதன்!

ஆமாம்!

பிறகு, தனக்குரிய நாட்டில் ராமன் படை எடுப்பது அநியாயம் என்று பரதன் வாதிட்டான்.

பதினாலு ஆண்டு தன் பாதுகை ஆண்டிருப்பதால் ஆளும் அனுபவ பாத்தியதை தனக்கே உரியது என்று ராமன் பதில் கொடுத்தான்........

ஆமாம்!

“பன்னிரண்டு ஆண்டுக்கு மேல் போனாலே பாத்தியதை வந்துவிடுகிறது; அதுவும்பதினாலு ஆண்டு என்றால் பாத்தியதை வந்தது நியாயந்தானே” என அண்டமா முனிவரெல்லாம் அபிப்பிராயம் தெரிவித்தனர்!

ஆமாம்!

உடனே, பரதன் நாட்டை விட்டு வெளியேறி நந்திக் கிராமம் என்னும் ஊரிலே தீக்குண்டம் வளர்க்கச் சொல்லி அதிலே குதித்து உயிர்விட்டான்!

ஆமாம்!

அந்த மாணிக்கக்கல்லும் அவன் மடியிலே இருந்து, நெருப்பிலே கருகி, வெடித்துச் சிதறிப்போயிற்று!

ஆமாம்!

இந்தப் பரதாயணத்தைப் படித்தவர்கள், படிக்கப் பக்கமிருந்து கேட்டவர்கள், கேட்டவர்கள் சொல்லிக்கேட்டவர்கள் அனைவருமே........

மோக்ஷத்திற்குப் போவார்கள்!

இல்லையடா இல்லை!... படித்தவர்களும் கேட்டவர்களும் மோட்சத்திற்கும் போகமாட்டார்கள்; மோசத்திற்கும் போகமாட்டார்கள்! பகுத்தறிவு பெறுவார்கள்!........

நமப் பகுத்தறிவுபதே!

பரதாயணம் முற்றிற்று!

*