உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 05 · 7 / 102

பழங்காலத் தமிழ்ப் பெருமன்னர்கள், புலவர் பெருமக்கள் எனப் பலரின் திருவுருவப் படங்கள் நிறைந்திருந்த பொலிவுமிகு மண்டபத்தில் தமிழ்த்தேன் பருகிடத் தவித்திருக்கும் ஒரு கூட்டத்தின் மத்தியில் “இனம்” எனும் தலைப்பில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார், விரிந்த நெற்றியும் விழிகளில் கூர்மையும், சற்றே நரைத்த இளந்தாடியும் கொண்ட வளவன் எனும் பெருமகன். வற்றாத நதிபோலக் கருத்துக்களை வாரி வழங்கும் ஆற்றல்மிகு அறிஞன்.

உலகிற் தோன்றிய இனங்கள், அவை உயர்ந்து நிற்கும் விதங்கள், அந்த இனங்களுக்கிடையே விளைந்த இரணகளங்கள் — இவற்றையெல்லாம் ஆண்டுவாரியாகவும், ஆதாரபூர்வமான வரலாற்றுச் சான்றுகளுடனும், ஆய்வாளர்களின் அழுத்தந்திருத்தமான கருத்துக்களுடனும் விருந்தாகவும் மருந்தாகவும் வழங்கிக்கொண்டிருந்த வளவன்; இனி நமது தமிழினத்தின் மாட்சியும் வீழ்ச்சியும் பற்றிப் பேசப் போவதாக அறிவித்து அவையோரை அரைக்கண் பார்வையில் நோக்கியபோது அவர்கள் தம்மை அறியாமல் தலை கவிழ்ந்து கொண்ட காட்சி, காம்பு கனம்தாங்காத காரணத்தால் குனிந்து கொண்ட கமல மலர் கூட்டம் போல் இருந்தது. வளவன் பேசினார்; தமிழர்கள் என்போர் ஒரே இனம் — ஆனால் தமிழ்தான் மூன்று இனங்களைக் கொண்டது.

மொழி பேசுவோர் ஒரே இனமாக இருக்கும்போது அவர்கள் பேசும் மொழி எப்படி மூன்று இனங்களாகப் பிரிந்து விளங்குகிறது. ஆமாம் பெரியீர்; அடியேன் கூறுவது அசைக்க முடியாத உண்மை! நமது தமிழ் மொழியின் மெய் எழுத்துக்கள் மூன்று இனங்களாகப் பிரிந்து காண்பதை, இதோ விளக்குகிறேன். க, ச, ட, த, ப, ற எனும் மெய் எழுத்துகள் வல்லினம்! ங, ஞ, ண, ந, ம, ன எனும் மெய் எழுத்துகள் மெல்லினம்! ய, ர, ல, வ, ழ, ள எனும் மெய் எழுத்துகள் இடையினம்!

இப்படி மூன்று இனமாக நமது தமிழ் எழுத்துகள் பிரிந்திருக்கின்றன. அதனால்தான் சொன்னேன்; ‘தமிழர்கள் ஓரினம் — தமிழ் மொழி மூன்று இனம்’ என்று!” இது கேட்டு இன்னமும் இலக்கண வாயிலில் முழுமையாக நுழையாத இளைஞர்கள் சிலர் எழுந்து சீற்றமுடன் முழக்கமிட்டனர். “என்ன அய்யா இது; மொழியின் எழுத்துக்களே மூன்று இனமெனில்; இது தமிழின் பெருமைக்கே குறைவன்றோ?”

அந்த அவனி கண்டு அஞ்சாத வளவன், அமைதியாக விடையளிக்க முன் வந்தார். “இளம் அடலேறுகளே! மொழிக்குள் கலங்கமெனத் தவறாகக் கருதிச் சீற்றம் கொண்டு சீறுகிறீர்கள் — இக்காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்கிறது. ஆனால் தமிழுக்கே கலங்கம் கற்பிப்போர் செயல்கண்டு இந்தச் சீற்றம் கொள்வீரேல், ஐந்தடி உயர மனிதன் நான் ஆறடியாக உயர்ந்து நிற்பேன் — தமிழ் மொழி; தமிழர் கூட்டத்தைவிட மிகுந்த அக்கறையுடன் வல்லினம், மெல்லினம், இடையினம் மூன்று இனத்தையும் தன்னகத்தே ஒன்றுபடுத்தி ‘தமிழ்’ என்று தலைநிமிர்ந்து நிற்கிறது பாரீர்!”

“எப்படி? எப்படி?” என்றது இளைஞர் கூட்டம். “தம்பிகளே! தங்கைகளே! தமிழ் என்ற சொல்லில் ‘த’ என்பது வல்லினம்! ‘மி’ என்பது மெல்லினம்! ‘ழ்’ என்பது இடையினம்! இப்படி மூன்று இனத்தையும் மொழி இணைத்துக்கொண்டு வேறுபாடு விலக்கித் திகழ்கிறது! ஆனால் அந்த மொழி பேசும் தமிழர் எத்தனை முரண்பாடு கொண்ட பிரிவுகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறோம் — அதனை சிந்தித்துப் பாருங்கள். வல்லினம், மெல்லினம், இடையினம் ஒன்றுபட்டு “தமிழ்” என்றே தகத்தகாய ஒளி பாய்ச்சிடும் போது; தமிழர்கள் பல கூறுகளாகப் பிளவுபட்டுப் பாழ்பட்டுக் கிடப்பது நியாயந்தானா?”

அவை கலைந்தது — அவையோரும் — இளைஞர்களும் கலந்துரையாடியவாறு விடைபெற்றுக் கொண்டு பிரிந்தனர். இனத்துக்கு ஓர் எழுத்து இணைந்து “தமிழ்” உருவாகியிருக்கும்போது; ஏற்கனவே உருவான தமிழர் இனம் ஏன் சிதைந்து சிதறவேண்டும்? இக்கேள்வியே அனைவரது இதயத்திலும் பேருருக்கொண்டு பெருமூச்சாய்க் கிளம்பியது! வல் எழுத்து என்ப க, ச, ட, த, ப, ற (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 19) மெல் எழுத்து என்ப ங, ஞ, ண, ந, ம, ன (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 20) இடை எழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள (எழுத்ததிகாரம் — நூல் மரபு — நூற்பா : 21)