உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
அனார்கலி/காட்சி 1
நாடகங்கள்

அனார்கலி

காட்சி 1 · 1 / 4

அனார்கலி

நான்கு காட்சி நாடகம்

கலைஞர் மு. கருணாநிதி

(அனார்கலி, சலீம் காதல் கீதம். தூரத்திலிருந்து ராஜா மான்சிங் பார்க்கிறார்.)

அனார்கலி! அணுப்பொழுதும் உன்னைவிட்டு அகலாதிருக்க மார்க்கமொன்று தேடுகிறேன். கிடைக்கவில்லை!

நீங்களோ போர்வீரர்! உங்களுக்குத் தெரியாதா என்ன! உலகத்திலே நிரந்தரமான சமாதானம் நிலைத்த பிறகுதான், வானத்திலே வல்லூறுகளுக்குப் பதிலாக வெண்புறாக்கள் வட்டமிடும் நிலை ஏற்பட்ட பிறகுதான், வீரர்கள் வீட்டுக் காதல் விழாவில் இடைவேளை ஏற்படாமல் இருக்க முடியும். இல்லையா கண்ணே?

அனார்கலி! இரவு நேரம், சொல்லாமலே விடை பெறுகிறது; நம்மைக் கொள்ளாமலே கொல்லுகிறது! என் செய்வது, அன்பே!....புறப்பட்டுமா?

ஆமாம், கடமை அழைக்கிறது உங்களை!

அதை உன் காந்தக் கண் தடுக்கிறது. அதையும் உணருகிறேன். ஆனால்........

நாளைக்குச் சந்திக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் புலம்பும் என் இருதயத்துக்கு ஆறுதல்கூறி-வாய் உபசாரமாக வழி அனுப்பி வைக்கிறேன்.

அக்பரது குடைநிழலில் சிறு தவறு விளையவும் இந்த ஏழைச் சிப்பாய் காரணமாயிருக்கக்கூடாது, என் திழையே!

(தழுவுதல்) என்னுடையவரே!

வருகிறேன், கண்ணே........!

(பிரிகிறார்கள்)

(ராஜா மான்சிங் தனக்குள் ஏதோ ஒரு முடிவு செய்து கொண்டு அகலுகிறார் அந்த இடத்தைவிட்டு)

(அனார் தன் வீடு நோக்கி ஆனந்தமாகப் போய்க் கொண்டிருக்கிறாள் உலகை மறந்த நிலையில். அவள் வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அங்கே ராஜா மான்சிங் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறாள்.)

யார்?

ராஜா மான்சிங்!

ராஜா மான்சிங்!

ஆமாம்.......அக்பர் சக்ரவர்த்தியின் அமைச்சன், ராஜ நிர்வாகி, படைத்தளபதி....

(சாவதானமாக—ஆனால் குறும்பாக) அக்பருக்கு மைத்துனர் கூட! தெரியும் எனக்குப் பிரபு! தங்கள் வருகையால் ஏழையின் குடிசை எல்லையில்லாப் பெருமையடைந்தது.

ராஜ நர்த்தகி! என்னுள் உன் குடிசை பெருமையுற்றது என்கிறாய்; உன்னால் இந்த மண்டலமே பெருமையடைய வேண்டும் என்கிறேன் நான்!