அனார்கலி
காட்சி 4 · 4 / 4
திரை மறைவில் அனுபவித்த தேன் விருந்து! தெவிட்டிய பின் வீசி எறியவேண்டிய காதல் அமுதம்! அந்தத் தேவை தீருவதற்கு முன் தடைபோட்டு நிற்கிறதே என்று எண்ணுகிறீரா?....படைபோட்டு வாழும் பாதுஷாவின் மைந்தரே! சிப்பாய் நடை போட்டு வந்து என்னை ஏமாற்றியது போதும்! சென்றுவிடும்!
அனார்!... உன்னை நான் ஏமாற்ற எண்ணியதில்லை! ராஜ குடும்பம் என்றால் பயந்து விடுவாயே என்றுதான் போர் வீரன் என்று புகன்றேன்.
பயந்துவிடுவேன் என்றல்ல; மறந்துவிடுவேன் என்று! இணங்க மாட்டேன் என்று! சாதாரணமான மனிதர்களும் செய்யத் துணியாத சாகசம் சலீம் பாதுஷா செய்திருக்கிறார்! காரணம் அனார்கலியின் மீது அவ்வளவு அன்பாம் அவருக்கு! துள்ளி விளையாடும் புள்ளிமான் மீது அன்பு கொண்ட வேங்கை, வெள்ளாடு போல வேஷம் போட்டுக் கொண்டு வந்ததாம், பாசத்தைக் காட்டி நேசத்தை வளர்க்க! அப்படித்தானே பாதுஷா தங்கள் கதையும்?
அனார்கலி! போதும் நிறுத்து! சலீம், வேங்கையுமில்லை, வேஷம் போட்டவுமில்லை. ஆனால் நான் என்ன சொல்லி உன்னிடத்திலே வாதிட்டாலும் நீ நம்பப்போவதும் இல்லை. என் உள்ளத்திலே மெல்ல ஒலிக்கும் களங்கமற்ற காதல் கீதத்தை நீ கேட்க முடியாதபடி கோட்டைச் சுவர் தடுக்கிறது! இருதயத்திலே சித்திரமாக அமைந்துவிட்ட என் காதல் ராணி அனார்கலிதான் என்பதை நீ காணமுடியாதபடி ‘அக்பரின் மகன்’ என்ற திரை மறைக்கிறது! ஆகவே என் பேச்சும் பெருமூச்சும் உன் காதில் விழாது!
அனார்கலியின் ரோஜாப் பாதங்களின் அருகே சலீம் சவமாகக் கிடப்பதையே விரும்புகிறேன் என்பதை இப்போதே செயல் மூலம் காட்டிவிடுகிறேன். இதோ, அனார்! இதோ!
(சலீம் வாளை எடுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயலுதல்.)
(ஓடிப்போய்) சலீம்! சலீம்! என்னை மன்னித்துவிடுங்கள்!
அனார்! (இருவரும் தழுவுதல்)
(காவலர் வந்து)
உங்களிருவரையும் கைது செய்யும்படி அக்பர் பாதுஷா உத்தரவு!
(ராஜா மான்சிங் தொலைவிலிருக்கிறார்)
ஆ!.......ராஜா மான்சிங்!
(தொலைவில் இருந்தபடி)
ஆமாம்! அக்பர் ஆட்சி அப்படித்தான் ஆணையிடுகிறது (சலீம்—அனார் அழைத்துச் செல்லப்படுதல்)
(திரையில் குரல்)
சலீமும் அனார்கலியும் குற்றம் சாட்டப்பட்டனர். இருவருக்கும் அக்பர் பாதுஷா மரண தண்டனை விதித்தார் — அரசபரம்பரை அந்தமித்து விடக்கூடாது என்று எண்ணிய ராஜா மான்சிங் அக்பரோடு வாதாடி சலீமை மட்டும் விடுவித்தார்! அனார்கலியை உயிரோடு சமாதி வைக்க வேண்டுமென்று ஆணை பிறந்தது! சேதி கேட்டு சலீம் ஓடினான் காதலியை மீட்க! கண்மணியை மீட்க ஓடியவன் கண்டதென்ன? அய்யகோ! அதற்குள்........ அனார்கலி சமாதியில் மறைந்துவிட்டாள்!
*
அனார்! அனார்! மறைந்துவிட்டாயா என் மாசற்ற ஜோதி மழையே! பெண்ணிற் பெரும் பொருளே! பேரழகின் பிறப்பிடமே! என் கண்ணிற்படாமல் உன் கட்டழகைக் கல்லறைக்குள் மறைத்துவிட்டார்களா மாபாவிகள்! காதலுக்கோர் எடுத்துக்காட்டே! கவிஞர்களும் தொழுத்திட இயலாக் கற்பின் ஆரமே! சிரித்துச் செழித்த உன் சிங்கார முகத்தை எரித்துக்கெடுக்க வேண்டாமென்று, கல்லுகொட்டி மூடினரோ, கல்லினும் வலிய மனமுடையோர்? காதலி! அனார்கலி! அனார்கலி!!
பாவிகளே! என் அனார்கலியை அழித்துவிட்டீர்கள்! என் இதய ஜோதியை அணைத்துவிட்டீர்கள்! அமர வீணையை உடைத்து விட்டீர்கள்! காதல் மகாகாவியத்தின் சிரஞ்சீவிக் கதாநாயகியைக் கல்லறைக்குள் மூடிவிட்டீர்கள்! அவள் அழுகை மறைத்தீர்கள்! ஆனால் அற்ப சந்தோஷக்காரர்களே, அவள் சலீம் நெஞ்சத்திலிருந்து எடுத்தெறிய யாருக்கும் துணிவில்லை! யாருக்கும் திறனில்லை!.
நாடோடியாம் அவள்! நாடாள வேண்டியவனும் நான்! என் சுட்டுவிரல் அசைவுக்கு எட்டுத்திக்கும் பணியுமாம்! படை பல உண்டாம் எனக்கு! தடை பல கடக்கலாமாம் நான், பெரிய ஊர்போல் அரண்மனை! பிரும்மாண்டமான கோட்டை! எடுபிடி, ஆள், அம்பு, யானை, சேனை ஏராளம், ஏராளம்! மணி முடியுண்டு! பணிபுரியப் பலர் வருவர்! மந்த மாருதம் வேண்டுமா? அதற்கோர் சோலை! நீந்தி விளையாடவா? அதற்கோர் நீரோடை! பட்டு விரித்த தரையிலே பாதம் பட்டால் நோகுமோ என்று கவலைப்படக் கணக்கற்றோர்!
மொட்டு விரிந்த மல்லிகை நல்லதா, முல்லை நல்லதா, பஞ்சத்திலே பரப்ப—என்று யோசிப்போர் ஆயிரம் ஆயிரம்........
இவ்வளவும் இருந்தென்ன? இத்தனை சுகமும் கிடைத்தென்ன? இதயத்திலே குடியேறி விட்டவளை ஏற்றுக் கொள்ளும் உரிமை கிட்டாத எனக்கு? விருப்பியவளை அடைந்திடும் சுதந்திரமில்லாத எனக்கு? இவ்வளவும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அரண்மனை ஏன்? ஆடம்பரம் ஏன்? அரச வாழ்வு ஏன்? என் ஆணை கேட்க ஆயிரம் ஆட்கள் ஏன்? ஏன்? ஏன்....? அனார்கலி! உன்னை அடைய முடியாத இப்பாவிக்கு இத்தனையும் ஏன்? உயிரோடு உன்னைச் சமாதி வைத்ததைத் தடுக்க முடியாத இந்த அடிமை ராஜ குமாரனுக்கு ராஜ்யந்தான் ஏன்?
நீதியில்லாத பூமியில், என் அன்பே! எனக்கு வாழ்வுதான் ஏன்?
அக்பரின் மகன் ஒரு நடன மாதைக் காதலிக்கக் கூடாதாம். என் கட்டழகியை மூடியுள்ள கல்லறையே, நீ சொல்! ராஜ்ய அந்தஸ்து குறைந்துவிட்டது என்று அவளை நீ விழுங்கிவிட்டாய். முஸ்லீம் பாதுஷா அக்பர், ராஜபுத்திர ஜோதிபாயை மணந்து கொள்ளலாமாம். அந்த ஜோதிபாயின் மகன் ஒரு நடன சந்திரியை காதலிக்கக்கூடாதாம்! என் காதலியை விழுங்கியுள்ள கல்லறையே, நியாயந்தானா? சொல்! நீ இப்போது வழங்கியிருப்பது நல்ல தீர்ப்புதானா? சொல்....!
சொல்ல மாட்டாய்! உனக்கு உயிரைக் குடிக்கத்தான் தெரியும்! இதோ அந்த வேலையைச் செய்! உனக்குப் பழக்கமான அந்த வேலையைச் செய்!
(சலீம் சாகத்துணிகிறான்........அவன் மரணத்தை, அந்த மண்டலம் விரும்பவில்லை.)
*
