உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
அனார்கலி/காட்சி 3
நாடகங்கள்

அனார்கலி

காட்சி 3 · 3 / 4

நடந்தவைகள் நடந்தவைகளாயிருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாயிருக்கட்டும். இந்தா, அனார்கலி! இலட்சம் பொன் தருகிறேன். எடுத்துக் கொண்டு போய்விடு, எங்கயாவது. இளவரசன் உன்னை மறந்துவிடட்டும்!

பொன்னுக்காகக் காதலித்திருந்தால் போய்விடுவேன்! நீர் தரும் இலட்சமென்ன, கோடி கோடியாக என்னைத் தேடி வந்து கொட்டக் குபேரர்கள் காத்திருக்கிறார்கள்! அவர்களும் சரி—நீர் தரும் இந்தப் பொன்னும் சரி—எனக்கு மண்ணுக்குச் சமானம்!....இந்த மண்ணுக்குச் சமானம்!

(மண்ணையள்ளிக் காட்டல்)

(அமைதியாக) கொஞ்சம் சிந்தனை செய், அமைதியாக! பிறகு பதில் சொல்! படை வீரன் என எண்ணிப் பாசம் வைத்தாய்! பாராள்பவன் எனத்தெரிந்ததும் மறந்துவிட வேண்டியதுதானே உன் கொள்கைப்படி! பெண்ணே! உன் ஸ்தானத்தில் நான் இருந்து, இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டால், கட்டாயம் சலீமை மறந்துவிடுவேன்!

நீர் மறந்து விடுவீர்........காரணம்.......நீர் அனார்கலி அல்லவே!

சரி, முடிவாக என்ன சொல்லுகிறாய்?

என் அபிப்பிராயத்திற்குத் தடையாக உங்களுக்கு அதிகாரம் கிடையாது!

என்ன?

அனார்கலியின் ‘காதல் சுதந்திரம்’ டில்லி ஏகாதிபத்தியத்திற்குப் பணிந்துவிடாது!

அதையுந்தான் பார்க்கிறேன்!

(அனார் அழுது கொண்டிருக்கிறாள் — ‘அனார்’ என்ற சலீமின் இன்பக்குரல் கேட்கிறது. அவளோ திடுக்கிட்டு மிதியுண்ட நாகம்போல் எழுகிறாள்.)

வருக வருக! இளம் மனதை ஏங்கவிட்ட ஏந்தலே, வருக!

அனார்! குறித்த நேரத்தில் வரவில்லை என்றுதானே கோபிக்கிறாய்?

கொலுமண்டபத்து மனிதர்களுக்கு நேரமாவது? நினைப்பாவது........?

கொலு மண்டபத்து மனிதன்! அப்பப்பா! எவ்வளவு ஆத்திரம்! அனார்! உன் கோபத்தில் என் அந்தஸ்தைக் கூட உயர்த்துகிறாயே!........ஏழைச் சிப்பாய் நான் என்று எண்ணம் செய்கிறாயா?

தெரியும் எனக்கு! தென்றல் நடை பேசும் தீரரே! போர் வீரனல்ல என் காதலர், புவியாளும் பாதுஷாவின் புதல்வர் என்று!

ஆ!

புரிந்துவிட்டது! நீங்கள் மூட்டிய புகை மண்டலம் மறைந்துவிட்டது! உண்மை உதய சூரியனைப் போல் வெளிக் கிளம்பிவிட்டது!

அனார்கலி! இல்லை...... இல்லை.......

(கோபமாக — அழுகையோடு) ஆமாம், அப்படித்தான்! நீங்கள் சலீம் இல்லேதான்! சாமான்ய சிப்பாய்தான்! நீங்கள் ஜரிகைப்பூ அல்ல! சாமந்திப்பூ! நீங்கள் மாளிகையின் வெள்ளி மரவல்லி! மணம் வீசும் முல்லை மலர்! என் நெஞ்சை தவழ்ந்தவர், ஒளிவிடும் தங்க ரோஜா அல்ல! பனி விழும் இன்ப ரோஜா! இனிய ராஜா அல்ல! இதய ராஜா! அப்படித்தானே சலீம்? அதுபோலத்தானே நான் நம்பி ஏமாறவேண்டும்?

அனார்!.......சொல்வதைக் கேள்!

கேட்டேனே பல முறை! “கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர் முனை செல்லும் பட்டாளத்து வீரனும் நான்” என்று கூறிய போலிப் பேச்சைக் கேட்டேனே பலமுறை! அப்போதெல்லாம் தெரியாதே எனக்கு அந்தஸ்து பேதத்தின் அளவு! தெரிந்திருந்தால், ஆகாயத்துச் சூரியனுக்காக இந்தத் தடாகத்துத் தாமரை மலர்ந்திருக்காதே பிறைக்கொடி காக்கும் பெம்மானின் பிள்ளையே! டெல்லி ஆதிபத்தியத்தின் எதிர்காலக் காவலரே! என்ன விழிக்கிறீர்?