உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 08 · 10 / 102

இலக்கணம் பற்றி மட்டுமே கூறுவது என் நோக்கமில்லை என்பதாலும், இலக்கணத்தில் முக்கியமான சிலவற்றை நினைவுவைத்துக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சியின் தொடர்பாகச் சாரியைக்கு வழங்கப்பட்டுள்ள விளக்கம், ஒரு காட்சியாகச் சித்தரிக்கப்படுகிறது. அகராதியில் ‘அங்கதம்’ என்ற சொல்லுக்கு, மார்பு - தோளணி - பழிச்சொல் - பாம்பு - பொய் - யானையின் உணவு எனப் பல பொருள் உண்டு. அஃதே போல் ‘மானம்’ என்பதற்கு, தன் மதிப்பு, அகங்காரம், வலி, குற்றம், நேசம், அன்பு, கற்பு எனப் பொருள்கள் கொள்ளலாம்.

சாரியை எனும் இலக்கணச் சொல்லுக்குச் சார்ந்து வரும் இடைச் சொல் என்பது மட்டுமன்றி ‘புறக்கூத்துக்குரிய’ ஆடல் எனும் பொருளும் உண்டு. ஆடூஉ எனிலோ ஆண் - மகடூஉ எனிலோ பெண். இவற்றை நினைவில் பதித்துக் கொண்டு இம்மலரை, நுகர்வது சிறப்பாக இருக்கும்; சிரிப்பாகவும் இருக்கும். இதோ நல்லதம்பியும், நல்லதங்கை என்ற அவனது உடன் பிறப்பும், தங்களின் தாய் தந்தையரிடம் விடை பெற்றுக் கொண்டு புறக்கூத்து நடத்துவதற்காகப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

செல்லும் வழியில் இருவரையும் சந்தித்த செந்தமிழ்ப் பண்டிதர் - சற்றுச் சிந்தனைத் தடுமாற்றமுள்ள செல்லய்யாப் புலவர்; அவர்களை அனுப்பி வைத்து விட்டு, அந்த உடன்பிறப்புக்களின் பெற்றோரிடம் வந்து எங்கே செல்கின்றனர் உமது பிள்ளைகள் எனக் கேட்கிறார்; ஏற்கனவே அந்தப் பிள்ளைகளிடம் கேட்டறிந்த பிறகும்! “இன்றைக்கு ஆடிப்பெருக்கல்லவா! ஆறுகள் எல்லாம் கரை புரண்டு ஓடி ஆட்சியின் மாட்சியை அறிவிக்குமே; ஆடவரும் பெண்டிரும் ஆனந்தக் கூத்தாடிடும் அந்தத் திருவிழாவில் எம் மகனும் மகளும் புறக்கூத்து ஆடி அவர்களை மகிழ்விக்கவும், தாங்களும் மகிழ்ந்திடவும் சென்றிருக்கிறார்கள்” என விளக்கம் கிடைக்கிறது பண்டிதருக்கு!

“அண்ணனும் தங்கையும் புறக்கூத்தில் என்ன பாத்திரங்கள் ஏற்று ஆடப் போகிறார்கள்?” “நல்லதம்பி, கோவலனாகவும்; அவன் தங்கை, மாதவியாகவும் பாத்திரமேற்றுக் கானல்வரி ஆடப் போகிறார்கள்” “அண்ணனும் தங்கையுமா? கோவலன் மாதவியாகவா?” என்று வியப்புடன் வினவிய செல்லய்யாப் புலவர், சற்று யோசித்துவிட்டு; “மானமில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அதுகேட்டு ஆத்திரத்தால் துடித்துப்போன அந்தப் பெற்றோர், “பண்டிதரே! யாரைப் பார்த்து மானமில்லையென்று தடித்த வார்த்தை, இழிந்த வார்த்தை கூறினீர்?” எனக் கூச்சலிட்டவாறு தந்தை அரிவாளையும், தாயானவள் ஒரு தடியையும் தூக்கிக் கொண்டனர். பதறிப் போன பண்டிதர்; “ஏன் இவ்வளவு பதைப்பு? நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது?”

என நடுங்கிக் கொண்டே கேட்டார். “பிறகென்ன? எம் பிள்ளைகளைப் பற்றி விசாரித்துவிட்டு, மானமில்லை என்கிறீரே! பொறுத்துக் கொள்ள முடியுமா?” “இப்போதுதான் நான் கல்விக்கூடத்தில் பிள்ளைகளுக்குத் தொல்காப்பியம் சொல்லிக் கொடுத்துவிட்டு வருகிறேன். அந்த நினைவு அப்படியே மனத்தில் படிந்திருந்ததால் ஏதோ தடுமாறி விட்டேன். நான் சொன்னதும் ஒன்றும் தவறில்லை” “என்ன? தவறில்லையா?”

“சற்றுப் பொறுத்திடுக! முதலில் என் விளக்கத்தைக் கேளுங்கள். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் சாரியை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. ‘ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் இன்னிடை வரினும் மானமில்லை’ என்பது அந்த நூற்பா. சாரியை என்றால் புறக்கூத்து என்ற பொருள் மட்டுமல்ல; சார்ந்து வரும் இடைச்சொல் என்றும் பொருள் உண்டு. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் வரும் நூற்பா என்ன சொல்கிறதென்றால், ஆணையும் பெண்ணையும் குறிக்கின்ற ஆடூஉ, மகடூஉ, எனும் இரு பெயர்களில் வல்லெழுத்தேயன்றி ‘இன்’ சாரியையும் வரலாம் - அதனால் குற்றமில்லை என்கிறது.

ஆடூஉவின் தங்கை, மகடூஉவின் அண்ணன் - மாதவியாகவும், கோவலனாகவும் நடிப்பது குற்றமில்லை என்று சொல்ல வந்த நான், வல்லெழுத்தேயன்றி ‘இன்’ சாரியை, இடை வரினும் மானமில்லை என்ற வார்த்தையை நூற்பாவில் உள்ளதை அப்படியே மாணவர்க்குச் சொன்னதை, அதே நினைவில் இங்குச் சொல்லிவிட்டேன். மானம் என்றால் குற்றம் - மானமில்லையென்றால் குற்றமில்லை என்றுதான் பொருள்!”

அந்தப் பெற்றோர், பெருமூச்சு விட்டவாறு பண்டிதரைப் பார்த்து; “அய்யா புலவரே! அண்ணனும் தங்கையும் அப்படி நடிப்பதால் அது ஒரு கலைதானே; அதில் ஒன்றும் குற்றமில்லை என்று சொல்வதற்கு நல்ல வார்த்தை இருக்கும்போது ‘மானமில்லை’ என்று சொல்லி எங்கள் மண்டையை ஏன் குழப்பினீர்கள்?”

“அதுதான் சொல்லுகிறேனே; ஆடூஉ, மகடூஉ, இரு பெயர்க்கிடையே வல்லெழுத்து மிகுதலன்றி ‘இன்’ சாரியையும் வரலாம்; அதனால் ஒன்றும் மானமில்லை; அதாவது குற்றமில்லையென்று மாணவர்க்குக் கற்பித்த நினைவிலேயே இருந்துவிட்டேன். அதனால் விளைந்த தவறு. வருகிறேன்” குழைந்து பேசிக்கொண்டே கும்பிட்டவாறு விடைபெற்றார் பண்டிதர்! காப்பியச் செய்யுள் ஒன்றை அவர்கட்கும் கவனப்படுத்தினோம் என்ற மனநிறைவுடன்! > “ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் > இன்னிடை வரினும் மானமில்லை” (எழுத்ததிகாரம் - உயிர் மயங்கியல் - நூற்பா : 69)