உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

புகுமுன் · 2 / 102

காலத்தால் மூத்த காப்பியம் தொல்காப்பியம். அது தொடங்குவது கடவுள் வாழ்த்துடன் அல்ல என்பது அதன் தனிச் சிறப்பு. தொல்காப்பியருடன் சேர்ந்து கற்ற ஒரு சாலை மாணவரான பனம்பாரனார் பாடியதே பாயிரமாக நின்று அந்த அற்புதக் காப்பியத்திற்குக் கட்டியம் கூறுகிறது. எல்லையினைத் தமிழ் நிலத்துக்குச் சுட்டிக் காட்டி, எல்லையில்லாப் பெருமை கொண்ட தமிழ் மொழிக்கு இலக்கணத் தோரணம் கட்டும் இந்தக் காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தைப் படித்தாலே நாம் நம்மையும் அறியாமல் செம்மாந்து நிற்போம்.

> வட வேங்கடம் தென் குமரி > ஆயிடைத் > தமிழ் கூறும் நல் உலகத்து > வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின் > எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் > செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு > முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் இந்தப் பக்கம் உரையற்ற வண்ண ஓவியமாக அமைந்துள்ளது. பூக்கள் நிறைந்த தோட்டச் சூழலில் பாரம்பரிய அணிகலன்களுடன் நிற்கும் பெண் ஒருவர், தனது கைகளில் மலர்களை ஏந்தியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இது “பூங்கா புகுமுன்” பகுதியின் மலர்/பூங்கா உருவகத்துடன் தொடர்புடைய அலங்கார ஓவியம். > புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல் > நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து > அறம் கரை நாவின் நான்மறை முற்றிய > அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து > மயங்காமரபின் எழுத்து முறை காட்டி > மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த > தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் > பல்புகழ் நிறுத்த படிமை யோனே” என்பபடி; வட வேங்கடம் தென்குமரியைத் தமிழகத்தின் எல்லையென எடுத்துக்காட்டி; எழுத்து, சொல், பொருளுக்கு இலக்கணம் இயம்பும் இந்நூல் நிலம் தரு திருவில் பாண்டியன் முன்னிலையில், புலவர்கள் கூடிய பேரவையில் ஐந்திரம் உணர்ந்த தொல்காப்பியர் எனும் தூயவரால் அதங்கோட்டாசானின் வாழ்த்துரையுடன் அரங்கேற்றப்படுகிறது எனப் பாராட்டும் இந்தப் பாயிரத்தைப் படிக்கப் படிக்க பலாச்சுளையின் சுவையின்பம் கிட்டுகிறது!

திருக்குறள் 1330க்கும் நான் உரையெழுதி வெளியிட்டபோது, இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று முகவுரையில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது தொல்காப்பியத்தைத் தொடுவதற்கே தயங்கித் தயங்கி, மலர் வனத்தில் நுழைந்த ஒரு மங்கை ஆங்குப் பூத்துக் கமழும் அனைத்து மலர்களையும் சூடிக் கொள்ள ஆசைப்படினும்; தன் தலை தாங்கும் அளவே ஆய்ந்து மலர்களைப் பறிப்பது போலவே நானும் பறித்தெடுத்துச் சூடிக் கொள்ளச் சுழன்று சுழன்று தொல்காப்பியத் தோட்டத்திற்குள் குறிப்பாக நூறு மலர்களைக் கொய்திடவும் அதனால் இன்பம் எய்திடவும் விரும்புகிறேன்.

1330 குறளுக்கும் உரை எழுதினேன் எனினும்; குறளோவியம் எனுமோர் புதுமையான எழுத்தோவியம் தீட்டிட ஏறத்தாழ நானூறு குறட்பாக்களையே பயன்படுத்திக் கொண்டேன். அதைப் போலவே தொல்காப்பியத் தோட்டத்திலும் சிறப்புறு சில செழுமலர்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிடவும், முயற்சி மேற்கொள்கிறேன். வழங்கிடப் போகிறாயா? நீ சூடியதைக் கொடுக்கப் போகிறாயா என்பீர்! சூடிக் கொடுத்த நாச்சியார் செயலை இறைவனே ஏற்றுக் கொண்ட கதை உலகம் நாட்டில்; நான் ஏட்டில் தானே சூடிக் கொடுக்கப் போகிறேன்; எனவே எனைப் பொறுத்து ஏற்றிடலாகாதா!

“இடைக்காலத்தே ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டபோது பழந்தமிழ் நூல்கள் மீண்டும் கற்கப்படத் தொடங்கின. இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர் போன்ற சான்றோர் பலர் தொல்காப்பிய மூலத்தையும் காத்து, உரை விளக்கமும் தந்துள்ளனர். அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு சுடர் விட்டு ஒளி வீசியது எனினும்; மீண்டும் நம் காலத்தே தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் போலும் பழந்தமிழ் நூல்கள் மக்களால் பயிலப்படத் தொடங்கின.

இவற்றுள் தொல்காப்பியம் அதற்குரிய சிறப்பினைப் பெற்று இன்னும் தமிழ் மக்களிடையே உரிய அளவு பரவவில்லை” எனும் கருத்தமைந்த கவலையைப் பெருமதிப்புக்குரிய தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல் அவர்கள் எழுதிய தொல்காப்பிய அணிந்துரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அணிந்துரை இடம் பெற்ற அந்த நூல்; “தொல்காப்பியம் தெளிவுரை” என்பதாகும். அதனை எழுதியவர் முனைவர் திரு. சு.வே. சுப்பிரமணியன் அவர்களாவார். அவர் கோவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணி ஆற்றியவர்.

பேராசான் பெருந்தகை வ.சுப. மாணிக்கனார் வழியில் தமிழ் ஆய்வு நடத்தி, புதிய நெறிகளில் மொழி இயல் பார்வைகளில் வளர்த்திட்ட பெருமைக்குரியவர். இந்தத் தெளிவுரை உள்ளிட்ட நல்லறிவாளர்கள் தீட்டிய உரைகள் அனைத்தையும், ஆய்வுகள், ஆக்க பூர்வமான கட்டுரைகள் அனைத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டுதான் துணிந்து நுழைந்தேன், தொல்காப்பியத் தோட்டத்திற்குள்! பலாப்பழத்தின் முள்; மேல் பகுதியில் இருக்கும். குத்திக் கிழிக்காது, ஆனால் கரடுமுரடு!

தொல்காப்பியப் பலாக் கனியில் அந்தக் கரடுமுரடுதான் எழுத்ததிகாரம் எனலாம்! சொல் உருவாக்க எழுத்து வேண்டுமே; வெறும் ஒலி மட்டும் போதாதே! சொல்லாம் பூட்டினால்தான் பொருள் இலக்கணமெனும் நல்லாரம் கிடைக்கும்! சுவை போலப் பொருளதிகாரத்தை எடுத்துச் சுவைத்திட இடையே சொல்லதிகாரத்தை எட்டிப் பார்த்தால் பலாச் சுளையைப் பாதுகாக்கும் பொறுப்பை அது ஏற்றிருப்பது புரியும்! இரண்டையும் கடந்து கைவிரிசை காட்டினால்; இலக்கியத் தேனில் நனைந்த இலக்கணச் சுளைகளைக் காணலாம்.

ஆம்; அதுவே பொருள் இலக்கணம்! பொருள் இலக்கணம் சொல்வதற்காகத்தான், சொல் இலக்கணத்தையும், எழுத்திலக்கணத்தையும் தொல்காப்பியர் சொன்னார் என்று உரைக்கின்றார் சு.வே. சுப்பிரமணியனார். உலகத்தோற்றமும், உயிர்களின் வகைப்பாடு, வளர்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கை முறைகள், அவற்றுள் வீட்டில் வாழும் அகவாழ்வு நெறி, சமுதாயத்துடன் பொருந்தி வாழும் புறவாழ்க்கை முறை, ஆடவர்க்கும், பெண்டிர்க்குமுரிய பண்புகள், அவர்களுக்குரிய குணநலன்கள், தேவையற்ற செயல்கள் போன்றவற்றைத் தொகுத்துக் கூறுகிறது பொருளதிகாரம்.

பொதுவாக மனித இன வளர்ச்சி பற்றித் தொல்காப்பியம் விளக்குகிறது. இன்று முகிழ்த்துள்ள சமுதாய முற்போக்குப் பேரொளியில் சங்க காலத்திற்கு முன்பு தமிழ் மக்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் பிற்போக்கு நிழல் படிந்தது போன்ற தோற்றம் காணப்படும். ஏற்க இயலுமா என்ற கேள்வி எழக்கூடும். இன்றைக்குத் திருத்தம் செய்து கொள்ளப்பட வேண்டிய பழைய பண்பாடுகள், வாழ்க்கை முறைகள், ஆடவர் பெண்டிர் உரிமைகள் பல இருப்பினும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நமது சமூக அமைப்பின் பண்பாட்டு அடிப்படையை அறிந்து கொள்ளத் துடிப்பதைத் தொல்பொருள் ஆய்வில் காட்டும் ஆர்வம் போன்றது எனக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

அணைகள் கட்டுகிறோம்; ஆலயங்கள் எழுப்புகிறோம்; அவை புதிய பாணியில் நவீன மிடுக்குடன் காட்சியளித்து நம்மைக் கவர்ந்த போதிலும்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சைக் கோயிலும், கரிகால் சோழன் எழுப்பிய கல்லணையும் புறந்தள்ளக் கூடியவைகளா; இல்லையே! அப்படி எண்ணிக் கொண்டுதான் தொல்காப்பியப் பூங்காவுக்குள் நுழைய வேண்டுமென அழைக்கின்றேன். தமிழ் மொழிப் பேராளிகளில் ஒருவரான தமிழ் ஆசான் முனைவர் இலக்குவனார் அவர்கள் தொல்காப்பிய ஆராய்ச்சி நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பல்துறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர்கள் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இது இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல் போன்றதன்று! அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழி ஆராய்ச்சியும், மேலை நாட்டவரால் விரும்பிப் போற்றப்பட்டு வரும் இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இயங்குகிறது.

.......... ஆகவே தொல்காப்பியர் வழி நின்று எழுத்தும் சொல்லும் பொருளும் (இலக்கியமும்) ஆராய்ந்து தமிழகத்தின் ஏற்றம் காண்போம்.” இலக்குவனாரைத் தொடர்ந்து என்னைத் தமிழாற்றலால் வயப்படுத்திய மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் அவர்கள், தொல்காப்பியத்தைத் தமிழரின் உயிர் நூல் எனக் கூறுகிறார். தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இந்திய மொழிகளிலோ, ஏன், உலக மொழிகளிலோ அதுபோன்ற ஒரு நூல் தோன்றியதில்லை என்பது ஆன்றோர் கருத்து – நூல்கள் தோன்றியிருக்கலாம், ஆனால் தொல்காப்பியம் போல் தோன்றியதில்லை.

எனவே நமக்கு, காலத்தால் மூத்ததும் சுவைத்துத் தின்றால் மட்டுமே சுவை வழங்கும் கரும்பனையதும் எளிதாகவும் இனிப்பு தரக் கூடிய கனிக்குவியலில் கொண்டதும் தொல்காப்பியம் எனலாம். அருந்தமிழாற்றல் உடையவனாக வளர எனக்கு உற்சாகமூட்டிய பேரறிஞர் அண்ணாவுக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் அவர்கள் துயிலும் திக்குநோக்கித் தொழுது வணங்கி, நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்குப் பிறகு நானும் ஆண்டு தமிழ் ஏடும் ஆண்டு வருகிறேன் என எழுதி எனக்கு ஊக்கம் பெருக்கிய அறிஞர் மு.

வரதராசனார்க்கு நன்றி நவின்று, என் தமிழ் ஆசிரியர்கள் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், முத்துகிருட்டிண நாட்டார், முனைவர் சி. இலக்குவனார், இராசகோபால் பிள்ளை ஆகியோரை நினைவுகூர்ந்து, முதலில் ‘எழுத்தை’ நெருங்குகிறேன். தொடர்ந்து ‘சொல் மலர்’, ‘பொருள் பூங்கொத்து’ மணம் நுகர மனங் கனிந்து என்னுடன் வாருங்கள்! அன்புள்ள, (மு. கருணாநிதி) தங்கல் : கோவா செப்டம்பர் 1, 2002.