உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 04 · 6 / 102

மேற்குத் திசையில் வெள்ளித் தட்டுக்குத் தங்கமுலாம் பூசியது போன்று ஒளியுமிழ்ந்து கொண்டிருந்த கதிரவன் இருளில் மூழ்கிட; தொடர்ந்து பிறை நிலா, பிள்ளையார் கோயில் வாசலில் உடைத்த தேங்காயில் சிதறிய துண்டு போல வானில் மிதந்த முன் இரவு நேரம். அந்தச் சிற்றூரின் திருக்குளத்தில் தவளைகளின் ‘அரகரா’ குரல் கூட அரைகுறைக் குரலாகவே கேட்டுக் கொண்டிருந்தது. தலையில் ஒரு கிழிந்த குல்லாய்க் கறுப்பு நிறத்தில், உடலில் ஒட்டைகள் நிறைந்த காக்கிச் சட்டை.

வரிந்து கட்டிய அழுக்கு வேட்டி இப்படி ஒரே மாதிரியாக இரண்டு பேர். நடுத்தர வயதினர். இருவர் கைகளிலும் சற்று நீண்ட பளபளக்கும் கத்தி. தெருவின் ஓரமாகத் திருக்குளத்தை ஒட்டியுள்ள புதர்களில் ஒளிந்தும் மறைந்தும், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும், குடிசைகள் மட்டுமே நிறைந்த அந்தப் பகுதியில் நடு நாயகமாக விளங்கிய ஒரே ஒரு மச்சு வீட்டின் பக்கமாக அவர்கள் இருவரும் வந்து சேர்ந்து வீட்டின் சுவர் ஓரம் பதுங்கிப் பதுங்கி நடந்து கொண்டிருந்தனர்.

எளியவர்களே வாழும் அந்த வட்டாரத்தில் அவர்கள் தேட்டை போடுவதற்குத் தேர்ந்தெடுத்தது அந்த மச்சு வீடுதான் போலும். இருவரும் ஒருவருக்கொருவர் சாடைகாட்டிக் கொண்டு; இருவரில் ஒருவன் மட்டும் துணிவை வரவழைத்துக் கொண்டு பலகணி வழியாக உள்ளே பார்வையைச் செலுத்தினான். கண்களுக்கு எதுவும் தென்படவில்லை. எண்ணெய் விளக்கின் வெளிச்சம் மட்டும் வீட்டுக்குள் நிறைந்திருப்பது தெரிந்தது. கண்ணில் எதையும் காணவில்லையென்றாலும் காதில் ஏதோ ஒரு ஒலி!

அதுவும் வலியினால் முனகுதல் போன்ற ஒலி — அ, இ, உ, எ, ஒ என்று ஒரு இளம் பெண்மணியின் குரல் ஒலி! பலகணியருகில் நின்று கொண்டு அந்த ஒலியைக் கேட்ட ஒருவன் மற்றவனிடம் சொன்னான்; “பிள்ளைப் பேறு போல இருக்கு இடுப்பு வலி வேதனை” என்று! இருவரும் கூர்ந்து கவனித்தனர். தொடர்ந்து இன்னொரு முதியவளின் குரல் “ஒரு மாத்திரை! ஒரு மாத்திரை!”

என்று கேட்கவே; திருடவந்தவர்கள் பேசிக்கொண்டனர். “ஏய், மருத்துவச்சி, மாத்திரையொன்றைக் கொடுத்து அந்தப் பெண்ணை விழுங்கச் சொல்கிறாள் போல இருக்கிறது!” இருவரும் மெல்லப் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த இளம் பெண்ணின் குரல், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்று முனகல் போல ஒலிப்பதாக அவர்களுக்குக் கேட்டது. இப்ப இதுக்கு இரண்டு மாத்திரை என்றாள் முதியவள். “ஏய், ஒரு மாத்திரையில் வலி குறையவில்லை. மருத்துவச்சி இப்போது இரண்டு மாத்திரை கொடுக்கிறாள்” என்று இருவருமே கருத்து பரிமாறிக் கொண்டு; “சரி, சரி வா போகலாம்.

பிரசவ நேரத்திலே போயி, பாவம் பெண்களைத் துன்பப்படுத்துவது கூடாது” என முடிவு செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் சென்ற பிறகு வீட்டுக்குள் இளையவளும் முதியவளும் பேசிக்கொண்டார்கள். “அதாவது பெண்ணே; அ, இ, உ, எ, ஒ, ஆகிய ஐந்து எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துகள்; ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துகள். அஃதன்னியில் மெய் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் ஒலி அளவு அரை மாத்திரை!”

“வாத்தியாரம்மா! எழுத்துக்களை வகை பிரித்து நன்றாகச் சொல்லிக் கொடுத்தீர்கள்! ஒரே ஒரு சந்தேகம்!” “கேளடி பெண்ணே; என்ன சந்தேகம்?” “மாத்திரை, ஒரு மாத்திரை, இரண்டு மாத்திரை, அரை மாத்திரை என்கிறீர்களே; என்ன அது?” “சாதாரணமாக கண்களை இமைப்பதும், விரலை நொடிப்பதும் ஒரு மாத்திரை என்ற ஒலி அளவாகும். இப்போது புரிகிறதா?”

“புரிகிறது அம்மா — தொல்காப்பியத்திலே நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த மாத்திரைகளை; ஏதோ மருந்து மாத்திரை; வீட்டில் யாருக்கோ வலித்தொல்லை — பிரசவ வேதனை — என்று நினைத்து இரண்டு திருடர்கள் பரிதாபப்பட்டு ஓடிவிட்டார்கள்” “அப்படியா? உனக்கு எப்படித் தெரியும்?”

“அம்மா; உங்களுக்குப் பார்வை கொஞ்சம் மங்கல் — நான் அவர்களைப் பலகணிப் பக்கம் பார்த்தேன் — அவர்கள் பேசியதையும் கேட்டேன்!” “பார்த்தாயா? தமிழ் இலக்கணம் நம்மைக் காப்பாற்றியிருக்கிறது — பெண்ணே! மருந்தையும் மாத்திரை வடிவில் தருவதுண்டு! ஆனால் இலக்கணத்தில் ஒலி அளவை ‘மாத்திரை’ என்று கூறுகிறார் தொல்காப்பியர்!

அதற்குரிய நூற்பாக்களைக் கேள்!” “அவைதாம் அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓர் அளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப” (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 3) “ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் அப்பால் ஏழும் ஈர் அளவு இசைக்கும் நெட்டெழுத்து என்ப” (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 4) “மெய்யின் அளவே அரை என மொழிப” (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 11) (அளவு = மாத்திரை) “கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.”

(எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 7)