தொல்காப்பியப் பூங்கா
பகுதி 03 · 5 / 102
கடற்கரை மணல்வெளியில் நண்பர்களுடன் காற்றின் தழுவுதலைக் கண்மூடியவாறு அனுபவித்துக் கொண்டிருந்தேன். மாலை மறையும் நேரம். “அட, விளக்கெல்லாம் போட்டு விட்டார்கள்” என ஒரு நண்பர் கூறவே மெல்ல இமை திறந்தேன். காந்தியடிகள் சிலையருகே அமர்ந்திருந்த என் பார்வை அங்கிருந்து வடதிசையில் நேராக இருக்கும் அண்ணா நினைவிடத்தை வட்டமிட்டது. அந்த நினைவிடத்தில் வானோக்கி நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த கம்பத்தின் உச்சியில் மின் விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது.
அவர் மறைந்தபோது வானொலியில் நான் வாசித்த கவிதாஞ்சலி நினைவுக்கு வந்தது. மன்னிக்கவும்; மறந்து போனால் அல்லவா நினைவுக்கு வர! “நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல் நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்! நியாயந்தானா? கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல; நான் தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ? நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்? ...... .......... எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
..... .......... இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா..........நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா.... நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா.....” என் உதடுகள் இந்த வரிகளை உச்சரித்துக் கொண்டிருந்தபோதே கண்ணீர் நனைத்தது என் கன்னங்களை! துடைத்துக் கொண்டதைப் பார்த்துத் தணுக்குற்ற தோழர்கள் என் நினைவை திசை திருப்ப முயன்று ஏதேதோ ஊர்க்கதை பேசித் திரும்பவும் அந்த இடத்துக்கே வந்தனர்.
ஒரு நண்பர் : என்ன இருந்தாலும் தமிழ் தந்த அருங் கொடையைப் பாருங்கள். ‘அ’ வை முதல் எழுத்தாகக் கொண்ட அண்ணா நமக்குத் தலைவர் — இன்றைக்குக் ‘க’ வை முதல் எழுத்தாகக் கொண்ட கலைஞர் கருணாநிதி நமக்குத் தலைவர். நான் குறுக்கிட்டுச் சொன்னேன் : அய்யா! தமிழில் ‘க்’ என்ற மெய் எழுத்து தான் நான்! அத்துடன் ‘அ’ என்ற உயிர் எழுத்து சேர்ந்தால்தான் ‘க’ என்ற உயிர்மெய் எழுத்து, என் பெயரில் முதலாக அமைந்தது. அதனால் புரிந்து கொள்ளுங்கள்; ‘க்’ எனும் மெய்யுடன் ‘அ’ எனும் உயிர் சேர்ந்தே கருணாநிதியாக இயங்குகிறது.
“மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே” (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 18) (உயிர்மெய் எழுத்துக்களில் முதலில் மெய்யும் பின்பு உயிரும் ஒலிப்பதைத் தருகின்றன)
