உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 07 · 9 / 102

சித்திரை நிலவு அவள்! நெற்றிக்கண் படைத்தவனாயினும் அவன் நித்திரையைக் கலைத்திட கனவில் வந்து ஆடக்கூடிய கட்டழகி! மொட்டவிழ்ந்த பருவமும்; மொட்டவிழா உருவமும் கொண்டவள்! கொட்டிக் கொண்டிருக்கும் அருவியின் அருகில் நிற்கிறாள். அவள் விழிகளோ அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் அந்த ஆணழகனின் உருண்டு திரண்ட மேனியையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவன், அவள் அங்கு வந்து நிற்பது அறியாமல் அருவி நீரையே ஆடையாகக் கொண்டு நீராடும் காட்சி, அவளின் வெட்கத்துக்கு விடை கொடுத்து விட்ட காம உணர்வுக்குத் தூபம் போடுகிறது.

நல்ல உடை நனைந்து விடுமே என்ற கவலை, கடுகளவுமின்றி, அவன் மீது பாய்ந்தாள். அருவிக்குள் இருந்த அவன் நடுங்கிப் போனான். “நாயகனே! நடுக்கமேன்?” என்றபடி அந்தத் துடுக்குக்காரி; ஆனாலும் தோகைமயில், அவனை இழுத்து உதட்டில் ஒரு முத்திரை பதித்து விட்டாள். அவளைத் தள்ளிவிட்டு, தொலைவில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு; “என்ன காரியம் செய்தாய்?”

என்று கடுமொழி கூறினான். சுடுமொழிகள் வாரி இறைத்தான். “நான் என்ன செய்து விட்டேன்? ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததைத்தான் ஆராய்ச்சி செய்து பார்த்தேன்!” “அடியே, பெண்ணே! நான் உனக்கு ஆசிரியர்தான்; ஆனால் பில்கணியத்தில் வருகிற உதாரனும் நானல்ல! நீயும் அந்தக் கவிஞனிடம் பாடம் கற்ற அமுதவல்லியும் அல்ல!”

“அத்தான்! நம் பெயர்கள் மாறியிருக்கலாம். அமுதவல்லி இடத்தில் நானும், உதாரனிடத்தில் நீங்களும் இருப்பதை இங்கே யார் தடுத்தார்கள்?” இப்படிச் சொல்லிக் கொண்டே, அவனைப் போய் மீண்டும் தழுவிக் கொண்டாள். “சே சே! விடு, என்னை! ஆசிரியரிடம் ஒரு மாணவி நடந்து கொள்ளும் முறையா இது? நாணமில்லையா உனக்கு?”

“நிறைய இருக்கிறது - அதைவிடக் காமன் விடுத்த பாணம் நெருப்பாய்த் தகிக்கிறதே!” “விலகிச் செல்! விதண்டாவாதம் செய்யாதே!” “நீங்கள்தானே சொன்னீர்கள்?” “என்ன சொன்னேன்? சொல்லித்தொலை!” “எல்லாச் சொற்களிலும் உயிர் ஈற்று முன், உயிர் வரும்போது உடம்படுமெய் தோன்றும் என்றும், அதன் வடிவை நீக்கார் என்றும், ஏற்றுக் கொள்வர் என்றும் சொல்லி விட்டு ‘மா + இலை = மாவிலை’ என்பது உடம்படுமெய் ஆயிற்று என்றீர்களே; நம்மைப் பாருங்கள், அந்த உடம்படுமெய்தானே இது!

உயிர் ஈற்று முன் உயிர் கலக்கும்போது நம் மெய் இரண்டும் கலத்தல் இலக்கணப்படி ஏற்கத் தக்கதுதானே! உருபு கொளல் வரையார் என்றுதானே கற்பித்தீர்கள்?” “ஓ! முட்டாள் பெண்ணே; கற்ற பாடத்தை சோதித்துப் பார்க்கிறாயா? நான் எழுத்துக்குச் சொன்னால்; நீ என் கழுத்துக்கு.....!”

“அஞ்சாதீர் அன்பே! ஒழுங்காகத்தானே கற்றுக் கொண்டிருக்கிறேன்! நான் ஒப்பித்த தொல்காப்பிய இலக்கணம் தவறா?” “தவறு ஏதுமில்லை; அந்த இலக்கணத்தைச் செயல்படுத்த இதுவா இடம்?” “அடடா! நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா? மன்னித்துக் கொள்ளுங்கள் - மண்டபம் பக்கத்தில்தான் இருக்கிறது” அவனை இழுக்கிறாள்; அவனும் அவளுடன் போகிறான் மண்டபம் நோக்கி! > “எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே > உடம்படு மெய்யின் உருபு கொளல் வரையார்” (எழுத்ததிகாரம் - புணரியல் - நூற்பா : 38) உடம்படுமெய் = இரு உயிர் (எழுத்து) களைச் சேர்க்கும் மெய் (எழுத்து) வரையார் = நீக்கமாட்டார்.