உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

தொல்காப்பியப் பூங்கா

பகுதி 09 · 11 / 102

பத்தாண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றங்கரையில் காலூன்றிக் கம்பீரமாக நடக்க முடியாமல், கடுமையான வெயில் கொளுத்தும் வேளையில் கம்பூன்றி நடந்து கொண்டிருந்தாள் ஒரு கிழவி. அங்கே மரத்தடியில் அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கையில் கொஞ்சம் பழங்களுடன் கிழவியின் அருகில் வந்து, அவளது எலும்பும் தோலுமான கையைப் பற்றிக் கொண்டு “பாட்டி! இந்தக் கொளுத்தும் வெயிலில் எங்கே போகிறாய்?

உன்னால் நடக்கக் கூட முடியவில்லை. இந்தா பழம் சாப்பிடு” என்று கையிலிருந்த நாவற் பழங்களைக் கொடுத்தான். அதைப் பாட்டி உற்றுப் பார்த்துவிட்டு இளைஞனை நோக்கிச் “சுட்ட பழமா? சுடாத பழமா?” என்றாள் குறும்பாக! “கிழங்களுக்குக் கிண்டல் கேலி மட்டும் போகாதே! நான் ஒன்றும் முருகனில்லை! முதலில் பழத்தைச் சாப்பிடு!”

கிழவி, பழங்களைச் சுவைத்துக் கொண்டே, அவனைத் தோளில் தொட்டு, “ஏன் தம்பி, இந்த வயதில் படிக்காமல், இப்படி மாடு மேய்க்கிறாயே; ஏன்?” என்றாள். “படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விடுமுறை நாட்களில் மட்டும் இந்த வேலை” “வீட்டில் யாருமில்லையா?”

“அப்பாவுக்குக் காசநோய் - நான் பள்ளிக்குப் போகும் நாளில் அம்மாதான், மாடு மேய்த்து, பராமரித்து, பால் கறந்து வீட்டைப் பாதுகாக்கிறாங்க!” “அய்யோ பாவம்! இந்தக் கஷ்டத்திலே என்ன படிக்க முடியும் நீ? என்ன படிச்சு என்ன வேலைக்குப் போகப் போறே?”

“தமிழ் படிக்கிறேன். தமிழ் ஆசிரியராக வேலை பார்க்க ஆசை!” “அப்படியா? நல்லது! உன் தமிழ் ஆசான் இலக்கியங்கள் சொல்லித் தருகிறாரா?” “ஓ! திருக்குறள் - தொல்காப்பியம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்!” “அப்படியானால் எனக்கும் கொஞ்சம் இலக்கியம் தெரியும் - நானும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியைத்தான் - உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்கிறாயா?”

“கேள் பாட்டி; பதில் சொல்கிறேன்!” “என்னை அழைத்துக் கொண்டு போகச் சோழன் வரும் என்கிறேன். இப்போது சோழன் உயர்திணையா? அஃறிணையா?” “பாட்டி நீ சொல்லும் சோழன், உன் மகனாகவோ, பேரனாகவோ இருந்தால் உயர்திணை! அல்லது அந்தச் சோழன் பேருந்தாக இருந்தால் அஃறிணை!”

“தம்பி; எப்படிச் சொல்கிறாய்? இலக்கணம் என்ன?” “பாட்டி; இதோ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் கூறுகிறது; ‘அஃறிணை விரவும் பெயர் இயல்பு மாருளவே’ அதாவது இரு திணைக்கும் உரிய பெயரை பொதுப் பெயர் என்பார். அதனால் நான் சொல்லுவது பொருந்துகிறது. ஆண்பால் உயர்திணையான சோழன், அஃறிணையாவது இப்போது இயல்பு” “அன்புப் பேரனே! அன்று ஒளவையிடம் ஆற்றலைக் காட்டியதாகக் கூறப்படும் அந்த முருகனைக் காட்டிலும் நீ சிறந்தவன்.

அவன் தமிழாற்றலைப் பழத்தில் காட்டினான். நீயோ பழந்தமிழ் இலக்கணத்தில் காட்டியுள்ளாய்! வாழ்க! வாழ்க!” வாழ்த்திக் கொண்டிருக்கும்போதே சோழன் வந்துவிட்டான்; இல்லை, இல்லை, வந்து விட்டது. இளைஞன் உச்சியில் முத்தமீந்து கிழவி, பேருந்தில் அவன் உதவியுடன் ஏறிக் கொண்டாள். > “அஃறிணை விரவும் பெயர் > இயல்பு மாருளவே” (எழுத்ததிகாரம் - தொகை மரபு - நூற்பா : 13)