அனார்கலி
காட்சி 2 · 2 / 4
நடனமாடு நான்! நாட்டுக்குப் பெருமை தரும் தகுதி எனக்கென்ன இருக்கிறது?
கொற்றவனின் கொலு மண்டபத்தில்.......
நான் ஆடும் நடனத்தால் நாடு புகழடைகிறது என்கிறீர்கள்—இல்லையா?
இல்லை....கொற்றவனின் கொலு மண்டபத்தில் மட்டுமே நீ ஆடவேண்டும்.
என்ன?
கோமகன் சலீமின் உள்ளத்திலும் நீ ஆடக் கூடாது!
என்ன?....சலீம்!....அவருக்கு ஓர் உள்ளம்! அதிலே என் ஆட்டம்?........
அதைக் காட்சியாக்கிக் காட்ட ஒரு தோட்டம்.
என்ன சொல்கிறீர்கள்?
ஏன் மறைக்கிறாய், அனார்கலி?....ஜோடிப் புறாக்களாக நீங்கள் பாடி மகிழ்ந்ததைப் பார்த்துவிட்டுத்தான் இங்கு ஓடிவந்திருக்கிறேன் நான்!
சரிதான். அக்பர் பாதுஷாவின் அதிகாரத்திலே காதல் புரிவது கடுமையான குற்றமென அவசரச்சட்டம் ஏதாவது!....
பிறக்கவில்லை.......ஆனால்.......அப்படிக் காதல் புரிவோர் தகுதி பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது!
காதலுக்குத் தகுதி! நடனப் பெண்ணும் நாடு காக்கும் போர் வீரனும் நேசிக்கக்கூடாதா ?
அவன் போர் வீரனல்ல, புவியாளும் மன்னன்.
ஆ!
அக்பரின் திருமகன்! இந்த அவனிக்கு அதிபதி!
ஆ!
சலீம்! சலீம்! சலீம் !
சலீம்! சலீம்! சலீம்! இல்லை, இல்லை. அவர் சலீம் இல்லை; சக்ரவர்த்தியின் மைந்தரில்லை! சிப்பாய்தான்! சிப்பாய்தான்! என் சிந்தை கவர்ந்த அவர் பொய் சொல்லமாட்டார்! பொய் சொல்லமாட்டார்!
நாடகமாடாதே! ஒரு நாடோடிப் பெண், சாதாரண சிப்பாயின்மீது சாகச வலை வீசமாட்டாள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும். சக்ரவர்த்தி, சபா மண்டபம், சப்ரகூட மஞ்சம், சாம்ராஜ்ய பவனி—இத்தனையும் ஒரு கண் வீச்சால் பெறலாம் என்ற முடிவு கட்டித்தான் முடியுடை வேந்தர் அக்பரின் செல்வனுக்கு நீ மோக போதை ஊட்டியிருக்கிறாய்!
போதும், நிறுத்தும்! அக்கினிப் பிழம்பாகப் போய்விட்ட என் உள்ளத்தில் ஆயிரம் தேளெனக் கொட்டாதீர்! அனார்கலி அன்பு காட்டியது ஒரு சிப்பாயிடந்தான்! செங்கோல் ஏந்தியின் மகனிடமல்ல!
இன்னுமா மறைக்கிறாய், அனார்கலி?
மறைத்தது நானல்ல! உங்கள் மகுடபதியின் மகன்தான் சிம்மாசனமேறிகளை நான் மதிக்கமாட்டேன் என்பது தெரிந்துதான் இளவரசர் சலீம் இவ்வளவு பெரிய பொய்யை என்னிடம் சொல்லியிருக்கிறார்!
