தொல்காப்பியப் பூங்கா
பகுதி 06 · 8 / 102
பாண்டியன் கொலு மண்டபத்தில் அதங்கோட்டாசான் சீரிய தலைமையில் கூடிய புலவர் பேரவையில்; தொல்காப்பியன் எனத் தம் பெயரை அமைத்துக் கொண்டு பழம் பெருமைக்கும் பண்பாட்டுக்கும் காப்பாக நூல் இயற்றிய தொல்காப்பியர் அந்த நூலை அரங்கேற்றியபோது, சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் கடற்கரை யோரத்தில் உலவிக் கொண்டிருப்பது போன்ற ஒரு கற்பனைக் காட்சி. மெல்ல நடந்து கொண்டிருக்கும் அவரது செவிகளில் வெள்ளத் தமிழில் நடைபெறும் விவாத உரையாடல் ஒன்று வீணை இசையெனக் கடற்காற்றோடு கலந்து தவழ்ந்தது.
திரும்பிப் பார்த்தார் பனம்பாரனார்! உற்று நோக்கினார்! கடற்கரைக் காற்று வாங்கும் மண்டபத்தில் ஐந்தாறு புலவர் பெருமக்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவரைக் கண்டதும் எழுந்து வணங்கி வரவேற்றனர். “என்ன உரையாடல்? ஏதேனும் கருத்து மோதலோ?”
எனக் கேட்டவாறு பனம்பாரனார் அருகிற் சென்று மண்டபத்தில் அவர்களிடை அமர்ந்தார். ஒரு புலவர் கூறினார்: “மோதுதல் ஒன்றுமில்லை. அண்மையில் அரசவையில் அரங்கேற்றப்பட்ட தொல்காப்பியரின் தொல்காப்பிய நூலில் எழுத்ததிகாரத்தில் எழுந்துள்ள ஐயப்பாடு குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்” “என்ன ஐயப்பாடு?”
என வினவினார் பனம்பாரனார். “ஒலி எழுத்துக்களின் பிறப்பிடங்களைக் கூறும் பகுதியில் அதாவது ‘பிறப்பியல்’ எனும் தலைப்பில் ஒவ்வொரு வகை எழுத்தும் தெளிவான அறிவியல் அடிப்படையில் வெவ்வேறு தன்மையில் தோன்றுமென்று குறிப்பிடுகிறார்” என்று ஒரு புலவர் தொடங்கியவுடன்; பனம்பாரனார் புன்னகை புரிந்து கொண்டே, “ஆமாம்.
மொழியில் முதலில் தோன்றியது ஒலி மட்டும்தானே — பின்னர்தானே ஒலிக்குரிய எழுத்துகள் தோன்றின. அந்த எழுத்துக்களையோ அந்த எழுத்துகள் சேர்ந்த சொற்களையோ உச்சரிக்கும்போது மனித உடலில் அவற்றின் பிறப்பிடம் எது என்று கண்டு, அதனைக் குறிப்பிடுவது அறிவியலின் அடிப்படையில் அமைந்ததுதானே! வா, போ, என ஒலிக்கும்போது ‘வா’ என்ற எழுத்தின் ஒலி, மேல் வாய்ப்பல் வரிசைக்கிடையே கீழ் உதடு மடங்கிய நிலையில் வெளிப்படுகிறது.
‘போ’ என்ற எழுத்தின் ஒலியோ மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டிப் பிரிந்து திறந்தபின் வெளிப்படுகிறது. இதைத்தான் தொல்காப்பியர், உந்திக் கமலத்திலிருந்து காற்றுத் தோன்றி, அது மேலே வந்து தலை, கழுத்து, நெஞ்சு இவற்றில் நின்று, பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் (உள்நாக்கு மேல்வாய்) எனும் எட்டு உறுப்புக்களிலும் தொடர்புற்று எல்லா ஒலி எழுத்துக்களும் தோன்றும் என்று விவரித்துள்ளார். அவற்றில் பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும், தொண்டையிலிருந்து எழுந்திடும் ஓசைக் காற்றினால் பிறக்கும்.
அவற்றில் அ, ஆ, இரண்டு ஒலிகளும் வாயைத் திறத்தலால் பிறக்கும். உ, ஊ, ஒ, ஓ, ஒள என ஒலிக்கும் ஐந்து உயிர் எழுத்துக்களும் உதடுகளைக் குவித்துச் சொல்லப் பிறக்கும். அடி நாக்கு அடி அண்ணத்தைப் பொருந்தி ‘க’ வும் ‘ங’ வும் பிறக்கும். சிலர் ‘ல’ வுக்கும், ‘ள’ வுக்கும் வேறுபாடின்றி; குலத்தை குளம் என்றும் — களத்தை கலம் என்றும் பிழைபடப் பேசுகிறார்களே; அதைத்தான் தொல்காப்பியர் கவனமாக எடுத்துக்காட்டி, அண்ணத்தை ஒற்றி ‘ல’வையும், அண்ணத்தை நாவால் வருடியவாறு ‘ள’வையும் உச்சரிக்க வேண்டுமென்கிறார்.
இப்படி உடல் உறுப்புகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் மெல்லப் பொருந்தியும் அழுத்தமாக அழுந்தியும் பிறக்கும் எழுத்தொலிகள்தான் செவிக்கு இனிமை தரும். இல்லையேல் “நமது தமிழ் மொழியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்பதை “எடுத்துக் கொல்லுங்கள்” என்றோ; தமிழ் மொழியை என்றே உச்சரித்தால், இனிமையா காதுக்கு? இடியல்லவா விழுந்தது போலிருக்கும்!”
பனம்பாரனாரின் சொற்கேட்டு, பாவாணர்கள் ‘பலார்’ என வெடிச் சிரிப்பு சிரிக்கிறார்கள். ஒரு பாவலர் குறுக்கிட்டு; “அய்யன்மீர் — எல்லா மொழியறிஞர்களும் இது போல் இலக்கணம் வகுத்துள்ளனரா அல்லவா; அதிலும் சிறப்பாக வடமொழிப் புலவர் வகுத்துள்ளதைத் தானே; “அகத்து எழு வளி இசை அரில் தப நாடி அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே....”
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதைக் கேட்டு சீற்றம் கொள்கிறார் பனம்பாரனார் — “தவறு அய்யனே, தவறு! அந்தணர் என்பது ஆரியரைக் குறிப்பது மல்ல; மறை என்பது அவர்களது வேதமுமல்ல! தமிழரில் அறிவுசால் நல்லோர் அந்தணர் எனப்படுவர் — தமிழர் அறநெறி நூலே மறை என்றும் போற்றுவர் — எனவே அறிவு நூல்கள், அறிஞர் தந்த இலக்கிய இலக்கணம், இவற்றுக்கு யாருக்கோ பெருமை சேர்க்காதீர்! தமிழுக்குத் தமிழர்க்கு உரிய சிறப்பை, நமக்கு நாமே மறப்பதும், மறைப்பவர்க்குத் துணை நிற்பதும் தீதினும் தீது பெருந்தீது!”
என்றவாறு விடைபெற்றுப் புறப்பட்டார் பனம்பாரனார் — பின்னர் அந்த மண்டபம் அமைதி சூழ்ந்து காணப்பட்டது. “உந்தி முதலா முந்து வளித் தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலையிப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லுங் காலை பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல திறப்படத் தெரியும் காட்சியான....”
(எழுத்ததிகாரம் — பிறப்பியல் — நூற்பா : 1)
