தொல்காப்பியப் பூங்கா
பகுதி 11 · 13 / 102
அரண்மனை போன்ற தோற்றமும், ஆதிசேடன்மீது அறிதுயில் கொள்வது போன்ற முகப்பு மண்டபமும் கொண்ட அந்த மடத்தின் திண்ணையில் ஒரு குட்டிச் சாமியார் அமர்ந்து வெளியிலிருந்து யாரோ வருவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல; அருகில் உள்ள பூசை அறையின் கதவு, உள்ளிருந்து திறக்கப்படும் தாழ்ப்பாள் ஒலி கேட்கிறதா என்று காதைத் தீட்டிக் கொண்டும், கண் இமை கொட்டிக் கொண்டும் கவனித்திடவும் தவற வில்லை.
கதவு திறக்கப்படவில்லை. ஆனால் அவர் எதிர்பார்த்துக் கணக்கிட்டிருந்த நேரத்திற்கு முன்பே, ஆதீனகர்த்தருக்கு இலக்கியப் பாடம் கற்பிக்கும் ஆசான், நெற்றியில் பட்டை நாமத்துடனும், கையில் புத்தக அடுக்குடனும் குட்டிச்சாமியின் அருகில் வந்தவாறு, “என்ன சின்னச்சாமி; நலந்தானே?”
என்றார். “அய்யா, ஆசான்! நான் இந்த மடத்தின் இளையவர்! என்னை என்னவோ; தீக்குளித்துச் செத்தானே கீழப்பழுவூர் சின்னச்சாமி; அவனை அழைப்பது போல் அழைக்கிறீரே?” “மன்னிக்கவும்; அவன் சிங்கத் தமிழனாச்சே!” “நான் இங்கே காவல் இருப்பதால் அசிங்கத் தமிழனா?”
“அதிருக்கட்டும்; இரவுக்கிளி வந்திருப்பார்களே; பறந்து போய் விட்டார்களா?” “ஓய், ஆசான்! இதென்ன பயம் கொஞ்சம்கூட இல்லாமல் கேட்கிறீர்?” “இதற்கென்ன பயம்? அரியைப் பூசிக்கும் மடாதிபதிகள் அயர்ந்து போய்த் துயில் கொள்கிறார்களா? அல்லது தொடர்ந்து தியானமா? என்று கேட்கிறேன்” “அதற்காக இலக்கணத்தை மீறிக் கேள்வி எழுப்புவதா?”
“துறவிகள் சிலர், துறவு இலக்கணத்தையே மறந்தும் துறந்தும் எவ்வளவோ காலமாகிறதே! ஆமாம்; சின்னசாமி! நான் எந்த இலக்கணத்தை மீறிவிட்டதாகக் கூறுகிறீர்?” “இரவுக்கிளி போய் விட்டார்களா? என்று பன்மையிலே கேட்கிறீர்! ஒரு மடாதிபதிதான் உள்ளே இருக்கிறார்; மடாதிபதிகள் என்று பன்மையில் உரைக்கிறீர்! உமது கூற்றுப்படி அறைக்குள்ளே எத்தனை மடாதிபதிகள்? எத்தனை கிளிகள்? ஒரு மடாதிபதியும் பல கிளிகளுமா? அல்லது ஒரே கிளியும் பல மடாதிபதிகளுமா?”
“சின்னச்சாமி; குழப்பாதீர்! நான் இலக்கணப்படிதான் கேட்டுள்ளேன். ஒருவரையும் ஒருத்தியையும் சுட்டிச் சொல்லும் பன்மைச் சொல்லும், ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும், உலக வழக்கில் உயர்த்திச் சொல்லும் சொல்லாம். இலக்கண வழக்கல்லவாம் என்று, தொல்காப்பியர் ‘பால்வழுவமைதி’ என இலக்கணம் கூறியிருக்கிறார்” “அப்படியா,” என்று குட்டிச்சாமியார் வாயை அகலமாகத் திறக்கவும், அறையின் கதவு மெல்லத் திறக்கவும் சரியாக இருந்தது.
பஞ்சணையிலிருந்து விடுபட்ட பஞ்சவர்ணக்கிளி, நடக்க முடியாமல் நடந்து, மடத்தின் பின்புற வழியாக வெளியேறியது.” அப்போதும் ஆசான், குட்டிச்சாமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு - அந்த நூற்பாவினைச் சொல்லித்தான் முடித்தார். > “ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் > ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் > வழக்கினாகிய உயர்சொல் கிளவி > இலக்கண மருங்கில் சொல்லாறு அல்ல” (சொல்லதிகாரம் - கிளவியாக்கம் - நூற்பா : 27) கிளவி :- சொல், மொழி.
