தொல்காப்பியப் பூங்கா
பகுதி 01 · 3 / 102
எம்மான் தொல்காப்பியர், ‘எழுத்து’ என ஓலையில் தலைப்பு எழுதி விட்டு, சிந்தனை உறக்கத்தில் ஆழ்ந்தார். அவர் எழுதப்போகும் இலக்கண இலக்கியக் கருவூலத்திற்கான கனவில் மிதக்கத் தொடங்கினார். இமைகள் மூடியிருந்தன எனினும்; நெடுநேரம் மழை நீரில் ஊறிய நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலை காட்டுவது போல வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளிகாட்டிய வண்ணமிருந்தன. ஏட்டில் பதிந்து உழவு செய்வதற்கு முன்பு, கையிலிருந்த எழுத்தாணியைக் காத்திருக்கச் செய்து விட்டு அவர் இதயத்தில் ஆழ உழுதிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
செதுக்கிச் சிலை வடிக்க உளியும், ஓவியம் தீட்டத் தூரிகையும் போல ‘எழுத்து’ தேவையன்றோ நூல் படைக்க! எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதாலும் இஃது எழுத்ததிகாரம் என்பதாலும் முதல் நூற்பா எழுத்து எனத் தொடங்குகிறது. தொல்காப்பியரைப் பின்பற்றித்தான் போலும் அய்யன் வள்ளுவரும் “அகர முதல் எழுத்தெல்லாம்” என்று திருக்குறளை எழுத்திலேயே தொடங்கியிருக்கிறார்.
தமிழ் மொழியில் உள்ள பலவாயிரக்கணக்கான சொற்களை அலசி ஆய்ந்து பார்க்கும்போது, அவையனைத்தும் முப்பது எழுத்தொலியில் அடங்கிடும் என்ற வரம்பு, தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே வழி வழியாக வந்த ஒன்றாகும். அதனால்தான் காப்பியரின் அந்தக் கனவில் ஒலியெழுப்பியவாறு எழுத்துகள் அணிவகுத்து வீரநடை போட்டு வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முதலெழுத்தும் அவர் முன் நடந்து வந்து; வணக்கம் தெரிவித்து விட்டு வரிசையில் நின்றன.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என ஒரு முன் வரிசை அமைந்தது. பின் வரிசையில் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய எழுத்துகள் அணி வகுத்தன. அப்போது சுவர் ஓரமாக ஒரு நிழல் தென்பட்டது. அதைத் தொடர்ந்து இன்னொரு நிழலும் தென்பட்டது. அந்த இரு நிழல்கள் எழுப்பிய ஒலி சற்று குறுகியதாகக் கேட்டமையால், அந்த வேறுபாட்டை உணர்ந்த தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.
ஒரு நிழல்; என் பெயர் ‘இ’கரம் என்றது! இன்னொரு நிழல்; என் பெயர் ‘உ’கரம் என்றது! தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து; “நீங்கள் குற்றியலிகரம் – குற்றியலுகரம் என்ற வரிசையில்தான் இடம் பெறுவீர்கள். உங்களை முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் வைக்க முடியாது” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
அப்போது கையில் ஒரு கம்புடன் ஒரு புதுமையான எழுத்துருவம் அங்கே தோன்றி “இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?” என்று கேட்டது. உடனே தொல்காப்பியர் “என்ன; என்னை மிரட்டுகிறாயா? நீ ஆயுத மேந்தி ஆய்த எழுத்தாக வந்தால்; நான் அஞ்சி நடுங்கி உன்னை முதல் எழுத்துகள் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்ற நினைப்பா?”
அவரது சீற்றம் உணர்ந்த ஆய்த எழுத்து; “அய்யனே! என்னைத் தங்கள் விருப்பம்போல் அமர வைக்கலாம். முதல் எழுத்து வரிசையில் எனக்கு இடமளிக்காவிடினும், தேவைப்படும் முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்!” என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே, எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு; “நீ எனக்கு உதவிட வருகிறேன் என்கிறாய்; நல்ல வேடிக்கை!”
என்று புன்னகை புரிந்தவாறு கூறினார். “ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே; என் திறமையைப் பார்க்கிறீர்களா?” என்று ஆய்த எழுத்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர்; அவர் எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்த்தார். > எழுத்தெனப் படுப > அகர முதல் னகர இறுவாய் > முப்பஃ தென்ப > சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே > > (எழுத்ததிகாரம் – நூல் மரபு – 1) “முப்பஃ தென்ப” என்னும் தொடரில் ஆய்த எழுத்து வந்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.
தமிழ் எழுத்துகள் ‘அ’ முதல் ‘ன’ இறுதியாக முப்பது எழுத்துகள் எனக் கூறுவர்; சார்பு எழுத்துக்களான குறுகிய ஒலியுடைய ‘இ’கரம், குறுகிய ஒலியுடைய ‘உ’கரம், ஆய்த எழுத்து ஆகிய மூன்றும் இல்லாமல் முப்பது எழுத்துகள். > அவை தாம் > குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம், > ஆய்தம் என்ற > முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன > > (நூற்பா : 2) அலங்கடை = அல்லாத இடத்து குறிப்பு:- மூன்று எழுத்துகள் இல்லாமல் முப்பது எழுத்துகள் தமிழின் முதல் எழுத்துகள் என்பதால்; அவ்வாறு விடப்படும் அந்த மூன்று எழுத்துகளைக் குற்றியல் இகரம் என்றும் குற்றியல் உகரம் என்றும் ஆய்த எழுத்து என்றும் இந்த நூற்பா குறிப்பிடுகிறது.
