உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 02 · 4 / 102

ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். “உயிர் எழுத்துக்களை எப்படி நினைவு வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று! “அய்யா நான் சொல்லட்டுமா?” எனக் கேட்டான் மாணவன் மணிவாசகன் — “சொல்லேன் பார்க்கலாம்” என்றார், ஆசிரியர்! “பன்னிருகை முருகனை நினைவில் வைத்துக்கொண்டு; உயிர் எழுத்து பன்னிரெண்டு என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்” எனப் பதில் வந்தது. “ஓ! பக்தி பூர்வமாகப் பதில் அளித்திருக்கிறாய்; நல்லது!”

எனப் புன்னகை புரிந்தார் ஆசிரியர். பூங்கொடி என்ற மாணவி பதில் சொன்னாள்; “அய்யா! குறிஞ்சி மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன். அப்போது உயிர் எழுத்து பன்னிரெண்டு என்பதும் ஞாபகத்திற்கு வந்துவிடும்” ஆசிரியர், ஓர் உழவர் மகனைக் கூப்பிட்டு; அதே கேள்வியைக் கேட்டார்; “தம்பி; நீ எப்படி உயிர் எழுத்துக்கள் எத்தனை என்பதை மனத்திற் பதிய வைத்துக் கொள்கிறாய்?”

அவன் சொன்னான்; “தை மாதம் தமிழர் திருநாள் பொங்கல் வந்தால்; புத்தாடை புனைவோம் — இல்லம் புதுக்குவோம் — கதிர் வணங்குவோம் — காளை மாட்டுக்கும் பசுவுக்கும் அணிமணி பூட்டுவோம் — இந்த ஆண்டு அந்த விழா முடிந்தால் அடுத்த ஆண்டு அந்த விழா எப்போது வருமெனப் பன்னிரெண்டு மாதங்களை எண்ணிக் கொண்டிருப்போம் — அதே போல் பன்னிரெண்டு எழுத்துகள் உயிர் எழுத்துகள் என நினைவில் வைப்போம்.”

ஆசிரியர் நிமிர்ந்து உட்கார்ந்து; “சரி — மெய் எழுத்துக்கள் எத்தனையென்று எவ்வாறு நினைவில் கொள்கிறீர்கள்?” என்று வினவினார். “சபரிமலை அய்யப்பன் கோயில் பதினெட்டு படிகளை நினைத்துக் கொண்டால், மெய் எழுத்துக்கள் பதினெட்டு என்ற எண்ணிக்கை எளிதில் நினைவுக்கு வந்துவிடும் அய்யா” என்றான் அதே மணிவாசகன்! பூங்கொடி, வேகமாக எழுந்து விவேகமுடன் விளக்கினாள் “சோழன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலையெடுத்திட கல் கொண்டு வர குயிலாலுவம் என்ற இடத்தில் கனக விசயர் என்ற ஆரிய மன்னருடன் போரிட்டு வென்றான்.

அவர்கள் தலையில் கல்லேற்றச் செய்தான். அப்போது அவன் முழக்கமிட்டான்; “தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது! இராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள் நடந்தது! பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது! இமயம் வந்து இந்தச் செங்குட்டுவன் நடத்திய போர் பதினெட்டு நாழிகையில் முடிந்து விட்டது” என்று!

அந்த வீர உரையை நான் நினைவில் எப்போதும் வைத்திருப்பதால் அந்த உணர்வோடு, மெய் எழுத்துக்கள் பதினெட்டு என்பதை நீங்கள் கேட்டவுடன் சொல்லி விடுவேன்” ஆசிரியர் பூரிப்பு தவழப் பூங்கொடியின் முகத்தில் தட்டிக் கொடுத்து, பக்தி பூர்வமாகவோ அல்லது பகுத்தறிவு அடிப்படையிலோ பதில்கள் அளிக்கப்பட்டாலும் இரண்டுமே பொருத்தமானவைகளாக இருக்கின்றன எனக் கூறி அந்த மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். “ஒள கார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.”

(எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 8) ‘அ’ முதல் ‘ஒள’ வரை உயிர் எழுத்துகள். “ன கார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய் என மொழிப.” (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 9) ‘க்’ முதல் ‘ன்’ வரை மெய் எழுத்துகள்.