தொல்காப்பியப் பூங்கா
பகுதி 10 · 12 / 102
இலக்கியத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் தொல்காப்பியப் பூங்காவுக்குள் நுழைந்துள்ளேன். ஆங்குள்ள மலர்களை நுகருகிறேன் எனினும்; இயற்கையாகவே சில எடுத்துக்காட்டுகள் கட்சி அரசியலாக இல்லாமல் பொது அரசியலாக அமைந்திடுவது ஒதுக்க முடியாததாகிவிடுகிறது. இரண்டாம் உலகப் போர் நடந்த போது அமெரிக்காவைச் சார்ந்து சில நாடுகளும், ஹிட்லரின் ஜெர்மனியைச் சார்ந்து சில நாடுகளும் போரில் ஈடுபட நேரிட்டது.
இருபுறமும் தலையாய நாடுகளாக இறுதி முடிவெடுக்கும் செல்வாக்குடன் இருந்த நாடுகளைச் சார்ந்துதான் நேசநாடுகளின் வரிசையும், அச்சு நாடுகளின் வரிசையும் அமைந்தன என்பதை கடந்த கால வரலாறு மறக்காது! மறுக்காது! இது நடந்து முடிந்த இரண்டாவது உலகப் போர்க்காலம் பற்றியது. இந்நாளில் நாடுகள் என்ற நிலையில் இல்லாவிடினும், ஒரு நாட்டில் உள்ள அரசியல் இயக்கங்கள், அந்நாட்டின் ஆளுங்கட்சிகளையோ அதிபர்களையோ தேர்வு செய்திட, அணிகள் அமைகின்ற இன்றியமையாமை ஏற்படுகிறது.
தனித்து நின்று போட்டியிடுகிற வலிமை, பேரியக்கங்களுக்கு இருப்பினும்; மேலும் வலிவுடன் இருப்பது தவறில்லை எனும் எச்சரிக்கையுடன் பல்வேறு இயக்கங்கள் கொண்ட அணிகள் உருவாகின்றன. அந்த அணிகளில் இடம் பெற்றாக வேண்டிய அவசியமும் கட்டாயமும், தமக்கெனத் தனித்தன்மையே இல்லாத, சார்ந்து மட்டுமே இருக்கக் கூடிய நிலை இயக்கங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த இயக்கங்களின் நிலைமைதான் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று எழுத்துக்களுக்கும் அமைந்துள்ளது என்பது தெளிவான உண்மையாகும்.
தமக்கென்று தனித்தன்மை இல்லாததும், சார்ந்துதான் இயங்கிட வேண்டுமென்பதுமான நிலையுடைய குற்றியலிகரம் (இ) குற்றியலுகரம் (உ) - ஆய்தம் (ஃ) எனும் மூன்று எழுத்துக்களும், தாம் சார்ந்திடும் முதல் எழுத்துக்களின் பிறப்பிடமே தம் பிறப்பிடமாகக் கொண்டு ஒத்த அளவில் தமக்குரிய இயல்பில் இயங்கும். > “சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் > தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் > தம் தம் சார்பில் பிறப்பொடு சிவணி > ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்” (எழுத்ததிகாரம் - பிறப்பியல் - நூற்பா : 19) எடுத்துக்காட்டு:- குற்றியலிகரம் :- கேண்மியா, சென்மியா, நாடு + யாது = நாடியாது, முருகு + யாது = முருகியாது.
குற்றியலுகரம் :- ஒடு, முரடு, மூழ்கு, அஃது, சுக்கு, அங்கு
